ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட நடிகை ஜோதிலட்சுமி மரணம்

Facebook Cover V02

jothiபழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி, ரத்தப் புற்றுநோய் காரணமாக நேற்று இரவு திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68. இன்று மாலை தி.நகரில் அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது. கடந்த சில மாதங்களாக, ரத்தப் புற்றுநோய் காரணமாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார் ஜோதிலட்சுமி. இந்நிலையிலும் அவர் டி.வி தொடரிலும், சினிமா படங்களிலும் நடித்து வந்தார். அவ்வப்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று இரவு 11.15 மணியளவில் தி.நகர் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டார். தன் கணவரிடம், ‘நான் இறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன்’ என்று உருக்கமாகச் சொல்லி கண் கலங்கி இருக்கிறார். பிறகு பாத்ரூம் சென்று வந்த அவர், படுக்கையில் அமர்ந்திருந்தபோது மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

1963ல் எம்.ஜி.ஆரின் ‘பெரிய இடத்து பெண்’ படத்தின் மூலம் அறிமுகமானவர், ஜோதிலட்சுமி. தொடர்ந்து ‘அடிமைப்பெண்’, ‘ரிக்‌ஷாக்காரன்’, ‘குமரிக்கோட்டம்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘முத்து’, ‘சேது’, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’, ‘சிறுத்தை’ உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கடைசியாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘கவலை வேண்டாம்’, ‘கோணலா இருந்தால் நான்’ போன்ற படங்களில் நடித்து வந்தார். ‘வள்ளி’ டிவி தொடரிலும் நடித்து வந்தார்.

‘உன்னழகை கண்டுகொண்டால் ஆண்களுக்கே ஆசை வரும்’ என்ற பாடல் இடம்பெற்ற ’‘பூவும் பொட்டும்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஜோதிலட்சுமி. ‘பெரிய இடத்து பெண்’ படத்தில் ‘கட்டோடு குழலாட ஆட’, ‘அடிமைப்பெண்’ படத்தில் ‘காலத்தை வென்றவன் நீ’, ‘ரிக்‌ஷாக்காரன் படத்தில் ‘பம்பை உடுக்கை கட்டி’, ரஜினிகாந்தின் ‘முத்து’ படத்தில் ‘கொக்கு சைவ கொக்கு’, ‘சேது’ படத்தில் ‘கானக் கருங்குயிலே’ உட்பட பல படங்களில் ஜோதிலட்சுமி நடனம் ஆடியிருந்தார். பல படங்களில் 2வது கதாநாயகியாகவும், சில படங்களில் வில்லி வேடத்திலும், நிறைய படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியிருக்கிறார். மேலும், அவரது தங்கை ஜெயமாலினியுடன் இணைந்து சில படங்களில் ஆடியுள்ளார். தனது ஒரே மகள் ஜோதிமீனாவுடன் இணைந்து அஜீத்குமாரின் ‘நேசம்’, பார்த்திபனின் ‘வாய்மையே வெல்லும்’ போன்ற படங்களில் நடனம் ஆடியிருக்கிறார்.

1948ல் காஞ்சிபுரத்தில் 5 மகள்கள், 3 ஆண்கள் கொண்ட குடும்பத்தில், மூத்தவராகப் பிறந்தார் ஜோதிலட்சுமி. கடைசி பெண் ஜெயமாலினி. எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா ஆகிய 3 முதல்வர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், மலையாளத்தில் பிரேம் நசீருடனும், தெலுங்கில் நாகேஸ்வர ராவ், காந்தாராவ், தமிழில் சிவாஜி கணேசன் உட்பட பல ஹீரோக்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். ‘வசந்தம்’, ‘நாகம்மா’, ‘அண்ணாமலை’, ‘வள்ளி’ உட்பட பல டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். ஜோதிலட்சுமியும், ஒளிப்பதிவாளர் சாய் பிரசாத்தும் 1974ல் காதலிக்கத் தொடங்கினர். அவர்களது திருமணம் 1980ல் நடந்தது. ஜோதிமீனா என்ற மகள் இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு ஜோதிமீனா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

ஜோதிலட்சுமிக்கு பழம்பெரும் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா, நடிகைகள் டி.ஆர்.ராஜகுமாரி, குசலகுமாரி ஆகியோர் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ஜோதிலட்சுமியின் உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இன்று மாலை தி.நகர் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில், ஜோதிலட்சுமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது

Share This Post

Post Comment