சசிகலாவின் காலில் விழுந்து பதவியை பெற்றவர் திண்டுக்கல் சீனிவாசன்: தினகரன் ஆவேசம்

dinakaran_18அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா-தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். அணிகள் இணைவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தனி அணியாக செயல்பட்டு வரும் தினகரன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை கடுமையாக சாடி வருகிறார். மதுரை மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் காட்டமாக பேசிய தினகரன் தொண்டர்களின் நலன்படி செயல்பட்டு திருந்த வேண்டும். இல்லையென்றால் திருத்தப்படுவார்கள் என்றும் தினகரன் கூறினார்.

இந்த நிலையில் சென்னை பெரிய மேடு அல்லி குளம் வளாகத்தில் உள்ள எழும்பூர் கோர்ட்டில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தினகரன் இன்று ஆஜரானார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

நான் ஏற்கனவே கூறியபடி, தலைமை கழகத்தில் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு எனக்கு எதிராகவும், பொதுச் செயலாளருக்கு எதிராகவும் தீர்மானம் போட்டிருப்பதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொண்டர்களை திசை திருப்பி கொல்லைப்புறம் வழியாக கட்சியை கைப்பற்ற சில அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்.

இதுபோன்ற செயல்களை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறுகளை திரும்ப திரும்ப செய்யக்கூடாது. சரியான வழியில் வேலை செய்ய வேண்டும். அமைச்சர்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார்கள்.

அம்மா காட்டிய வழியில் கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும். இதைத்தான் தொண்டர்களும் விரும்புகிறார்கள். அப்படி செயல்படாமல் வேறு வழியில் கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது அமைச்சர்களுக்கு ஆபத்தாகவே முடியும்.

கேள்வி:- திண்டுக்கல் சீனிவாசன் உங்களை திருடன் என்று கூறியுள்ளாரே?

பதில்:- யார் திருடன் என்பது அனைவருக்குமே தெரியும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. தற்போது அவர் வனத்துறை அமைச்சராக உள்ளார். அவர் எங்கிருந்தார்? எப்படி இருந்தார் என்பது கட்சியினருக்கு தெரியும்.

திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயதாகி விட்டது. அதனால் அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறார். மீண்டும் தேர்தல் வந்தால் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? என்கிற பயமும் அவருக்கு உள்ளது.

சசிகலாவின் காலில் விழுந்துதான் பொருளாளர் பதவியை அவர் பெற்றுள்ளார். அந்த பதவியை அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். காலில் விழுந்த படத்தை வெளியிட்டால் வயதில் பெரியவரான அவருக்கு தான் அசிங்கம். இனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சீனிவாசன் பேச வேண்டும்.

கே:- அமைச்சர் ஜெயக்குமார் உங்களை எட்டப்பன் என்று கூறி இருக்கிறாரே?

ப:- ஜெயக்குமார் அரசியலில் எப்படி இருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். சசிகலாவிடம் மன்றாடி நிதி அமைச்சர் பதவியை பெற்றவர் அவர். ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்தான் இந்த ஜெயக்குமார். அதனை யாரும் மறந்து விடவில்லை. ஜெயக்குமார் கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னை பார்த்தால் எட்டப்பன் யார் என்பது தெரியும்.

கே:- உங்களோடு இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென மனம் மாறுவதற்கு காரணம் என்ன?

ப:- ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் ஏப்ரல் 10-ந்தேதி வரை எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் என்னுடன் ஈடுபட்டுள்ளார். தொப்பி அணிந்து கொண்டு என்னுடன் வந்த அவர் அதன் பின்னர்தான் மனம் மாறியுள்ளார். இன்று எம்.எல்.ஏ.க்களை மிரட்டி வைத்துள்ளனர்.

மேலூரில் நடந்த எனது பொதுக்கூட்டத்துக்கு செல்ல விடாமல் அமைச்சர்களை தடுத்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் பலரை சென்னைக்கு வரவழைத்து நீங்கள் மனம் மாறினால், உங்கள் தொகுதிக்கு தேவையானதை செய்து தரமாட்டோம் என்றும் மிரட்டி இருக்கிறார்கள்.

முதல்வரின் இந்த மனமாற்றத்துக்கு காரணம் என்ன? என்று அவரிடமே கேளுங்கள். மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 1½ கோடி தொண்டர்களின் எண்ணமும் விருப்பமும் அதுதான்.

கட்சியை வலுப்படுத்தி அம்மா வழியில் பயணிக்க வேண்டும் என்பதே எங்களின் வேதவாக்காகும். கட்சி ஒழுங்காக இருந்தால்தான் ஆட்சி இருக்கும். ஆனால் தற்போது கட்சிக்கும், ஆட்சிக்கும் தொடர்பே இல்லாமல்தான் இருக்கிறது.

கே:- எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று கமல் கூறியுள்ளாரே?

ப:- இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் உரிய பதில் அளிக்க வேண்டும்.

கே:- ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நீங்கள் எந்த பொறுப்பிலும் இல்லை என்று கூறியுள்ளாரே?

ப:- அவர்கள் 10 பேரை வைத்துக் கொண்டு அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அணியில் நான் பதவியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே?

கே:- நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை ஆசிரியர் நீக்கப்பட்டுள்ளாரே?

ப:- நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே அவர் மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு தினகரன் கூறினார்.


Related News

 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
 • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
 • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
 • கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளை ஆலோசனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *