சிறையில் உணவு தராமல் கொடுமைப்படுத்திய இலங்கை அதிகாரிகள்!

Facebook Cover V02

TN-Fisherman-tearsகாரைக்கால் மாவட்டம் திருபட்டினம் பட்டினச்சேரியை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 30). இவரும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த பிச்சையாண்டி(46), முகமது கான்(48) மற்றும் ரகுமான்கான்(35) ஆகிய 4 மீனவர்களும் கடந்த மாதம் 8-ந்தேதி ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மறுநாள் அவர்கள் நாகப்பட்டினத்தை அடுத்த கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதானது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்ததாக கூறி 4 மீனவர்களையும் கைது செய்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. அதைத்தொடர்ந்து 4 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் 4பேரும் இந்திய கடலோரக் காவல் படையின் காரைக்கால் மைய துணை கமாண்டர் வீரமணி மூலம் நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஊர் திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எங்களது படகு பழுதானது.

அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், நாங்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாக அபாண்டமாக பழிசுமத்தி எங்களை கைது செய்து படகுடன் இலங்கைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். சிறையில் சரியான சாப்பாடு தரவில்லை. பலவித கொடுமைகளை அனுபவித்தோம். பின்னர் யாழ்ப்பாணம் கோர்ட்டில் எங்களை ஆஜர்படுத்தினார்கள். இந்தநிலையில் கோர்ட்டு எங்களை விடுதலை செய்தது. எங்களை விடுதலை செய்தது போன்று எங்கள் படகையும் திருப்பித்தர வேண்டும். இதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்.

Share This Post

Post Comment