தைரியம் இருந்தால் என்னை சிறையில் போடுங்கள் – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி சவால்

ekuruvi-aiya8-X3

Mamata-Banerjee-Saysமம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிற மேற்கு வங்காளத்தில், 6 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக அங்கு கடந்த 7-ந்தேதி பிரசாரம் செய்தார். அப்போது அவர் மம்தா பானர்ஜியை சாடினார். மாநிலங்களின் வளர்ச்சிக்காக நடத்தப்படுகிற கூட்டங்களில் அவர் பங்கேற்பதில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், “திரிணாமுல் காங்கிரஸ் என்றாலே தீவிரவாதம், சாவு, ஊழல்” என்று தாக்கினார்.

இந்த நிலையில், அங்கு முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மம்தா பானர்ஜி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதில் அளிக்கும் விதத்தில் ஆவேசமாக பேசினார்.

அவர், “பிரதமர் மோடி ஒவ்வொன்றிலும் அன்றும், இன்றும் பொய் சொல்லி வருகிறார். தைரியம் இருந்தால் அவர் என்னை சிறையில் போடட்டும், பார்க்கலாம். சிறையில் போட்டாலும், நான் மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவேன்” என கூறினார்.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக தாக்கினார்.

“காங்கிரஸ் கட்சிக்கு தன் பலத்தில் போட்டியிடுவதற்கு வலு இல்லை. எனவேதான் அந்த கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் கை கோர்த்திருக்கிறது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது 34 ஆண்டு கால ஆட்சியின்போது தனது பல்வேறு தவறான செயல்பாடுகளால் மக்களுக்கு அறிமுகம் ஆகி இருக்கிறது. 2 கட்சிகளுக்கும் வெட்கம் கிடையாது. அவர்கள் எதையும் செய்யப்போவதில்லை. அவர்களை தூக்கி எறியுங்கள்” என மம்தா பானர்ஜி தாக்கினார்.

மேற்கு வங்காளத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசு செய்துள்ள வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்ட மம்தா பானர்ஜி, தனது அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்து மீண்டும் ஆட்சியில் அமர்த்துமாறு கேட்டுக்கொண்டார்.

Share This Post

Post Comment