நக்சலைட்டுகளின் தாக்குதல் கோழைத்தனமான செயல் ராஜ்நாத் சிங் ஆவேசம்

Thermo-Care-Heating

Rajnath_singhசத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலபதர் என்னும் இடத்தில் நேற்று முன்தினம் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையினர் மீது நக்சலைட்டுகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தை சேர்ந்த அழகுபாண்டி, செந்தில்குமார், திருமுருகன், பத்மநாபன் உள்பட 25 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சத்தீஷ்கார் கவர்னர் பல்ராம்ஜி தாஸ் தாண்டன், முதல்–மந்திரி ராமன் சிங், உள்துறை ராஜாங்க மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிர் ஆகியோர் கலந்துகொண்டு படை வீரர்கள் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு, ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். விரக்தி காரணமாகத்தான் இந்த தாக்குதலை நக்சலைட்டுகள் நடத்தி உள்ளனர். கிராமவாசிகளை கேடயமாக பயன்படுத்தி, அவர்கள் நடத்திய இந்த தாக்குதல் ரத்தத்தை உறையச் செய்வதாக உள்ளது. இதை நாங்கள் ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறோம்.

தேவைப்பட்டால், இடது சாரி பயங்கரவாதத்தை கையாளும் உத்திகளை மறு ஆய்வு செய்வோம். இதுபற்றி டெல்லியில் மே 8–ந்தேதி நடைபெறும் உயர் மட்ட குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இங்கே துணிச்சலுடன் போராடிய படை வீரர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீண் போகாது. பழங்குடியினர், ஏழை மக்களின் வளர்ச்சிக்கு நக்சலைட்டுகள் மிகப்பெரிய எதிரிகளாக திகழ்கின்றனர். அவர்களின் தீயநோக்கம் ஒரு போதும் வெற்றி பெறாது என்று அவர் கூறினார்.

ideal-image

Share This Post

Post Comment