அரசியல் பொங்கல்

வழமை போலவே தமிழ் மரபுரிமைத் திங்கள் இந்த வருடமும் கனடாவில் ‘வெகு சிறப்பாக’ கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கின்றது.

பட்டு வேட்டியில் வந்த பிரதமர் பொங்கல் அரிசியைப் போட்டதை கைதட்டி வரவேற்று மகிழ்ந்தனர்  கனேடிய தமிழர்கள்.

உண்மையில் ஒரு நாட்டின் பிரதமர் அந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் பாரம்பரியங்களை மதித்து அதற்கு ஏற்வகையான ஆடையுடன் தமிழ் மரபுரிமை நிகழ்வில் கலந்து கொண்டது தமிழர்களுக்கு பெருமை தேடித் தரும் ஒரு விடயம் தான்.

hqdefaultஆனால் பிரதமரை அழைத்து பொங்கல் விழா கொண்டாடி பெருமை கொண்டாடிய நாம் , தமிழ் மரபு திங்கள் பெருமையை பறை சாற்றினோமா ?

பிரதமரே தமிழர்களின் பாரம்பரிய உடையில் கலந்து கொண்ட நிகழ்வில் நம்மவர்கள் எத்தனை பேர் பாரம்பரிய ஆடையுடன் கலந்து கொண்டார்கள் என்பதையும் எத்தனை பேர் தாங்கள் வரித்துக் கொண்ட மேற்கத்தேய நாகரீகத்தை களற்றிவிடாமல் கோட்டு சூட்டுடன் பிரதமருக்கு கைலாகு கொடுத்தார்கள் என்பதையும் நிகழ்வின் புகைப்படங்களை பாரத்து நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் கனடாவில் உள்ள ஆயிரத்திச் சொச்ச தமிழ் அமைப்புகளில் நூறறிச் சொச்சம் அமைப்புகள் வெவ்வேறு பெயர்களில் மரபுரிமை தின நிகழ்வுகளை நடத்தி தங்கள் தமிழ் தாகத்தை தீர்த்துக் கொள்ளும்.
ஓன்றிரண்டு அமைப்புகைள தவிர்த்து ஏனைய பெரும்பாலான அமைப்புகளின் நிகழ்வுகளில் தமிழ் மரபுரிமைக்கான முக்கியத்துவம் மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு அரசியல் நலன்களே முன்னிலைப்படுத்தப்படுவதை கவலையுடன் அவதானிக்க முடிகின்றது.

வருடா வருடம் இந்த அரசியல் பொங்கல் விழாக்கள் அதிகரித்துச் செல்வது கூடுதல் கவலை.

இந்த வருடம்  ஒன்ராறியோவின் மாகாண சபைக்கான தேர்தலும் அடுத்த வருடம் கனேடிய பாராளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற இருப்பது அரசியல் பொங்கல்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கூட்டி நிற்கின்றது.

எமது விழாக்களுக்கு அரசியல்வாதிகளை அழைப்பது தவறென்பதல்ல வாதம் ஆனால் தமிழ் மரபுரிமைத் திங்கள் எதற்கானது என்பதை தெளிவு படுத்துவதற்கு நிகழ்வில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பது தான் பெரும் சோகம்.

புலம்பெயர்ந்த சமூகம் தனது இனத்தின் அடையாள இருப்பை தக்கவைப்பதற்கும் அடுத்த தலைமுறை தமிழ் மீதும் தமிழ் பாரம்பரியங்கள் மீதும் மரியாதை கொண்டு அதனை பின்பற்றுவதற்கும் ஏதுவான நிகழ்வுகளும் செயல்பாடுகளையும் தமிழ் மரபுத்திங்களில் நாங்கள் முன்னெடுக்க தவறுகின்றோம்.

எமது பாரமபரியங்களை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகளையும் எமது வரலாற்றை எடுத்துச் சொல்லும் படைப்புகளையும் மாற்றின சமூகததினரோடும் நிகழ்விற்கு வரும் அரசியல் தலைவர்களோடும் பகிரந்து கொள்ளாமல் நிகழ்வின் பெரும்பாலான நேரத்தை அரசியல்வாதிகளுக்கு ஒதுக்கிக் கொடுத்து விட்டு சில நடனங்களையும் பாடல்களையும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு நெருக்கமானவர்களை கொண்டு மேடையேற்றி விழாவை ‘சிறப்பாக’ நடத்தி முடிக்கின்றோம்.

அதில் பெரும் சோகம் தமிழ் மரபுரிமை நிகழ்வுகள் வருகை தரும் சிறப்பு விருந்தினர்களை திருப்திப் படுத்துவதற்காக முழுமையாக ஆங்கிலத்தில் நடத்தி முடிக்கப்டுவது தான்.

தங்கள் மொழி மீதும் பாராம்பரியம் மீதும் நம்பிக்கை கொள்ளாதவர்கள் எல்லாம் ஏன் மரபுரிமை மாதத்தை கொண்டாட முனைகின்றார்கள் என்ற கேள்வியே தவிர்க்க முடியாமல் எழுகின்றது.

எனினும் சில தமிழ் மரபுரிமை நிகழ்வுகளில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தெளிவுபடுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கான நீதியை நோக்கிய பெரும் பயணத்திற்கான ஏற்பாடாகவும் சிறந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமானது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கான குரலாக கனேடிய மண்ணிலும் சர்வதேச அரங்கிலும் இயங்கிக் கொண்டிருப்பவர்களை அழைத்து அவர்கள் ஊடாக தமிழ் மக்களின் அவலங்களையும் எமக்கான நீதி கிடைப்பதற்கான அவசியத்தையும் வெளிப்படுத்துவது ஆரோக்கியமான ஒரு விடயம் இதனை கனேடிய தலைநகரில் தமிழர்கள் சிறப்பாக கையாண்டிருந்தனர்.

இது போன்ற ஆரோக்கியமான விடயங்களுக்கு அரசியல் தலைவர்களை அழைத்து அவர்களுக்கு எமது மக்களின் பாரம்பரியங்களையும் நாம் வாழ்ந்த வாழ்வையும் இப்போது நாம் எதிர் கொள்ளும் சவால்களையும் எடுத்துக் கூறுவதை விடுத்து ஏட்டிக்கு போட்டியாக நிகழ்வுகளை நடத்துவதும் அங்கு வரும் அரசியல் தலைவர்களோடு படம் எடுத்து பிரபல்யம் தேட முற்படுவதும் கண்டனத்திற்குரியது.

உங்கள் அரசியல் அறுவடைக்காக தமிழ் மரபுரிமை நிகழ்வுகளை பயன்படுத்தாதீர்கள் நண்பர்களே.

உண்மையில் தமிழ் மொழி மீதும் அதன் பாராம்பரியங்கள் தொன்மைகள் மீதும் உங்களுக்கு அளவிட முடியாத ஈடுபாடும் மதிப்பும் இருந்தால் அதனை வெளிப்படுத்தும் விதமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுங்கள்.

எது அடுத்த தலைமுறையிடம் தமிழ் மொழியினையும் அதன் பாராம்பரியங்களையும் எமது மரபுகளையும் எடுத்துச் செல்வதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

உங்களது போட்டியாளர் மரபுரிமைத் திங்கள் கொண்டாடுகின்றார் அதனால் நாங்களும் கொண்டாடியே தீரவேண்டும் என்பதற்காக தமிழ் மரபுரிமை நிகழ்வுகளை கொண்டாடி உங்கள் சுயநல அரசியல் வியாபாரத்தை முன்னெடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

குடும்பத்தை முன்னிலைப்படுத்தி தமிழ் மரபுரிமைத் திங்களை சிலர் கொண்டாடுவதாகவும் தமது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தமது குடும்ப உறுப்பினர்கள் தலைமையில் புதிய அமைப்புகளை உருவாக்குவதாகவும் தமது உறவினர்களை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பதாகவும் ஒரு சாரார் கூக்குரலிடுகின்றனர். ஆனால் அவ்வாறு கூக்குரல் இடுபவர்கள் தமது எதிர்கால அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல்வாதிகளை அழைத்து தமது பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்கின்றனர். இது போன்ற முரண்களை யாரிடம் போய் கூறுவது.

இந்த மரபுரிமை நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்காக சில அமைப்புகள் சேர்ந்து ஒரு பொது அமைப்பை உருவாக்கியதாகவும் அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அந்த அமைப்பு என்னவாகியது என்பது பற்றியோ அல்லது அதற்கு என்னவானது என்பது பற்றியோ விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழ் மீது தீராக்காதல் கொண்டு தமிழ் மரபுரிமைத் திங்களை உங்கள் தலைமையில் கொண்டாட வேண்டும் என்று அடம் பிடிக்குமு; அடங்காத் தமிழர்களே
நாளைய எம் தலைவர்களே நீங்கள் கொண்டாடமல் விடுவதால் தமிழ் நாளைக்கே தற்கொலை செய்துக் கொள்ளாது என்பதை நீங்கள் நினiவில் கொள்வது நல்லது.

தமிழ் மரபுரிமை நிகழ்வுகளை அதன் பிரதான நோக்கங்களை அடைவதற்கான மூலமாக பயன்படுத்த முன்வாருங்கள் என்பதே இந்த கட்டுரை மூலம் நாம்; இறைஞ்சிக் கேட்டுக் கொள்ளும் விடயம்.

உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்காக கனேடிய மண்ணில் எமக்கு கிடைத்துள்ள இந்த உன்னதமான வாய்ப்பினை உதாசீனம் செய்து விடாதீர்கள். மறுபுறம் தமிழ் மரபுரிமைத் திங்களின் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியில் தனித்துவத்தோடு சிறப்பான முறையில் பயணிப்பவர்களால் முன்னெடுக்கப்டும் தமிழ் மரபுரிமை நிகழ்வுகளை இது போன்ற போலி; நிகழ்வுகள் வீரியமிளக்கச் செய்துவிடும் என்பதால் தமிழ் மரபுரிமை நிகழ்வுகளை தவிர்த்து விட்டு நீங்கள் வேறு ஏதாவது விழாக்களை கொண்டாடி மகிழழுங்கள். பாவம் தமிழ் அதனை விட்டு விடுங்கள்.

தமிழ் இனி மெல்லச் சாகாது … உங்கள் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகி சாவதை விட தமிழ் உடனடியாகவே தற்கொலை செய்யும் அபாயம் இருப்தையும் உணருங்கள்.

28/jan/2018

ரமணன் சந்திரசேகரமூர்த்தி

 


Related News

 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • ஜஸ்ரின் ரூடோ தடுமாறுகின்றாரா? ரதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *