ஜெயலலிதாவின் சொத்துக்காக அரசியலுக்கு வரவில்லை – தீபா

ekuruvi-aiya8-X3

Deepa1111ஜெயலலிதாவின் சொத்துக்காக அரசியலுக்கு வரவில்லை, அவர் பயன்படுத்திய ஒரே ஒரு பேனா மட்டும் கொடுங்கள் எனக்கு அதுபோதும் என்று தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.

தீபா இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதா மரணம் பற்றி அவர் குடும்பத்தினர் யாரும் ஆட்சேபம் சொல்லவில்லை என்று ஐகோர்ட்டு கூறியுள்ளதே?

பதில்:- எனது சகோதரர் தீபக் 20 நாட்கள் உடன் இருந்ததாக தெரிவித்துள்ளார். எனவே அம்மா மரணம் தொடர்பாக வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.

கே:- ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று பரவலாக பேசப்படுகிறதே?

ப:- இது மக்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனது சுற்றுப்பயணத்தின் போது மக்களிடம் பல்வேறு கருத்துக்களை கேட்க உள்ளேன். அதன் பின்னரே இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

கே:- உங்களின் சொந்த அத்தை என்ற முறையில் அவரது சொத்துக்களை நீங்கள் எதிர்பார்க்கவில்லையா?

ப:- அதுபோன்ற எதிர்பார்ப்புகள் எதுவும் என்னிடம் இல்லை. அவர் வாங்கிய பெயரை வாங்க வேண்டும். அவர் பயன்படுத்திய ஒரே ஒரு பேனா மட்டும் கொடுங்கள் எனக்கு அதுபோதும்.

கே:- எந்தவித அனுபவமும் இல்லாமல் அரசியலுக்கு வருகிறீர்களே? உங்களால் வெற்றி பெற முடியுமா?

ப:- அரசியலுக்கு வருவதற்கு அனுபவம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. படித்தவர்கள், புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லாரும் சொல்கிறார்கள். எனவே எந்த அடிப்படையில் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை.

கே:- பா.ஜ.க. சார்பில் உங்களிடம் யாராவது தொடர்பில் இருக்கிறார்களா? பேசினார்களா?

ப:- என்னிடம் யாரும் அதுபோன்று எந்த தொடர்பிலும் இல்லை.

கே:- அ.தி.மு.க.வில் உள்ள சிலர் உங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறதே?

ப:- அதுபோன்று யாரும் என்னிடம் பேசவில்லை. அ.தி.மு.க. தொண்டர்கள் தான் என் வீட்டு முன்பு தினமும் கூடுகிறார்கள்.

கே:- எங்கள் குடும்பம்தான் ஜெயலலிதாவை காத்து வந்ததாக திவாகரன் கூறியுள்ளாரே?

ப:- எந்த அடிப்படையில் இதுபோன்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதை என்னால் ஏற்க இயலாது.

கே:- அ.தி.மு.க. தலைமையை விரும்பாத தொண்டர்களே உங்களைத் தேடி வருகிறார்கள். ஆனால் அதுபற்றி நீங்கள் வெளிப்படையாக பேசாதது ஏன்?

ப:- என்னைத் தேடி வந்துள்ள மக்களிடம் இன்னும் நிறைய கருத்துக்களை கேட்க வேண்டியதுள்ளது. இப்போதுதானே நாம் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.

கே:- அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதை ஏற்கிறீர்களா?

ப:- நான் எனது வழியில் பயணிக்க விரும்புகிறேன். மக்கள் ஆதரவுடன் அந்த பயணம் இருக்கும்.

கே:- முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

ப:- அவரது செயல்பாடுகள் நன்றாகவே உள்ளன.

கே:- உங்களது பதில்களில் தெளிவான, உறுதியான கருத்துக்கள் இல்லையே? உங்கள் அத்தையை போன்று சொல்ல வந்ததை தெளிவாக உறுதியாக சொல்ல வேண்டியதுதானே?

ப:- அவரைப் போலவே இருக்கிறேன் என்பதற்காக அவரது செயல்பாடுகள் போல என்னிடமும் எதிர்பார்க்க முடியாது. இப்போதுதானே வந்துள்ளேன்.

கே:- தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக நடிகர் ரஜினி கூறி உள்ளாரே?

ப:- நான் ஏற்கனவே கூறியது போல அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது அவரவர் விருப்பம்.

இவ்வாறு தீபா கூறினார். தீபா பேட்டியின் போது சசிகலா பற்றி நிருபர்கள் சரமாரியாக பல கேள்விகள் கேட்டனர். ஆனால் சசிகலா பற்றி நேரடியாகவோ, சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலோ எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை.

தீபா வசிக்கும் வீடு முன்பு இன்று அதிகமான அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் தீபாவை வாழ்த்தி கோ‌ஷம் போட்டபடி இருந்தனர்.

அ.தி.மு.க.வினர் வருகை காரணமாக அந்த தெருவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Share This Post

Post Comment