சித்திரவதை, ஆட்கடத்தல் குறித்து ஐ.நா வில் சிறிலங்கா மீது கடும் விசாரணை!

Facebook Cover V02

UN-Logo-660x330தொடரும் சித்திரவதைகள், இரகசிய சித்திரவதை முகாம்கள், ஆட்கடத்தல்கள், தடுப்புக்காவலின் போது பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நா வில் இன்றையதினம் கடுமையான விசாரணைக்கு சிறிலங்கா அரசு முகம்கொடுத்துள்ளது

ஐ.நா வின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் 59 வது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. இதில் இன்றும், நாளையும் சிறிலங்கா குறித்த விசாரணைகளும், விவாதங்களும் இடம்பெறுகின்றன.

சிறிலங்கா மீது ஐ.நாவும், ஏனைய உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மேற்கொண்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 11 விசேட உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறது.

ஐ.நா வின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் உபதலைவர் பெலீஸ் கியர் அம்மையார் திருகோணமலை கடற்படைமுகாமில் அமைந்திருந்த இரகசிய சித்தரவதை முகாமுக்கு இந்த வருட முற்பகுதியில் விஜயம்செய்த ஐ.நா செயற்குழு மனித எலும்புகளை அங்கு கண்டெடுத்துள்ளதாகவும், இவ்வாறான சித்திரவதை முகாம்கள், அதனை நடாத்திய படையதிகாரிகள், பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக சிறிலங்கா இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா மீது கேள்விகளைத் தொடுத்தார்.

குற்றவாளிக்கூண்டில் சந்தேக நபர்களை விசாரணை செய்வது போன்ற பாணியில் சிறிலங்கா மீது ஐ.நா வின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் உபதலைவர் பெலீஸ் கியர் அம்மையாரும், அலீசியோ புரூணியும் சரமாரியாகக் கணைகளைத் தொடுத்தனர்.

அத்துடன் சிறிலங்காவின் புதிய அரசு ஐ.நாவின் சித்திரவதை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான விசேட சாசனங்களில் கைச்சாத்திட்டிருக்கின்ற போதிலும், சிறிலங்காவில் சித்திரவதைகளும், ஆட்கடத்தல்களும், படையினராலும், பொலிசாரினாலும் இன்னமும் மேற்கொள்ளப்படுவது குறித்து அவர்கள் அங்கு அதிகம் கவனம் செலுத்தினர்.

குறிப்பாக, ஆட்சிமாற்றத்தின் பின்னரும் கூட சிறிலங்காவில் பொலிஸ் தடுப்புக்காவலின் போது சுமார் 620 ற்கும் அதிகமான சித்திரவதை இடம்பெற்றிருப்பதனை சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதனையும் அவர்கள் அங்கு எடுத்துக்கூறினர்.

அத்துடன் புதிய அரசாங்கம் சிறிலங்காவில் தற்போது இரகசியத் தடுப்பு முகாம்கள், சித்திரவதைக் கூடங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்திருக்கின்றபோதிலும், சாட்சியங்களின் அடிப்படையில் கிடைக்கப் பெறும் தகவல்களும், தரவுகளும் அதனைப் பொய்யாக்கியிருப்பதாகத் தெரிவித்த ஐ.நா வின் சித்திரவதைக்கு எதிரான அமைப்பின் அதிகாரிகள், படையினராலும், பொலிசாரினாலும் தொடரப்படும் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், ஆட்கடத்தல்கள் போன்ற நடவடிக்கைகள் நிலைமாற்று நீதிச் செயற்பாட்டிற்கு மிகவும் குந்தகம் விளைவிக்கக்கூடியன என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.

Share This Post

Post Comment