மனிதப் புதைகுழியில் ஆயிரக்கணக்கான சடலங்கள் கண்டெடுப்பு : ஐ.எஸ் தீவிரவாத வெறியாட்டம்

Facebook Cover V02

siriyaவடக்கு சிரிய நகரமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியொன்றில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நகரம் சுமார் ஒருமாத காலம் வரையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததாகவும், இந்த குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இந்த இடத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

துருக்கியுடனான வட சிரியாவின் எல்லைப் பகுதியில் இருந்து 12 மைல்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ள Suluk நகரமானது, கடந்த பெப்ரவரி மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து குறித்த நகரத்தில் நிலைகொண்டிருந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது படை நடவடிக்கைகளை முன்னெடுத்த குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினர், கடந்த மார்ச் மாதத்தில் இந்த நகரத்தை மீளக் கைப்பற்றியிருந்தனர்.

இந்த நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளைப் புதைத்து வைத்திருக்கலாம் என்ற அச்சத்தின்பேரில், குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனிதப் புதைகுழியில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் படுகொலை செய்யப்பட்டு இங்கு புதைக்கப்படுவதற்கு முன்னர் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளமை சடலங்களில் காணப்படும் காயங்கள் மூலம் தெரியவருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல், வன்முறை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளினால் இதுவரை 470,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, கடந்த பெப்ரவரி மாதத்தில் வெளியான அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment