‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் பெண்ணுக்கு ஆபரேஷன் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

Facebook Cover V02
doctor-operating-in-torchபீகாரின் சாகாராஷாவில் உள்ள சர்தார் மருத்துவமனையில் மின்சார தட்டுப்பாடு காரணமாக ‘டார்ச் லைட்’ உதவியுடன் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது, இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் ஆபரேஷன் எப்போது நடத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் மயக்க நிலையில் உள்ளார், அவருடைய வலது கையை பிடித்துக்கொண்டு மருத்துவர் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார். அவர் அருகே நிற்கும் பெண்ணின் உறவினர்கள் டார்ச் லைட் உதவியுடனும், செல்போன் டார்ச் உதவியுடனும் வெளிச்சம் ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது, இதனையடுத்து டாக்டர்கள் மின்சாரம் இல்லையென்றாலும் சிகிச்சையை தொடங்கி உள்ளனர் என உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இவ்விவகாரம் தொடர்பாக பீகார் மாநில சுகாதாரத்துறை மந்திரி மங்கள் பாண்டே முழுமையான அறிக்கையை கோரி உள்ளார். “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆடைமாற்றும் அறையில் கையில் தையல் மட்டுமே போடப்பட்டது. அங்கு ஆபரேஷன் ஒன்றும் நடக்கவில்லை. இதுதொடர்பாக முழுமையான அறிக்கையை மருத்துவமனையிடம் கேட்டு உள்ளேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது,” என பாண்டே கூறிஉள்ளார்.
மருத்துவமனையில் மின்சாரம் இல்லாத நிலையில் மின்சாரம் வழங்கும் விதமாக செயல்படும் ஜெனரேட்டர்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் மருத்துவமனையில் நடைபெற்று வெளி உலகத்திற்கு தெரியவரும் முதல் சம்பவம் இதுகிடையாது. ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் டாக்டர் குழந்தைக்கு டார்ச் லைட் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வீடியோ வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சம்பவங்களில் மருத்துவ அலட்சியம் தொடர்பாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்பது வருத்தமளிக்கிறது.

Share This Post

Post Comment