ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிட சசிகலா வேண்டுகோள்

sasikala098தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து முதலமைச்சர் பன்னீர்செல்வம், நாளை அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக கூறியிருக்கிறார். ஆனால், போராட்டம் நடத்தும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் ஓயாது என கூறியுள்ளனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நம் தமிழினம் தனது பெருமையையும், தனித்தன்மையையும் உலகம் உணர்ந்திடச் செய்திருக்கிறது. அந்த அற்புதமான தருணத்தை நம் கண்ணின் மணிகளான மாணவர்களும், மாணவிகளும், இளம் தலைமுறையினரும் தமிழுக்கு மகுடமென சூட்டி இருக்கிறார்கள்.

“People Power!” என்று 30 ஆண்டுகளுக்கு முன் உலகம் வியந்து கொண்டாடிய பிலிப்பைன்ஸ் மக்கள் புரட்சியைப் போலவும், அதைவிட சிறந்ததென சரித்திரம் போற்றிடும் வண்ணமும், சென்னை மெரினா கடற்கரையாவும், தமிழகத்தின் மதுரை, அலங்காநல்லூர், கோவை போன்ற எண்ணற்ற இடங்களிலும், இந்திய நாடு முழுவதும், உலகெங்கும் வாழும் தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் செயற்கரிய செய்து இமயமாய், கொள்கை குன்றுகளாய் நிமிர்ந்து நிற்கும் காட்சியைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன். இளம் தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது என்று உள்ளம் நிறைய வாழ்த்துகிறேன்.

பண்பட்ட இனமான நம் தமிழ் இனம், தனது தொன்மையின் சிறப்பால், கல்வியின் மேன்மையால், தன்னலம் துறந்து மக்கள் நலன் பேணும் தாய்மை உணர்வால் எல்லோர்க்கும் வழிகாட்டும் தனித்தன்மை உடையது என்பதை ஜல்லிக்கட்டுக்கான அறப் போராட்டத்தின் மூலம் உலகம் உணரச் செய்துள்ளது.

அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வழி வந்த நான், நம் இனத்தின் உரிமைகளையும், உணர்வுகளையும் இரு கண்களாகப் போற்றுகிறேன். எனவே, அவரது அடிச்சுவட்டில் பயணிக்கும் நானும், மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும்
நேரில் சந்தித்து, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற அனுதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வலியுறுத்தச் செய்தேன்.

கழகப் பொருளாளரும், முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்தித்து இது குறித்து பேசியதோடு, என்னென்ன சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்படத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வலியுறுத்தினேன்.

தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய மாபெரும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் கண்ணியமான வகையில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற்றிருப்பது, இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து மாநிலங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் தமிழகம் திகழ்கிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். இப்போராட்டத்தில் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை முறையாக பேணிக் காத்திட்ட செயல் மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு சட்ட அங்கீகாரத்துடன் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்துகிறது. இந்த இனிய நிறைவை நாம் அடையும் வண்ணம் போராடிய கண்மணிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் ஒத்துழைத்த அனைவருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

நாம் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த, நமது கலாச்சார உரிமையான ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற உள்ள நிலையில், மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்கள் கல்வி கற்பது மற்றும் உங்களின் அன்றாடப் பணிகளை ஆற்றுவது உள்ளிட்ட பொறுப்புகளை உணர்ந்து இந்தப் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அருள்கூர்ந்து அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment