மகிழ்ச்சியின் உச்சத்தையும், வருத்தத்தையும் தொட்டுவிட்டேன் – சபாநாயகர் தனபால்

ekuruvi-aiya8-X3

Dhanapalசட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது சபாநாயகர் தனபால் உருக்கமாக பேசியதாவது:-

நான் 2-வது முறையாக சபாநாயகராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறேன். இந்தப் பதவியில் நான் நடுநிலை தவறாது தராசு முள்போல் எந்தப்பக்கமும் சாயாமல் செயல்பட்டேன். நடுநிலை என்பதை தாரக மந்திரமாக கொண்டு இருப்பதாக மறைந்த முதல்- அமைச்சர் அம்மா என்னைப் பாராட்டி பேசும் போது குறிப்பிட்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் சமமாக பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பதோடு நடுநிலை தவறாது பணியாற்றுவதாக கூறினார்.

அம்மாவை மகிழ்ச்சி அடையச் செய்த அந்த நாள், எனக்கு இந்த பதவியின் உச்சத்தை தொட்ட நாள் ஆகும். நான் 6-வது முறையாக சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு அமைச்சர், துணை சபாநாயகர், சபாநாயகர் என அனைத்து பதவிகளிலும் திறம்பட பணியாற்றிய அனுபவம் உங்களுக்கு உண்டு என்றும் அம்மா என்னைப் பற்றி பேசும்போது குறிப்பிட்டார்.

இந்தப் பதவி உங்களுக்கு புதிதல்ல, இந்தப் பணியை செவ்வனே ஆற்றுவீர்கள் என்றார். அம்மா குறிப்பிட்ட அந்த தருணம், இந்தப் பதவியில் நான் உச்சத்தை தொட்ட தருணம் ஆகும்.

24-1-2017 அன்று அம்மா மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் வாசித்த போது எனக்கு இந்தப் பதவியில் கிடைத்த வருத்தப்படக் கூடிய தருணமாகும். இந்த துரதிர்ஷ்ட உரையை வாசிக்கும் போது வேதனைப்பட்டேன், துன்பப்பட்டேன், என் வாழ்நாளில் கிடைத்த துர்பாக்கிய தினமாக கருதுகிறேன். அது எனக்கு வருத்தத்தின் உச்சத்தை தொட்ட தருணம் ஆகும்.

அதேபோல் கடந்த 18-2-17 அன்று நடைபெற்ற (நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகளை) நிகழ்வுகளை நான் மீண்டும் நினைத்துக்கூட பார்க்க விரும்பவில்லை. அதுபற்றி பேசினாலே உடைந்து விடுவேன். இந்த தருணம் வருத்தத்தின் உச்சத்தை தொட்ட தருணம். இந்தப் பதவியிலே மகிழ்ச்சியான உச்சத்தையும், வருத்தத்தின் மொத்தத்தையும் தொட்டுவிட்டேன்.

இனி அனுபவிக்க மீதம் எதுவும் இல்லை. இந்தப் பதவியில் தாமரை இலை தண்ணீர் போல் பற்றற்று செயல்படுகிறேன். இந்தப் பேரவை என்ன தீர்மானித்தாலும் என்னை பாதிக்காது. பேரவை எவ்வாறு தீர்மானித்தாலும் அது மகிழ்ச்சியோ, வருத்தமோ ஏற்றத்தாழ்வோ இல்லை. இவ்வாறு சபாநாயகர் தனபால் பேசினார்.

Share This Post

Post Comment