அமெரிக்காவும் இந்தியாவும் பின்னே தமிழ்த் தேசிய அரசியலும்!

ஆயுதப் போராட்டத்தின் பின்னரான ஈழத்தமிழர்களின் அரசியல் அரங்கு மிகவும் பலவீனமானது. குழப்பகரமானது. அது, பலமான பல வழிகளையும் அடைத்து வைத்துக் கொண்டிருக்கின்றது. இப்படியான நிலையினைக் கடப்பது பற்றிய உரையாடல்கள் பரவலாகவும், வேகமாகவும் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால், அந்த உரையாடல்களை எவ்வாறு, எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது தொடர்பிலும் சிக்கல் நீடிக்கின்றது. ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வந்தது என்னவோ நேற்றுப்போல் தோன்றினாலும், அது ஏழு ஆண்டுகள் என்கிற நீண்ட காலத்தினை எடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதுவே உண்மை.

இந்த ஏழு ஆண்டுகளில் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கு எந்தவித ஸ்திரத்தன்மையையும் அடையவில்லை. ஆனால், தேர்தல் சார் அரசியல் வெற்றிகள் மாத்திரம் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், தென்னிலங்கையும், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசமும் பலமான பலன்மிக்க அடைவுகளை எட்டியிருக்கின்றன. தமிழ் மக்களின் அரசியல் பலம் பொருந்தியதாக மாறுவதை தமிழ் மக்களைத் தவிர யாருமே விரும்பவில்லை. ஏன், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளே கூட பெரும்பாலும் விரும்பவில்லை. மாறாக, இந்தியா அல்லது தமிழகத்தை ஒத்த தேர்தல் அரசியல் சார் நிலையினை வைத்துக் கொள்வதிலேயே ஆர்வம் கொண்டிருக்கின்றன. அது, ஆள்பவனுக்கும், அடிமைப்பட்டுக் கிடப்பவனுக்கும் இடையிலான வெளி சார்ந்தது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் வலிந்து தம்முடைய வலிமையான அரசியல் எழுச்சி பற்றி சிந்திக்க வேண்டிருக்கின்றது. காலம் கடத்துதல் என்பது இன்னமும் கானலான வெளியொன்றை எம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

-புருஜோத்தமன்-தங்கமயில்சின்ன உதாரணமொன்று, திருகோணமலை சம்பூரில் இந்தியா அமைக்கும் அனல் மின் நிலையத்துக்காக தமிழ் மக்களின் பெருமளவான காணிகள் பறிக்கப்பட்டன. ஆனால், தமது காணிகள் மீளவும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி காணிகளை பறிகொடுத்த மக்கள் சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அந்தப் போராட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வளவு இரசிக்கவில்லை.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சம்பூர் காணி ஆக்கிரமிப்புக்கு ஆதரவான அல்லது அதற்கு சார்பான கருத்தொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதாவது, “திருகோணமலையிலிருந்து இந்தியாவினை அகற்றுவதற்கு இலங்கை அரசாங்கமும், சீனாவும் முயல்கின்றது. திருகோணமலைக்கு சீனா வருவது அச்சுறுத்தலானது. ஆக, இந்தியாவின் பிடியில் இருப்பதே சாதகமானது.” என்றவாறாக இருந்தது.

இன்னொரு உதாரணமொன்றையும் கூறலாம். சம்பூர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படுத்தும் ஆவணப்படமொன்றை வடக்கிலுள்ள சமூக ஆர்வமுள்ள இளைஞர்கள் சிலர் எடுத்தார்கள். அது, குறிப்பிட்டளவு கவனமும் பெற்றது. அந்த ஆவணப்படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த போது, இயக்குனரைத் தொடர்பு கொண்ட தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் அரசியல் ஆர்வலர் ஒருவர், அந்த ஆவணப்படத்தினை வெளியிடாது தடுப்பதில் பெரும் கவனம் செலுத்தி உரையாடியிருக்கின்றார். “திருகோணமலையிலிருந்து இந்தியாவை ஏற்கனவே அகற்றிவிட்டார்கள். சம்பூரும் போனால் இந்தியாவுக்கு எதுவும் மிச்சமிருக்காது. ஆக, அந்தப் படத்தினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லாது விடுங்கள்.” என்றாராம்.

காணி உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பெரிய தொய்வு ஏதும் இல்லை. காலம் கடந்தும் நீளும் தொடர்ச்சியான போராட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் அவர்களிடத்தில் குறிப்பிட்டளவு ஓர்மமும் இருக்கின்றது. அதுவே, யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தில் காணிக்காக போராடும் மக்களிடமும், சம்பூரில் போராடும் மக்களிடம் இருக்கின்றது. அந்தப் போராட்டங்கள் தமிழ்த் தேசிய அரசியலின் ஸ்திரத்தன்மைகள் தொடர்பிலான நம்பிக்கைகளை தக்க வைக்கும் புள்ளிகளாக இருக்கின்றன. ஆனால், அந்தப் போராட்டங்களை கவனமாக அகற்றுவது தொடர்பில் தென்னிலங்கையும், இந்தியாவும், அமெரிக்காவும் வெவ்வேறு வடிவங்களில் களமாடுகின்றன.

சீனா சார்ப்பு மஹிந்த ஆட்சியை அகற்றுவதில் அமெரிக்காவும், இந்தியாவும் எவ்வளவு கவனமாக ஈடுபட்டன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மைத்திரி- ரணில் ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பில் பெரும் இராஜதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கின. ஆனாலும், அதில், ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் ஓட ஆரம்பித்தது அமெரிக்கா. அந்த ஓட்ட வேகத்தினை தடுப்பதற்காக கருவியாக தமிழ்த் தேசிய அரசியலைக் கையாள இந்தியா முனைகின்றது. அது, காலம் தாழ்த்திய வேலையாக இருக்கின்ற போதிலும், இறுதிக்கட்ட கருவியாக தமிழ்த்  தரப்பினை பொறிவைப்பதில் குறியாக இருக்கின்றது. அதற்கான பெரும் வேலைத்திட்டத்தோடு இந்தியா வடக்கு- கிழக்கில் இறங்கியிருக்கின்றது. அதில், பலரை கையாளவும் தொடங்கி விட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் பெரும் ஆர்வம் செலுத்தி தென்னிலங்கைக்கு ஒத்துழைத்த அமெரிக்கா, முள்ளிவாய்க்காலுக்குள் அனைத்தும் நிறைவு பெற்றதும், முள்ளிவாய்க்கால் படுகொலைகளையும், போர்க்குற்றத்தினையும் இலங்கை அரசாங்கத்தினை கையாளுவதற்கான கருவியாக எடுத்துக் கொண்டது. அது முடியாமல் போனதும், ஜெனீவாவில் புதிய அரங்கினைத் திறந்தது. ஜெனீவா அரங்கு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதைத் தவிர அனைத்து இராஜதந்திர சதிராடல்களையும் செய்தது. அமெரிக்காவும், இந்தியாவும் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் இலங்கையில் ஏற்பட்டதும், ஜெனீவா அரங்கும் தன்னுடைய கட்டத்தினை நிறைவுக்கு கொண்டு வருவதற்கான முனைப்புக்களை வெளிப்படுத்தியது. அதன் அனைத்துக் கட்டங்களும் இன்னும் சில காலத்துக்குள் நிறைவுக்கு வரும். அரசியல் ஸ்திரமற்ற நிலையொன்றின் நீட்சியே இவ்வாறான நிலைகளை தமிழ் மக்களிடம் திரும்பத் திரும்ப சேர்ப்பிக்கின்றது. குறிப்பாக, கருவி நிலையில் தமிழ் மக்களை தொடர்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பதற்கு காரணமாக இருக்கின்றது.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், கடந்த 20 மாதங்களில் 6 தடவைகள் இலங்கை வந்து சென்றிருக்கின்றார். ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட பொறியை மெல்ல அகற்றி சர்வதேச அனுசரணையை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதில் அவர் பெரும் பங்காற்றினார். இன்றைக்கு, அநீதிகளுக்கான நீதிக் கோரிக்கைகளைப் புறந்தள்ளி இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பற்றி உரையாடல்களை ஆரம்பித்திருக்கின்றார். குறிப்பாக, இலங்கையிலிருந்து இந்தியாவின் பிடியையும் ஒட்டுமொத்தமாக அகற்றிவிட்டு களமாடுவது தொடர்பில் அவர் கவனம் செலுத்தியிருக்கின்றார். குறிப்பாக, கடந்த ஜூலை மாத நடுப்பகுதியில் நிஷா தேசாய் பிஸ்வால் மேற்கொண்ட இலங்கை விஜயம், கொழும்பு துறைமுகம்  உள்ளிட்ட இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கிய தளங்களை கைப்பற்றுவது அல்லது கையாள்வது தொடர்பிலான ஏற்பாடுகளின் போக்கில் நிகழ்ந்திருக்கின்றது.

தமது அதீதமான உள்நுழைகைக்கு தென்னிலங்கை எந்தவித எதிர்ப்பினையும் வெளியிடக்கூடாது என்பதில் கவனமான இருக்கும் அமெரிக்கா, அதற்கான ஏற்பாடுகளை அனைத்து மட்டங்களிலும் செய்வதில் குறியாக இருக்கின்றது. குறிப்பாக, இலங்கை மீதான போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை பொய்த்துப்போகச் செய்யும் ஏற்பாடுகளை செய்கின்றது. அதனொரு கட்டமாகவே, ஜெனீவாத் தீர்மானத்தின் சரத்துக்களைப் புறந்தள்ளி உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றுக்கு ஒத்துழைத்திருக்கின்றது. சர்வதேச நீதிபதிகள் உள்ளிட்ட தலையீடுகள் பற்றியெல்லாம் ஆரம்பத்தில் வலியுறுத்திய அமெரிக்கா, இன்றைக்கு இலங்கையின் உள்ளக இறைமை பற்றி அக்கறை வெளிப்படுத்தி பேசுகின்றது. இப்படிப்பட்டதொரு நிலையில், சர்வதேச ரீதியில் தமக்குள்ள அழுத்தங்களைப் நீக்கும் தேவைகளின் போக்கில் அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்குள் தன்னுடைய நிகழ்ச்சி நிரலையும் செலுத்தி வெற்றிபெறும் போக்கில் தென்னிலங்கை வெற்றி பெற்றிருக்கின்றது. குறிப்பாக, ரணில் விக்ரமசிங்க நிதானமாக செயற்திட்டங்களினூடு தென்னிலங்கையின் வெற்றியை உறுதி செய்கின்றார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர தொடர்ச்சியான வெளிநாட்டுப் பயணங்களிலேயே ஈடுபடுகின்றார். அவர், ஜனாதிபதி, பிரதமர் அளவுக்கான அங்கீகாரத்தினை வெளிநாடுகளில் பெறுகின்றார். குறிப்பாக, அமெரிக்காவினால் அவ்வளவு அன்போடு நோக்கப்படுகின்றார். ஜனாதிபதி வெளியிடும் கருத்துக்களையே “அது அரசாங்கத்தின் கருத்தல்ல, அவரது தனிப்பட்ட கருத்து“ என்று கூறுமளவுக்கான வல்லமையோடு மங்கள சமரவீர வலம் வருகின்றார். அவர், ஆட்சி மாற்றமொன்று ஏற்படுவதற்கு முன்னரேயே தென்னிலங்கைக்கு சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் ஏற்படுத்தும் அனைத்துத் தரப்புக்களையும் சந்தித்து பேச்சுக்களை ஆரம்பித்துவிட்டார். தமிழ்த் தரப்புக்கள் எதிர்பார்க்காத தமிழ்த் தேசியத் தரப்பில் புலம்பெயர் கடும்போக்கு தரப்புக்களோடும் பேசி கனிவான முடிவுகளைப் பெற்றிருக்கின்றார். அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை இன்னமும் காண முடிகின்றது. புலம்பெயர் தரப்புக்களை ஜெனீவா அரங்கில் வைத்தே சந்தித்து  பேசுமளவுக்கான வல்லமையை அவர் வெளிப்படுத்தினார்.

மங்கள சமரவீரவின் வல்லமை பற்றிய எரிச்சல் தென்னிலங்கையிடமும் உண்டு. ஆனால், அவரின் வல்லமையும்- இராஜதந்திர வெற்றியும் தற்போதைக்கு அவசியமாகவுள்ள நிலையில், அவரை ஏற்றுக்கொள்வது தொடர்பில் மாற்றுக்கருத்தொன்றுக்கு செல்ல முடியாது. மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்ரமசிங்கவும் கூட அதனை உணர்ந்திருக்கின்றார்கள். ஏனெனில், இலங்கையில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவதில் மங்கள சமரவீர பலத்த ப

samll-alla

ங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றார். சந்திரிக்காவை அரங்கிற்கு கொண்டு வந்து ஆட்சியை அமைக்க வைத்ததிலும், அதன் பின், மஹிந்தவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியதிலும் அவரின் பங்களிப்பு முக்கியமானது. தற்போதுள்ள மைத்திரி- ரணில் அரசாங்கத்தை கொண்டு வந்ததிலும் அவரின் பங்கு அளப்பரியது. அப்படிப்பட்ட ஒருவரை அமெரிக்கா தெளிவாக கையாண்டு இலங்கையில் தன்னுடைய அடைவுகளை இலகுவாக அடைகின்றது. அதன்போக்கில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பின் பலவீனமாக நிலையும் கையாளப்படுகின்றது.

இவ்வாறான நிலையொன்றினை சடுதியாக உணர்ந்து கொண்ட இந்தியா, தற்போது தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்து கொண்டு விடயங்களைக் கையாள நினைக்கின்றது. அதற்கு, அரசியல் கட்சிகளையும், அரசியல் ஆர்வலர்களையும் பெருமெடுப்பில் நெருங்குகின்றது. இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் கருவிகளா

க கையாளப்படும் நிலையிலிருந்து வெளியேற வேண்டும். அதற்கு, அரசியலில் ஸ்திரத்தன்மை பற்றிய விடயங்களில் ஆர்வம் கொள்ள வேண்டும். கருவி நிலையிலிருந்து கையாளும் நிலைக்கு மாற வேண்டும். ஏனெனில், இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை அமைந்திருப்பதனால், உள்ளக இனமுரண்பாடுகள் என்பது வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் போக்கிலும் கையாளப்படும். அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வெற்றிகளை அடைய வேண்டுமெனில், அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம். அது, அமைக்கப்படாத வரையில் வெற்றிகள் சாத்தியமே இல்லை.

புருஜோத்தமன் தங்கமயில்

ஜூலை மாத eகுருவி பத்திரிகையில் வெளிவந்தது

 


Related News

 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • ஜஸ்ரின் ரூடோ தடுமாறுகின்றாரா? ரதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *