சேர்ந்து பிரிதலும், பிரிந்து பின் சேர்தலும்!

ekuruvi-aiya8-X3

ரமணன் சந்திரசேகரமூர்த்தி
ரமணன் சந்திரசேகரமூர்த்தி

முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னரான 9 வது மாவீரர் தினம் இந்த ஆண்டும் தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் தனது அரசியல் நலன்களை பேணிப்பாதுகாப்பதற்கும் தமது அரசாங்கதின் நலன்களுக்கு முண்டு கொடுக்கும் தமிழ் அரசியல் தரப்பினை தொடர்ந்தும் பலம் மிக்கதாக பேணுவதற்கும் மாவீரர் தினத்தை இந்த வருடமும் சரிவர பயன்படுத்தும்.

மாவீரர் தினத்தில் நினைவுச் சுடரேற்றி மாவீரர்களை நினைவு கூர்வதற்கு அனுமதியளித்த மைத்திரியை  போற்றியபடி அடுத்த ஒரு வருடத்திற்குமான மென்வலு அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடரும்.

இதை தாண்டி நடைபெறும் அரசியல் குறித்த தெளிவான புரிதல்கள் இன்றி மக்கள் கூட்டமும் நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களுக்கு தயாராகிவிடும்.

தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் முன்னெடுக்கப்பட்டு வரும் சில நகர்வுகள் தமிழர்களின் தேசிய நலன்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பலரும் தமது ஆதங்கங்கங்களை ஆங்காகங்கே பதிவு செய்து வருகின்றனர்.

தாயகத்தில் தமிழர்களின் அரசியல் அடையாளமாக கருதப்பட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றான அரசியல் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ramanan-nov
துமிழ தேசியக் கூட்டமைப்பிற்குள் தமிழரசுக் கட்சியின் பிரதான வகிபாகம் குறித்து ஆட்செபணை கொண்டுள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் ஏற்கனவே கூட்டமைப்பில் இருந்த வெளியேறிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கூட்டமைப்பில் இருந்தவாறே உள்ளே வெளியே என ஆட்டம் காட்டி வரும் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் கொண்ட ஒரு புதிய அரசியல் கூட்டணி அடுத்த தேர்தலுக்கிடையில் உருவாகி விடும் என்று பரவலாகப் பேசிப்படுகின்றது.

இந்த அணிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை என்ற அரசியல் சாரா மக்கள் இயக்கமே காணமல் போயுள்ள நிலையில் இவர்கள் கொண்டு வரும் அரசியல் கூட்டணி எதனை நோக்கி செல்லும் என்றும் அது எவ்வாறு வெல்லும் என்பதும் கேள்விக்குரியதே.

துரதிஸ்டவசமாக கூட்டமைப்போடு உறுவு கொண்டாடும் உலகத் தமிழர் பேரவையும் அதன் அங்கத்துவ அமைப்பாக விளங்கும் கனேடியத் தமிழர் பேரவையும் கூட்டமைப்பை நேர்வழிப்படுத்துவதற்கு தமக்கு கிடைத்துள்ள வாய்ப்பினை சரிவர பயன்படுத்த தவறியிருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாதது ஆனால் கூட்டமைப்பின் மீதான அதிருப்தி அலையினால் கூட்டமைப்பிற்கு மாற்றான அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கி வெற்றிபெறச் செய்து விடலாம் என்பது சாத்தியப்பாடற்றதொன்றாகவே அமையும்.

எனவே தான் தமிழ் அரசியல் சக்திகள் பிழவுண்டு போவதை காட்டிலும் ஒன்று பட்டு ஒரே குரலில் தமிழர்களின் தீர்வினை கோர வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்கின்றனர்.ramanabb

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உடைத்து பலவீனப்படுத்துவதன் மூலமாக தேசிய கட்சிகளுடன் இணைந்துள்ள தமிழ் கட்சிகளும் அதன் வேட்பாளர்களும் வெற்றி பெறும் வாய்புகளே அதகரிக்கும். இதற்கு கடந்த கால தேர்தல் முடிவுகளே சான்றாக அமைகின்றன.

மாறாக அதிகார ஆசைகளையும் கட்சி பேதங்களையும் மறந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை நேர்வழிப்படுத்தும் முயற்சிகளை சிவில் சமூகமும் தமிழர் தேசிய நலனில் அக்கறை கொண்ட தரப்புகளும் மேற்கொள்ள வேண்டும். கூட்டமைப்பின் தலைமையையும் தலைமைக்கு நெருக்கமான தரப்பும் தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூற  வேண்டிய கடப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களுடனான திறந்த உரையாடல்களை நடத்துவதற்கும் மக்கள் சந்திப்புகளிற்கு அழைத்து மக்களின் எதிர்பாரப்புகளை தெளிவு படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதனை விடுத்து கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு அரசியல் சக்தியினை உருவாக்க முயற்சிப்பது பாரதூரமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். சரி தவறுகளுக்கு அப்பால் 2009 பேரழிவுகளின் பின்னர் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கான அரசியல தலைமையினை வழங்கி வரும் ஒரு அரசியல் கட்டமைப்பை பலமிழக்கச் செய்வதன் மூலமாக நாம் எதனையும் அடைந்து விட முடியாது.

அதே சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் போக்கினை கடிவாளமிட்டு சரியான திசைக்கு கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் சமூகத்திற்கு உண்டு.

துரதிஸ்டவசமாக கூட்டமைப்போடு உறுவு கொண்டாடும் உலகத் தமிழர் பேரவையும் அதன் அங்கத்துவ அமைப்பாக விளங்கும் கனேடியத் தமிழர் பேரவையும் கூட்டமைப்பை நேர்வழிப்படுத்துவதற்கு தமக்கு கிடைத்துள்ள வாய்ப்பினை சரிவர பயன்படுத்த தவறியிருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதேச்சாதிகாரப் போக்கிற்கான பொறுப்பினை கூட்டமைப்பிற்கும் அதன் அரசியல் முடிவுகளுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வரும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளே பொறுப்பேற்க வேண்டும்.

அதேபோல் கூட்டமைப்பிற்குள் மாற்றுக் குரலாக இருந்து அதனை தமிழர் தேசிய நலன் நோக்கிய திசையில் செலுத்துவதற்குரிய அழுத்தங்களை கொடுத்திருக்க வேண்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றக் காரணமான மக்கள் அவையும் அதன் அங்கமான கனேடியத் தமிழர் தேசிய அவையும் கூடவே இன்றை நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலையை மறுக்க முடியாது.

2009 முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் அரசியல் சக்திகள் ஒன்று பட்டு நின்றிருந்தால் இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் தமிழர் நலன் சார் முடிவுகளை எடுக்கும் நிலை நோக்கி தள்ளப்பட்டிருக்கும்.

ஆனால் நாங்கள் எங்களுக்குள் அதிகார மோதல்களை வளர்த்துக்குக் கொண்டு மற்றவர்களை வென்று காட்டுவதாக நினைத்து தமிழர் நலன்களை புறம்தள்ளி நடந்தமையால் தான் முள்ளிவாய்காலை விடவும் பேரழிவுகளை தரும் அரசியல் தற்கொலை ஒன்றை நோக்கி தமிழனத்தை நகர்தியிருக்கின்றோம்.

மறுபுறம் புலம்பெயர் தேசத்தில் பிரிந்து நின்று அரசியல் செய்த பல அமைப்புகள் ஒன்றாகி ஒரே குரலில் இலங்கையின் படை அதிகாரிகளை கனடாவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று குரல் எழுப்பியுள்ளமை வரவேற்பிற்குரிய முயற்சியாகவே நாம் கருத வேண்டும்.

கனடாவின் வன்கூவர் நகரில் நடைபெறவுள்ள ஐநா அமைதிகாகக்கும் படையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் படை அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாட்டில் இலங்கை படை அதிகாரிகள் கலந்து கொள்ளக் கூடாது என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. அல்லது இந்த கோரிக்கையினை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கையொப்பம் இட்டுள்ளன.

இந்த கோரிக்கைகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை ஓட்டாவாவில் தமிழ் சட்ட நிறுவனமான நவா வில்சன் சட்ட நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

தாயகத்தின் அரசியல் சூழலில் சிக்கியுள்ள கூட்டமைப்பினை  தாண்டி புலம்பெயர் தமிழ் சமூகம் ஒரு தேசிய இனமாக சிந்திப்பதும் செயல்படுவதும் இன்றை காலத்தின் மிக முக்கியமான தேவையாக கருதப்படுகின்றது.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து இயங்கி வரும் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான குபேஸ் நவரட்ணம் மற்றும் வில்சன் அம்மையார் ஆகியோரின் கடும் முயற்சியின் பலனாக  இந்த தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சாத்தியமாகியிருக்கின்றது.

புலம் பெயர் தமிழ் சூழலில் பிளவு பட்டு நிற்கும் தமிழ் அமைப்புகள் பலவற்றை ஒன்றிணைத்த மிக முக்கியத்துவம் மிக்க நகர்வாக இது நோக்கப்படுகின்றது.

இந்த அமைப்புகளை ஒன்றுபடுத்தும் முயற்சியிலும் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளிலும் அவர்கள் உண்மையான அக்கறையுடன் ஈடுபட்டிருந்த போதிலும் ‘வர்த்தகக் குறியீடுகள்’ இடம்பெறும் போது அந்த முயற்சி அதன் உண்மைமான குறிக்கோளை அடைவதில் சங்கடங்களை எதிர் கொள்ள நேரிடும் என்பதையும் இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை தாண்டிய விமர்சனங்கள் சிலவற்றை எதிர் கொள்ள நேரிடும் என்பதையும் இந்த ஊடக சந்திப்பின் பின்னரான உரையாடல்களில் இருந்து நாம் அறிந்து கொள் முடிந்தது.

கனடாவில் உள்ள பிராதன தமிழ் அமைப்புகளான கனேடிய தமிழர் பேரவை , கனேடிய தமிழர் தேசிய அவை, நாடு கடந்த தமிழிழ அரசாங்கம் உட்பட பத்து அமைப்புகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுக் குழுவினை பிரதிநிதித்துவம் செய்வதாக குறித்த சட்ட நிறுவனம் அறிவித்துள்ளது.

இது மிகவும் துணிச்சலானதும் காலத்தின் தேவை கருதியதுமான ஒரு நகர்வாகவே நோக்கப்பட வேண்டும். ஒரு நாட்டின் இராஜதந்திர இறைமைக்கு சவால் விடும் சட்ட நடவடிக்கைக்கு தலைமை தாங்குவது மற்றும் பிரிந்து நிற்கும் தமிழ் அமைப்புகளை ஒன்றிணைத்து ஒரே குரலில் பேச வைப்பது என்ற நோக்கங்களை முன்னெடுத்தமை பாராட்டுதல்களுக்குரியது.

ஆனால் இதுவும் கடந்து போய்விடுமா என்ற கேள்வியினை நாம் திருவாளர் பொதுசனம் சார்பில் எழுப்பியே தீரவேண்டும்.

காரணம் இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்த இலங்கையின் அபிவிருத்தியில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் வகிபாகம் தொடர்பான சீபா மாநாட்டில் கலந்து கொண்ட கனேடிய தமிழர் பேரவையும் இந்த கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளமை சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தோடு இணங்கிப் போவதன் மூலமாகவே தமிழ் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்த முடியும் அவர்களோடு முரண்பட்டால் நாம் எதனையம் பெற முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்து அதனை நோக்கியதாகவே செயல்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்த நகர்விற்கு எவ்வாறு இணங்கியது என்பதையும் நாம் ஆராயமல் கடந்து செல்ல முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் எந்த ஒரு முயற்சியிலும் தங்களால் ஈடுபட முடியாது என பல சந்தர்பங்களில் கூறி பல முன்னெடுப்புகளில் இருந்து விலகியவர்கள் எவ்வாறு இந்த முயற்சிக்கு இணங்கினார்கள் என்பது தீவிரமாக ஆராயப்பட வேண்டியது.

இது உண்மையில் அவர்களின் கொள்கை முடிவுகளில் ஏற்பட்ட மாற்றமாக இருந்தால் நிச்சயம் அது வரவேற்பிற்குரியது.

எனினும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்ந்த போதெல்லாம் மௌனமாக இருந்த இந்த அமைப்புகள், எதுவுமே அற்ற தீர்வினை தமிழர்கள் மீது திணிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எத்தனித்த போதெல்லாம் மௌனித்திருந்தவர்கள் இப்போது எப்படி இப்போது குரல் எழுப்புகின்றார்கள் என்பதும் முக்கியமான கேள்வி.

இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீது மேற்கொண்டது இன அழிப்பா யுத்தக் குற்றமா என்பதற்கே பெரு விவாதங்களை நடத்திய வரலாற்றை தமிழர்கள் இலகுவில் மறந்திருப்பார்கள் என்று இவர்கள் எண்ணுகின்றார்களா

தமிழர்கள் மீது கடும் போரக் குற்றங்களை இழைத்த அரசாங்கத்தோடும் பாதுகாப்பு படை அதிகாரிகளோடும் கைகுலுக்கி புகைப்படம் எடுக்கும் போது வராத கரிசனை அவர்கள் இங்ககே வரப்போகின்றார்கள் எனும் போது தானா உங்களுக்கு வருகின்றது என்று எவரும் அவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள் என்று இவர்கள் நம்புகின்றார்களா?

இலங்கை அரசாங்கத்தோடு புலம்பெயர் சமூகம் தொடர்புகளை பேணுவது சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்திற்கு பாதுகாப்பைத் தேடித் தருவதாக அமைந்து விடும் என்று தலையில் அடித்துச் சொன்ன போதும் கேட்காமல் போய் கைகுலுக்கியவர்கள் இப்போது படை அதிகாரிகள் கனடாவிற்கு வருவதற்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள். இவர்களின் இந்த மன மாற்றம் குறித்து நாம் கேள்விகள் கேட்காமல் வரவேற்று கொண்டாட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள்.

மக்கள் அமைப்புகள் என்றால் தமது நிலைப்பாடுகள் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் உங்கள் நிலைப்பாடுகளை நீங்கள் காலப்போக்கில் மாற்றிக் கொண்டால் அதனையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நாங்கள் இலங்கை அரசாங்கத்தல் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று இரகசியமாக ஆதங்கப்படுவதை விடுத்து அந்த ஏமாற்றத்தை பொது வெளியில் மக்கள் முன் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.

மங்கள சமரவீர  தீர்வு தருவார் என்று நம்பினோம் அவர் எங்களை ஏமாற்றி விட்டார் என்று புலம்பித் திரிவதை விடுத்து மக்கள் முன்பாக நடந்தவற்றை வெளிப்படுத்துங்கள்.

அப்போது தான் உங்கள் மீது கொஞ்சமாவது நம்பிக்கை ஏற்படும். அதனை விடுத்து  நீங்கள் எது செய்தாலும் மக்கள் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வார்கள் என்று நீங்கள் நம்பித் திரிவது ஆரோக்கியமற்றது.

இலங்கை மீது கனடா மட்டுமல்ல ஏனைய நாடுகளும் தொடர்சியான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலமாகவே தமிழ் மக்களுக்கான நீதியும் அரசியல் தீர்வும் கிடைக்கும் என்பதே எமது நம்பிக்கை.

தாயகத்தின் அரசியல் சூழலில் சிக்கியுள்ள கூட்டமைப்பினை  தாண்டி புலம்பெயர் தமிழ் சமூகம் ஒரு தேசிய இனமாக சிந்திப்பதும் செயல்படுவதும் இன்றை காலத்தின் மிக முக்கியமான தேவையாக கருதப்படுகின்றது.

இதனை நோக்கிய பயணத்திற்கு இந்த பலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கூட்டுக் குழுவின் உருவாக்கம் வழிசெய்வதாக இருக்கட்டும்.

Share This Post

Post Comment