சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Petition-to-cancel-vote-of-confidence-in-the-assembly-to-beசட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யவேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை ஐகோர்ட்டில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து, அப்பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றார். இந்த நிலையில், சசிகலா தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி, முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்.

அதன்பிறகு, முதல்-அமைச்சராக சசிகலாவை ஆளும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். இதற்காக அந்த எம்.எல்.ஏ.க்களை பணயக்கைதிகளாக கூவத்தூர் சொகுசு விடுதியில் பிடித்து வைத்திருந்தனர். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து கூவத்தூரில் பிடித்து வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனி சாமியை தேர்வு செய்தனர். இதன்படி, எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்த தமிழக கவர்னர், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அவருக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 18-ந்தேதி தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. கூவத்தூரில் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க் கள் அங்கிருந்து சட்டசபைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டனர். ஒரு எம்.எல்.ஏ.க்கு 4 பாதுகாவலர்கள் என்ற வீதத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதேநேரம், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் வாகனங் கள், காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னம் அருகே மறிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. அங்கிருந்து சட்டசபைக்கு நடந்தே செல்லும்படி போலீசார் உத்தரவிட்டனர்.

இதனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நடந்தே சட்டசபைக்கு வர நேர்ந்தது. இதுமட்டுமல்ல, நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளில் சட்ட சபையை சுற்றி வழக்கத்துக்கு மாறாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சட்டசபைக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் இருந்து அழைத்துவரப்பட்ட சூழ்நிலையில், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால், நம்பிக்கை ஓட்டெடுப்பை மற்றொரு நாளில் நடத்தவேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்களாகிய நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.

இதை சபாநாயகர் ஏற்காததால், ஓட்டெடுப்பை ரகசியமாக நடத்தவேண்டும் என்றும் வெளிப்படையான ஓட்டெடுப்பை நடத்தக்கூடாது என்றும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

இந்த கோரிக்கையையும் சபாநாயகர் உள்நோக்கத்துடன் நிராகரித்தார். இதனால் ஏற்பட்ட அமளியில், சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மதியம் 1 மணிக்கு சபை கூடியபோது, தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கும், வெளியில் இருந்து வந்திருந்த போலீசாருக்கும் சபாநாயகர் உத்தரவிட்டார். சபையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தார்.

எங்களை பொறுத்தவரை நம்பிக்கை தீர்மானத்தின்மீது நடத்தப்படும் ஓட்டெடுப்பை ரகசிய முறையில் நடத்தவேண்டும். அப்போதுதான் உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் ஓட்டுபோடுவார்கள் என்பதால், இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். ஆனால், சபாநாயகர் அவையில் இல்லாதபோது, கூடுதல் போலீஸ் கமிஷனர் சேஷசாயி தலைமையில் போலீசார் உள்ளே புகுந்து, தி.மு.க. உறுப்பினர்களாகிய எங்களை வெளியேற்றினார்கள். அப்போது போலீசார் எங்களை ‘பூட்ஸ்’ கால்களால் எட்டி உதைத்தும், கைகளால் அடித்தும் துன்புறுத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் பலர் படுகாயமடைந்தனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் இந்த தாக்குதலில் படுகாயமடைந்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். என்னுடைய சட்டை கிழிக்கப்பட்டது.

இதேபோல, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. வும் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, ஜனநாயகத்துக்கு விரோதமாக நம்பிக்கை ஓட்டெடுப்பை சபாநாயகர் நடத்தியுள்ளர். இதில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 உறுப்பினர்களும், எதிராக 11 பேரும் ஓட்டு போட்டுள்ளதாக கூறி, எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றிப்பெற்றதாக சபாநாயகர் அறிவித்துவிட்டார். சபாநாயகரின் இந்த செயல் சட்டவிரோதமானதாகும். சட்டப்படி செல்லாதது ஆகும்.

மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றவேண்டும் என்ற உள்நோக்கத்துடன், 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை சட்டசபைக்கு அனுப்பி வைக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு சட்டசபை செயலாளர் கடந்த 18-ந்தேதி கடிதம் எழுதியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதால், ரகசிய ஓட்டெடுப்பை நடத்தவேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர் செம்மலை கோரிக்கை விடுத்தார். அப்போது அவையில் இருந்த ஒரு உறுப்பினர்கள் கூட, செம்மலையின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், வேண்டுமென்றே, கெட்ட நோக்கத்துடன், இந்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.

நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று திட்டமிட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகர் தன்னிச்சையுடன் செயல்பட்டுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது ஆகும்.

எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, அந்த ஓட்டெடுப்பு வெற்றிப்பெற்றதாக சபாநாயகர் அறிவித்த முடிவிற்கு தடை விதிக்கவேண்டும். இந்த முடிவினை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்யவேண்டும்.

நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது சட்டசபையில் நடந்த நிகழ்வுகளின் வீடியோ பதிவை தாக்கல் செய்ய சட்டசபை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், எந்தவொரு உறுப்பினர்களையும் வெளியேற்றாமல் மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பை ரகசிய ஓட்டெடுப்பு மூலம் நடத்தவும், இந்த ஓட்டெடுப்பை தமிழக கவர்னரின் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைத்து, அவர்களது மேற்பார்வையில் நடத்தவேண்டும் என்றும் உத்தரவிடவேண்டும்.

அதுவரை, தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச் சரவை, எந்த ஒரு கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி மு.க.ஸ்டாலின் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினார்கள்.


Related News

 • தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை 6 மாதத்தில் மீட்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
 • முதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது – லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்
 • கங்கை நதி தூய்மையாகும் என்கிறார் நிதின் கட்கரி
 • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
 • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
 • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
 • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
 • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *