“ராஜீவ் கொலை” அரசியல்

“விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப்பெரிய தவறு ராஜீவ் காந்தியைக் கொன்றதுதான்”  என பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக எரிக்சொல்கெய்ம் தெரிவித்துள்ளார்.
செய்தவை எல்லாமே சரி என்று ஒரு அமைப்போ ஒரு நாடோ ஒரு தலைவரோ உலகத்தில் இருந்ததும் கிடையாது. இருப்பது சாத்தியமும் இல்லை. இதில் விடுதலைப்புலிகள் மட்டும் விதிவிலக்காக இருந்துவிடமுடியாது.
ஆனால் ராஜீவ் கொலை விடுதலைப்புலிகள் செய்த தவறு என்று தொடர்ந்து பேசுவது ஒன்றும் தற்செயலாக நடப்பது அல்ல. ஒரு வேளை விடுதலைப்புலிகளே ஏற்றுக்கொண்டாலும் கூட உண்மையில் ராஜீவ் கொலை விடுதலைப்புலிகள் செய்த தவறு என்ற அடிப்படையில் பார்ப்பது பொருத்தமானது அல்ல.
காரணம்
bdvbdvbdv1919 ஏப்ரல் 13 அன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் (Amritsar) நகரில் உள்ள யாலியன்வாலா பாக் (Jallianwala Bagh)   என்ற மைதானத்தில் கூட்டம் நடத்திய பொதுசனம்மீது பிரித்தானியாவின் பஞ்சாப் கவர்னர் டயரின் (General R.E.H. Dyer) ஆணைப்படி இராணுவ பிரிகேடியர் ஜெனரல் ரெஜினோல்ட் டயர் (Brigadier-General Reginald Dyer) தலைமையில் ஐம்பதிற்கு மேற்பட்ட பிரித்தானிய இராணுவத்தினர் நடத்திய கொலைவெறித்தாக்குதலில் அப்பாவி இந்தியப் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயப்படுத்தப்படுகிறார்கள்.
அங்கே காயப்பட்டு துடித்துக்கொண்டிருப்பவர்ளுக்கு தண்ணீர் வழங்குவதோடு தன்னால் முடிந்த உதவி வழங்கிக்கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். அவன் பெயர் உத்தம் சிங்.
இரத்தமும் சதையுமாக துடித்து துடித்து இறக்கும் தன் உறவுகளைக் கண்முன் பார்த்தவனால் தாங்கவும் முடியவில்லை தூங்கவும் முடியவில்லை. அந்த படுகொலைக்கு காரணமான பிரித்தானிய தளபதிகளை பழிவாங்க வேண்டுமென சபதம் எடுக்கின்றான்.
இருபத்தியொரு வருடங்களின் பின் 1940 மார்ச் 13 அன்று பிரித்தானியாவின் கக்ஸ்ரன் கோலில் (Caxton Hall) வைத்து தன் உறவுகளை படுகொலை செய்த பிரித்தானிய தளபதிகளை கொலைசெய்து பழி தீர்த்துக்கொள்கிறான்.
உடனே அவனைக் கைது செய்த பிரித்தானியா அரசு யூலை 31 ஆம் திகதி தூக்கிலிடுகிறது.
1971 ஆம் ஆண்டு இந்திரா காந்தி உத்தம் சிங்கின் சாம்பலை இந்தியாவிற்கு எடுத்து வருகிறார். இரண்டுநாட்கள் துக்க தினம் அனுபவித்து இந்திய தேசத்தின் மாவீரன் என புகழாரம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்படுகிறார் உத்தம் சிங்.
காலம் மாறுகிறது.
இந்திரா காந்தி இறந்துபோகிறார். இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறார். இலங்கையில் அமைதியை நிலைநாட்டவென இந்திய அமைதிப்படையை அனுப்புகிறார்.
அங்கே அமைதியை நிலைநாட்டும் வேலையை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லா வேலைகளிலும் ஈடுபடுகிறது இந்திய அமைதிகாக்கும் படை.
அமைதிகாக்க வந்த காந்திய தேசத்தின் படைகளிடம் அமைதியான முறையில் தமது அதிருப்தியை முன்வைக்க முடிவெடுக்கிறார்கள் ஈழ மக்கள். அதன் முதல் கட்டமாக திலீபன் என்ற ஆயுதம் தாங்கிய  போராளி அகிம்சைப்போராட்டத்தில் குதிக்க முடிவெடுக்கிறார்.
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
ஆகிய ஐந்து அடிப்படை விடயங்களை நிறைவேற்றித்தருமாறு நீர் ஆகாரம் இன்றி உண்ணாவிரதம் இருக்கின்றார்.
அவரின் குறைந்த பட்ச கோரிக்கையைக்கூட நிறைவேற்றாமல் திலீபனை தன் அகங்காரத்தால் சாகடிக்கிறார் ராஜீவ்காந்தி. தண்ணீர் கூட அருந்தாமல் பசித்திருந்து பசித்திருந்து துடித்து துடித்து இறந்து போகிறான் ஒரு ஆயுதப் போராளி.
ஒப்புக்காவது ஒரு வாக்குறுதியை வழங்கி அவன் உயிரைக்காக்க முன்வராமல் காந்தி மகானின் தேசத்திற்கு உலக அளவில் அபகீர்த்தியை ஏற்படுத்திவிடுகிறார் ராஜீவ் காந்தி.
அகிம்சையை தோற்கடித்து ஆயுதம் ஏந்தும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறார் ராஜீவ் காந்தி. தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப்படைகளுக்கும் போர்மூளுகிறது.
ஒரு புறம் விடுதலைப் புலிகளோடு போர் மறுபுறம் அப்பாவிப் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் பாடசாலை மாணவர்கள் என வயது பால் வேறுபாடுபாராது பொதுமக்கள் மீது ஈவிரக்கமற்ற மனிதவேட்டை ஆடுகிறார்கள்.
மூவாயிரத்தி ஐநூறிற்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இதில் பெற்ற பிள்ளைகளிற்கு முன்னாலேயே தாயை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்களும் அடக்கம். எட்டாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். புதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயப்படுத்ப்படுகிறார்கள். நான்காயிரத்திறக்கும் மேற்பட்டவர்கள் காணமல் போகச்செய்யப்படுகிறார்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள். ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் செல்ல வைக்கப்படுகிறார்கள்.
இந்த பேரவலத்திற்கு காரணமான ராஜீவ்காந்தி அவர்கள் 1991 மே 21 அன்று சிறி பெரும்புதூரில் வைத்துக் கொல்லப்படுகிறார். கொலையை திட்டமிட்டவர் விடுதலைப்புலிகளின் பொட்டு அம்மான் என அறிவித்து அவரிற்கான தண்டனையும் அறிவிக்கப்படுகிறது.
ஒரு வேளை விடுதலைப்புலிகள் அதைச் செய்திருக்காவிட்டாலும் யாலியன்வாலா பாக்கில் சபதமெடுத்த உத்தம் சிங்போல் யாராவது ஒரு பாதிக்கப்பட்ட ஈழத்தமிழன் நிச்சயம் ராஜீவ் காந்தியை கொலை செய்திருப்பான். அதுதான் யாதார்த்தம்.
இதை உளவியலாளரும் புரட்சியாளருமான Frantz Omar Fanon அவர்கள் மொழியின் சொல்வதானால் “தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அடக்குமுறைகள் எம்மை பணியச் செய்வதற்கு பதிலாக தாங்கிக் கொள்ள முடியாத முரண்பாட்டிற்குள் அழுத்துகின்றன. இதற்குத்தான் நாம் பதில் சொல்கிறோம். அவமானமும் பசியும் வலியும் என்னவென்று எங்களுக்கு ஆக்கிரமிப்பாளன் கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை இன்று நாம் வெளிப்படுத்துகிறோம். இப்போது எங்களை பயங்கரவாதிகள் என்கிறீர்கள். எங்களுக்கு வன்முறையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறீர்கள். ஆமாம், உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அது எதிரியினுடையது. விரைவில் நாம் அதை எமதாக்கிக் கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாம் வன்முறையின் குழந்தைகள்” எனச் சொல்லலாம்.
உண்மையில் ஈழத்தீவில் அகிம்சையை சாகடித்து, வன்முறையை திணித்து, வன்முறையைத் தூண்டியதோடு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றமும் இனக்கொலையும் புரிந்த ராஜீவ் காந்தி அவர்களும், தம் அமெரிக்க இந்திய பனிப்போரின் பலி ஆடுகளாக ஈழத்து இளைஞர்கள் கையில் ஆயுதக்கலாச்சாரத்தை ஊக்குவித்து தம் உறவுகளைக் கொலைசெய்தவர்களை இன்னுமொரு நாட்டுக்குச் சென்று பழிவாங்கிய உத்தம் சிங்கை மாவீரன் என்று கொண்டாடி வழிகாட்டிய இந்திரா காந்தி அம்மையாரும்தான் ராஜீவ் காந்தி கொலைக்கு காரணம்.
ராஜீவ் காந்தி கொலையை விடுதலைப்புலிகளின் தவறுகளின் பட்டியலில் வைத்து பேசுவதே தவறானது. உள்நோக்கங்கள் நிறைந்தது.
விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசிய அரசியல் இந்தியாவைச் சார்ந்திருப்பதால் தமிழ்த்தலமைகளும் செயற்பாட்டு இயக்கங்களும் அதற்குள் செல்ல விரும்பாமல் கடந்து செல்ல விரும்புகின்றன.
ஆனால் ராஜீவ் காந்தி ஒரு மனிதகுலத்திற்கு எதிரான குற்றவாளி, இனக்கொலையாளி என்பதையும், காந்திய தேசத்திற்கும் சிந்தனைக்கும் எதிரானவர் என்பதையும் இந்தியமக்கள் உட்பட உலகம் முழுமைக்கும் கொண்டுசேர்க்கப்படாதவரை தமிழ்த்தேசிய அரசியல் “ராஜீவ் கொலை மிகப்பெரிய தவறு” என்ற ஒற்றைச்சொல்லில் மின்சாரக்கம்பி வெளவால்போல் அவ்வப்போது ஊசலாடிக்கொண்டுதான் இருக்கும்.
எரிக்சொல்கைம் போன்றவர்கள் வரலாற்றை வசதியாக மறைத்து விடுதலைப்புலிகள் செய்த மிகப்பெரிய தவறு ராஜீவ் காந்தியைக் கொன்றதுதான் என்ற விம்பத்தை மட்டும் பெரிதாகக் காட்டி தமிழ்த்தேசிய அரசியலை உள்ளும் வெளியும் தமது தேவைக்கேற்ப கையாண்டுகொண்டுதான் இருப்பார்கள்.
(குறிப்பு: விடுதலைப் புலிகள் தாம் ராஜீவைக் கொன்றோம் என வெளிப்படையாக எங்கும் ஒப்புக்கொள்ளவில்லை. அத்துடன் பாலசிங்கம் சொன்னார் என எரிக்சொல்கெய்ம் தான் சொல்கிறார். ராஜீவ் கொலையில் மிகப்பெரிய மர்ம முடிச்சுக்கள் இன்னமும் அவிழ்படாமல் அல்லது அவிழவிடபடாமல் பார்த்துக்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இக்கட்டுரை எரிக்சொல்கைம் சொன்னதின்படி ராஜீவ் கொலையை விடுதலைப் புலிகள் செய்தார்கள் என்றே எடுத்துக்கொள்கிறது.)

இந்திரன் ரவீந்திரன்

மார்ச் 2016 – கனடா e குருவி பத்திரிகையில் பிரசுரமாகியது


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *