“செவாலியே” கமலஹாசனுக்கு சீமான் வாழ்த்து

seeman1-600-நீண்ட நெடிய பாரம்பரிய பெருமைகளைக் கொண்ட தமிழ்த்திரையுலகில் பல சாதனைகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன. அத்திரையுலக வரலாற்றின் சமகால சாதனையின் நாயகனாக கலைஞானி கமலஹாசன் திகழ்கிறார்.

தற்பொழுது பிரான்ஸ் அரசின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது உலக நாயகன் திரு.கமலஹாசன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழினத்திற்கு மிகுந்த பெருமிதத்தையும் மகிழ்வையும் அளித்துள்ளது.

‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களால் பட்டைத்தீட்டப்பட்டு, 16 வயதிலே என்ற ஆகச்சிறந்த திரைக்காவியம் மூலமாக ‘இயக்குனர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களால் தமிழ்த்திரையுலகக் கிரீடத்தின் வைரமாகப் பதிக்கப்பட்டவர் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள்.

திரைக்கலை அறிவியலின் அழகான குழந்தை. பொதுவாகத் திரைப்படங்கள் என்பவை மனித வாழ்வின் பிரதிபலிப்புகளாக நிறைவேறாத மானுடக்கனவுகளின் மீட்சியாகத் திகழ்கிறது.

அசலான மனித வாழ்க்கையைத் தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாத காவியங்களாக, செல்லுலாய்டு சிற்பங்களாகச் செதுக்கிற திரையுலகப் பிதாமகன்களில் கமலஹாசன் முதன்மையானவர்.

காதலை வெளிபடுத்தும் திரைப்படங்களில் மட்டுமல்லாது வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா, உன்னால் முடியும் தம்பி, அன்பே சிவம், மகா நதி போன்ற பல சமூக உணர்வை விதைக்கிற திரைப்படங்களின் அழுத்தமான முத்திரையை உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் பதித்து வருகிறார்.

எவ்வித அடையாளச் சிக்கல்களுக்குள்ளும் தன்னைப் பொறுத்திக்கொள்ளாது ஆவேசப்படும் இளைஞனாக, காதலில் உருகும் காதலனாக, மாற்றுத்திறனாளியாக, பெண்ணாக, குள்ள மனிதனாக, அடித்தட்டு விளிம்புநிலை மனிதனாக, அயல்நாட்டிலிருந்து திரும்பிவரும் பணக்கார வாலிபனாக, பாலக்காட்டு ஐயராக, கோயம்புத்தூர் கவுண்டராக, வில்லன் வியக்க வைக்கும் வில்லனாக, வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை மன்னனாக, பொருந்தி மிளிர்கிற திரு.கமலஹாசன் அவர்கள் ஓர் பிறவிக் கலைஞர்.

நடிப்பு என்பது ஏதோ ஒன்றை கற்பனை செய்து அல்லது நிஜத்தில் நிகழ்வதைக் கவனித்துச் சில மனிதர்களை நகலெடுத்து செய்கிற வேலையல்ல! அது தனக்குள்ளாக இருக்கிற இன்னொரு மனிதனை, இன்னொரு உலகத்தைப் பிரசவிக்கிற வித்தை. நடிகர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

ஆனால், கலைஞர்கள் பிறக்கிறார்கள் என்கிறார் முதுபெரும் திரைக்கலைஞன் மர்லன் பிராண்டோ. இந்த விதிக்கு சற்றும் குறையாமல் அசராமல் பொருந்தக்கூடியவர் நமது கமலஹாசன் அவர்கள். தமிழ்த்திரையுலகின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழ்கிற நடிகர் திலகம் நமது ஐயா சிவாஜி கணேசன் தனது கலைவாரிசாக நேசித்த உலக நாயகன் கமலஹாசன் அவர்களும் நடிகர் திலகம் பெற்ற அதே உயரிய செவாலியே விருதை பெறுவது சிறப்பிலும் சிறப்பு.

தற்போது பிரான்ஸ் அரசால் வழங்கப்பட்டிருக்கிற ‘செவாலியே’ விருது இம்மண்ணில் திரைக்கலையை நேசித்து வாழக்கூடிய அனைத்துத்தமிழர்களுக்குமானது என்று நாங்கள் எண்ணி பெருமை கொள்கிறோம்.

உலக அரங்கில் தமிழ்த்திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்துக்கிற இம்மண்ணின் கலைஞன் கமலஹாசன் அவர்களைக் கட்டித்தழுவி என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கமலஹாசன் எனும் பெருங்கலைஞன் வற்றாத நதியாகப் பல்லாண்டு காலம் நலத்துடன் வாழ்ந்து தமிழ்த்திரையுலகை செழிக்க வைக்க எனது உளமார்ந்த வாழ்த்துகள்!


Related News

 • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
 • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
 • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
 • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
 • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
 • மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு லாயக்கில்லை – எடப்பாடி பழனிசாமி
 • எங்களின் பலம் தெரியப்படுத்த வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -சரத்குமார்
 • கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்பட தாமதமாகும் -ரஜினி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *