சிவகரனை விசாரணைக்காக கொழும்பு வருமாறு புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு!

ekuruvi-aiya8-X3

sivakaran45எதிர்வரும் 2ஆம் நாள் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரனை கொழும்பு இரண்டாம் மாடிக்கு விசாரணைக்கு முன்னிலையாகுமாறு புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்திலமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பில் அத்துமீறி விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. அதன் பணி நிறைவடைந்து வரும் நிலையில் எதிர்வரும் 29ஆம் நாள் மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று திறந்துவைக்கவுள்ளார்.

இந்நிலையில் தனியார் காணியை அடாத்தாகப் பிடித்து விகாரை அமைப்பதா? நல்லிணக்கம் எனக் கேள்வி எழுப்பி மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

இந்நிலையிலேயே, புலனாய்வுத்துறையினரால் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சிவகரனால் மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதப்பட்ட கடிதம்:

“1991ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பகுதியை இராணுவம் அபகரித்த போது தமது வழிபாட்டுக்கு என அமைக்கப்பட்டது தான் இந்த பௌத்த விகாரை.

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் இராணுவம் அங்கிருந்து பிரதான படை முகாமை அகற்றிய போதும் இந்த பௌத்த விகாரையையும், பௌத்த மதகுருவையும் பாதுகாப்பதற்கு சிறிய இராணுவ முகாம் அமைத்து பாதுகாத்து வருகிறது.

வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் சூழலில் இச் செயற்பாடு ஏற்புடையதா? 18.01.2012இல் பௌத்த மத அலுவல்கள் திணைக்களம் இந்த விகாரையின் பதிவை இரத்து செய்ததுடன் கட்டுமானப்பணிகளையும் நிறுத்தியது.

ஆனால் உங்கள் நல்லாட்சியில் தான் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இது சட்ட விரோத சனநாயக மீறல் அல்லவா? இதுவா நல்லாட்சி?

தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் கலாசார மாற்றத்தை ஏற்படுத்தி போலியான புனைவு பெயர்களின் மூலம் பௌத்த மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னகர்த்துகிறீர்களா?

சட்ட விரோதமாக தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட சட்ட விரோதமான விகாரை திறப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகிய நீங்கள் உங்களை தெரிவு செய்த மக்களின் விருப்புக்கு மாறாக நீங்கள் விழாவிற்கு வருவது தார்மீக அடிப்படையில் நியாயம் தானா?

எமது நியாய பூர்வமான வேண்டுகையை புறக்கணித்து குறித்த திறப்பு விழா நடைபெற்றால் ஜனநாயக ரீதியில் கறுப்பு கொடியேந்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதையும் தங்களிற்கு வினயமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment