முக்காடுகளுக்குள் மறையும் முகங்களும்…வெளில் தெரியும் வால்களும் !

Facebook Cover V02

* ரூபஹவானிக்கு எதிரான போராட்டம் அல்லது சமூக வலைத்தள புரட்சி என்பது வெறும் மாயைகளுக்கு எதிரான ஒரு குரலாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.

* இரு தனிமனிதர்கள் மீது தமது வன்மங்களை காட்டித் தீர்த்ததும் தான் நடந்தேறியிருக்கின்றது. எதிர்ப்பாளர்களினது குறுகிய சிந்தனையின் வெளிப்பாடுகள்தான் இவை

 

முழுக்க நனைந்த பிறகு முக்காடு தேவையில்லை’ என்ற ஒரு முதுமொழி உண்டு!

மழை பெய்கிறது, அதில் நனைந்து விடக் கூடாது என்பதற்காக தலையை மூடி போர்த்திக் கொண்டு சென்றால் அதில் ஒரு நியாயமுண்டு. ஆனால், மழையில் முழுவதுமாக – நனைந்து விட்ட பிறகும், மூடி முக்காடு போட்டுக் கொண்டு செல்வதில் அர்த்தமும் இல்லை, பலனும் இல்லை! இதைத்தான் – தெளிவாகச் சொல்கின்றது இந்த பழமொழி

ஆனால் இங்கே போதும் போதும் என்கிற அளவுக்கு நனைந்து விட்ட பிறகும் – சிலர் முக்காடுகளை மட்டும் கழற்றாமல் மழையில் நனைந்தபடி சென்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றி மீண்டும் ஒரு தடைவை  பேசுகின்றது இந்த கட்டுரை.

இதற்கு மிகச் சிறந்த அரசியல் உதாரணமாக கடந்த வருடத்தின் இறுதியில் தொடங்கி  இந்த வருடத்தின் ஆரம்பம் வரை நீடித்த சர்ச்சை ஒன்று சத்தமில்லாமல் அடங்கிப் போனது.

indexகனேடிய தமிழர் பேரவை வருடா வருடம் நடத்துகின்ற பொங்கல் விழாவினை (?) பதிவு செய்து ஒளிபரப்புவதற்கு இலங்கையின் தேசிய தொலைக் காட்சி நிறுவனமான ரூபவாஹினிக்கு அனுமதி வழங்கப்பட்டமையே இந்த சர்சையின் தொடக்கமாக அமைந்திருந்தது.

முதலில் இரகசிமான முறையில் கிசு கிசுக்கப்பட்ட இந்த விடயம் பின்னர் சமூக ஊடகங்களிலும் பிரதான தமிழ் ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறியது.

கனேடிய தமிழர் பேரவையின் விசுவாசத்திற்குரிய சமூகவலைத் தளப் போராளிகள் ஒரு கன்னையிலும் கனேடிய தமிழர் பேரவைக்கு எதிரான போராளிகள் மறுகன்னையிலும் நின்று சமூக வலைத் தளங்களில் கல்லெறிபட்டுக் கொண்டிருந்த காட்சி கடந்த வருடத்தின் Action Blockbuster. .

இந்த விடயத்தில் நாம் கவனிக்கத் தவறிய விடயங்களையும் சத்தமில்லாமல் கடந்து போனவற்றையும் விரிவாக ஆராய்வது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

ரூபவாஹினி என்பது வெறும் ஊடகம் என்பதாக மட்டும் அடையாளப்படுத்தப்படக் கூடிய  ஒன்றல்ல.

தமிழர்கள் மீதான இனஅழிப்பை மேற்கொண்டு வரும் ஒரு அரசாங்கத்தின் முகமாகவே ரூபவாஹினி என்ற ஊடகம் தமிழர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது.

அது அரச ஊடகம் அரசாங்கத்தின் பிரசாரங்களையும் அரச செயல்பாடுகளை நியாயப்படுத்தும் செய்திகளையும் மட்டுமே எடுத்து வரும் ஒரு ஊதுகுழல் என்பதாக மட்டுமே அது வரையறுக்கப்பட்டு வந்துள்ளது.

அரசியலுக்கு அப்பால் அது தமிழர்களின் வாழ்வியலை அது போதுமான அளவில் பேசியதாகவோ தமிழர்களின் கலை கலாசார பாரம்பரியங்களை பதிவுகளாக்கும் முயற்சிகளை கடந்த பல தசாப்தங்களாக அது உரிய வகையில் முன்னெடுத்ததாகவோ வரலாறுகள் இல்லை.

ஒரு நாட்டின் தேசிய ஊடகமாக அந்த நாட்டின் தேசிய இனம் ஒன்றின் வாழ்வியலை சரிவர பதிவு செய்யத் தவறிய ஊடகத்தை அரசியலை தவிர்த்து விட்டு ஏனைய விடயப் பரப்புகளில் நியாயப்படுத்த முற்படுவதும் ஏற்புடையதாக அமையாது.

ramananartcleஅங்கொன்றும் இங்கொன்றுமாக பல ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மரபு சார் நிகழ்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு ரூபவாஹினியை தமிழர்களுக்கான ஊடகமாக எவராலும் அடையாளப்படுத்தி விட முடியாது.

ஒரு மனிதப் பேரழிவை சந்தித்துள்ள இனம் தம் மீது மனிதப் பேரவலங்களை புரிந்தவர்கள் இலகுவில் மறந்துவிடவும் மன்னித்துவிடவும் வேண்டும் என்று வகுப்பெடுப்பவர்களால் இந்த அடிப்படைகளை புரிந்து கொள்ள முடியாது.

கனேடிய தமிழ் மக்களின் குரலாக தங்களை வெளிப்படுத்தி வரும் ஒரு அமைப்பு எவ்வாறு அந்த மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அதற்கு மதிப்பளிக்காமல் இயங்குகின்றது என்பதற்கு ரூபவாஹினிக்கு அனுமதி வழங்கியதன் மூலம் மீண்டும் ஒரு தடைவ பேரவை நிரூபித்திருக்கின்றது.

2009ம் ஆண்டிற்கு பின்னர் தனது யாப்பில் அந்த அமைப்பு கொண்டு வந்த மாற்றங்கள் தான் இன்று வரை அந்த அமைப்பின் போக்குகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர். மூடிய அமைப்பாக அதனை மாற்றி அதில் ஏற்கனவே அங்கத்துவம் பெற்று செல்வாக்குடன் இருப்பவர்களால் மட்டுமே அதன் நிர்வாகக் குழுவை நியமிக்கும் வகையிலான யாப்பு மாற்றங்களை பலரின் எதிர்புகளின் மத்தியில் அது நடத்தி முடித்திருக்கின்றது. இன்று வரை அந்த அமைப்பிற்குள் வேறு எவரும் உள்வாங்கப்பட முடியாத நிலையும் அவர்களின் எதேச்திகார போக்குகளை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கும் அந்த யாப்பு மாற்றத்தை அனுமதித்த அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும்.

புலம்பயர் தமிழர்களின் பலத்துடன் கனேடிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டை எடுத்க் கூறுவதற்காக பெரும் கனவுகளுடன் உருவாக்கப்பட்ட அமைப்பு இன்று தனியாருக்கு சொந்தமான நிறுவனம் போன்று இயங்குவதால் யாருக்கு என்ன இலாபம்.

தமிழர்களுக்கான அமைப்பு ஆனால் தமிழர்கள் அதில் இணையவோ அதன் செயல்பாடுகள் குறித்த தமது ஆதங்கங்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கவோ வாய்புகளை வழங்காமல் தனியர் நிறுவனம் போல அது செயல்படுவதற்கு காரணமான அனைவரும் தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொள்ளத் தவறிய குற்றத்தை இழைத்தவர்களே.

ரூபவாஹினியை அழைக்கும் முடிவில் தமக்கு உடன்பாடில்லை என்று சமூக வெளியில் பட்டும் படாமலும் தங்களை காப்பாற்றுவதற்கு நிலைத் தகவல்களை எழுதி அல்லது வேறு சிலரின் பதிவுகளில் பதில் எழுதி தங்களை புனிதர்களாக சித்தரித்துக் காட்ட நினைக்கும் சிலரின் மேதாவித்தனங்கள் வெறும் கோமாளிக் கூத்துக்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை.

வெளிப்படையாக இந்த நடவடிக்கையினை கண்டிப்பதற்கு திராணியற்வர்கள் தமது அத்தனை வாசல்களையும் இறுக மூடிக் கொள்வதே சிறப்பானது.

இலங்கை அரசின் நல்லிணக்கம் எப்படி  இருக்கும் என்பதற்கான உதாரணத்தை பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியின் செயல்பாட்டில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டும்

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் குரல் வளையினை்அறுக்கப் போவதான சைகையினை அந்த அதிகாரியால் காண்பிக்க முடிவதே இலங்கை அரசின் உண்மை முகம்.

இதனை பேரவை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் இனப்படுகொலை அரசை்காப்பாற்ற முற்படுவது தான் ஏன் என்று் புரியவில்லை.

தமிழ் மக்களுக்கான நீதியை காலதாமதப்படுத்துவதன் ஊடாக தமிழர்களின் குரலை சர்வதேச மட்டத்தில் நலிவடைய வைக்கும் இலங்கை அரசின் கபடத்தனத்துக்குள்ள தாங்கள் சிக்கியது போல ஏனைய தமிழர்களையும் சிக்க வைப்பதற்கு போடப்படும் திட்டங்களை தொடர்ந்து தடுக்க வேண்டும்.

வெறுமனே ரூபவாஹினியின் வருகைக்கான எதிர்பாக இந்த எதிர்ப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றது. மக்களின் எதிர்பினால் தமது முடிவினை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தமிழர் பேரவை தள்ளப்பட்டதாக நம்பவைக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் இந்த ரூபஹவானிக்கு எதிரான போராட்டம் அல்லது சமூக வலைத்தள புரட்சி என்பது வெறும் மாயைகளுக்கு எதிரான ஒரு குரலாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.

ரூபவாஹினி வருவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் யுத்தக் குற்றங்களை புரிந்த இராணுவ அதிகாரிகள் குழு ஒன்று கனடாவிற்கு வருகை தந்து ஐக்கிய நாடுகள் அமைதிப்படை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு திரும்பியிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர் கலந்து கொள்வதை அனுமதிக்க வேண்டாம் என்று ரூபவாஹினியன் வருகைக்கு அனுமதியளித்த கனேடிய தமிழர் பேரவை உட்டப பல தமிழர் அமைப்புகள் கூட்டாக கனேடிய அரசாங்கத்திடம் கோரியதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

தமிழ் மக்களின் எதிர்ப்பிற்கு மாறாக இலங்கை இராணுவ அதிகாரிகள் கனடாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கிய கனேடிய அரசாங்கத்தை நோக்கி ஏன் இந்த ரூபவாஹினிக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் குரல் எழுப்பவில்லை.

தமது அமைப்பின் நீண்டகால உறுப்பினருக்கு மார்க்கம் தோன்ஹில்லில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் வாய்பினை வழங்கத் தவறியதற்கு எதிராக பொங்கிய தமிழர் பேரவை அந்த தேர்தலில் கொன்சவேற்றிவ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாக நாடகமாடியதை யாரும் இலகுவில் மறந்திருக்க முடியாது.

தமது அமைப்பின் உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காய் அரசாங்கத்தை எதிர்க்க துணிந்த அவர்களுக்கு தமிழ் மக்கள் மீது இனஅழிப்பை நடத்திய இராணுவத்தை கனேடிய மண்ணில் அரச மரியாதைகளோடு அழைத்து வந்த அரசாங்கத்தை கண்டித்து ஒரு அறிக்கை கூட விட முடியவில்லை என்றால் அவர்களின் தமிழர் நலன் குறித்த கரிசனை எவ்வாறானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பின்னணிகளை தவிர்த்து விட்டு வெறுமனே ரூபஹவானியை பொங்கல் நிகழ்விற்கு அனுமதிப்பது தவறு என்று சிறிய வட்டத்திற்குள் நின்று குத்தி முறிவதில் எந்த ஒரு பலனும் இல்லை.

ஏற்கனவே மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்ததையும் அரசாங்கத்தோடு இணங்கி செயல்படுவதன் மூலமாகவே தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று இங்கு பாடம் நடத்தியத்தையும் மறந்து விட்டு ரூபவாஹினியை மட்டும் தூக்கிப் பிடிப்பது தான் சமூக வலைத்தளப் போராளிகளின் மிகப்பெரிய தோல்வி.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கும் நல்லிணக்க நாடகத்தின் ஓர் அங்கம் தான் ரூபவாஹினியின் வருகைக்கான ஏற்பாடு;.

அது இவர்கள் கூறுவத போல திருமண வீட்டிற்கு வந்தவர் கேட்டதால் வழங்கப்பட்ட அனுமதி என்பதெல்லாம் காதில் பூச்சுற்றும் ஏமாற்றுத் தனம்.
ஒரு நாட்டின் தேசிய ஊடகம் புலம்பெயர் தேசத்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாக ஒரு காலத்தில் இயங்கி ஒரு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் பொங்கல் நிகழ்வை பதிவு செய்வதற்கான அனுமதியை ஒரு சாதாரண தயாரிப்பாளரினால் பெற்றுக் கொள்ள முடியும் என்றால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எப்போதோ தீர்வு கிடைத்திருக்க வேண்டுமே.

இலங்கையின் தேசிய ஊடகங்களின் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகளை தெரிந்தவர்களால் கூட இந்த பூச்சுற்றலை புரிந்து கொள்ள முடியாமல் போனது தான் சோகம்.

அங்கு ஒரு தமிழ் நிகழ்சியை தயாரிப்பதற்கு எத்தனை படிநிலை அனுமதி பெற்ப்பட வேண்டும் என்பதும் தாயரிக்கப்பட்ட நிகழ்சி ஒளிபரப்ப்படுவதற்கு முன்னர் எத்தனை தரக்கட்டுபாடுகள் சுத்தீகரிப்புகள் தாண்ட வேண்டும் என்பதும் பலரும் அறிந்த விடயம்.

அவ்வாறான கட்டுப்பாடுகள் மிக்க இறுக்கம் நிறைந்த ஊடகம் கனடாவிற்கு வந்து ஒரு தமிழ் அமைப்பின் பொங்கல் விழாவை ஒளிப்பதிவு செய்வதற்கான வேண்டுகோளை ஒரு தயாரிப்பாளர் விடுக்க முடியுமா என்பதும் ஆராயப்பட வேண்டியது.

இது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட நகர்வு என்பதை தெளிவாக புரிந்து கொள்வதும் அதன் பின்னால் இருக்கும் ஆபத்தான காரணிகளை புலம் பெயர் சமூகத்திடம் எடுத்துச் சொல்வதும் மிக முக்கியமானது.

ஆனால்  புரட்சியாளர்கள் அந்த நுண் அரசியலை தவிர்த்து ரூபவாஹினி வரக் கூடாது என்ற கோசத்துடன் தமது போராட்டங்களை மட்டுப்படுத்தியதும் பேரவையின் பேச்சாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகிய இரு தனிமனிதர்கள் மீது தமது வன்மங்களை காட்டித் தீர்த்ததும் தான் நடந்தேறியிருக்கின்றது. எதிர்ப்பாளர்களினது குறுகிய சிந்தனையின் வெளிப்பாடுகள்தான் இவை

தமது எதிர்பபின் காரணமாக ரூபவாஹினியை கனடாவிற்கு வராமல் தடுத்து விட்டடோம் என்பதும் கனேடிய தமிழர் பேரவையின் பொங்கல் நிகழ்வுகளை ரூபவாஹினி பதிவு செய்யவில்லை என்பது பெரும் சாதனையாக கொண்டாடி மகிழ்வதும் அர்த்தமற்றது.

ரூபவாஹினியின் வருகை என்ற குறியீட்டின் பின்னால் உள்ள அரசியலை புரிந்து கொள்ளாமல் கடந்து செல்வதும் அதனை புரிய வைக்காமால் தாண்டிச் செல்வதும் மிக மிகத் தவாறனது.

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் புலம்பெயர் சமூகம் அதற்கான வலிமையான அழுத்தங்களை சர்வதேச நாடுகள் மூலமாகவும் ஐக்கிய நாடுகள் சபை மூலமாகவும் இலங்கை அரசாங்கத்தின் மீது முன்வைக்க வேண்டும்.

மாறாக அவர்களின் சதி வலைக்குள் தமிழ் சமூகத்தை சிக்க வைத்து அவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகள் தமிழர்களை மீண்டெழமுடியாத பாழ் குழிக்குள் தள்ளிவிடும் செயல்பாடாகவே அமையும்.

 

ரமணன் சந்திரசேகரமூர்த்தி

Share This Post

Post Comment