மைத்திரியின் வருகையும்… கடந்துவிட்ட ஓராண்டும்! -புருஜோத்தமன் தங்கமயில்

maithiriபௌத்த சிங்கள மேலாதிக்கவாதம் ஆளுகை செலுத்தும் தென்னிலங்கை அரசியல் களம் கவர்ச்சியுள்ள தலைவர்களினாலேயே அதிகமாக வெற்றி கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ என்று அந்த வரிசை நீண்டு செல்கின்றது.

சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதித் தேர்தலில் முதற்தடவை போட்டியிடும் போது தமிழ், முஸ்லிம் மக்களின் குறிப்பிட்டளவான ஆதரவோடும் பெருவெற்றி பெற்றார். மஹிந்த ராஜபக்ஷவோ தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்ததால் வெற்றி பெற்றார். ஆனால், அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்துக்கான ஜனாதிபதித் தேர்தல்களும், பாராளுமன்ற தேர்தல்களும் முழுவதுமாக பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்தின் போக்கில் நிகழ்த்தப்பட்டது. அவர்கள் தங்களை பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்தின் தலைவர்களாக நிறுவுவதில் கவனமாக இருந்தார்கள். ஆரம்பத்திலிருந்தே இவர்கள் சிங்கள மக்களினால் தங்களுடைய பெரும் தலைவர்களாக நோக்கப்பட்டவர்கள்.

ஆனால், தென்னிலங்கை அரசியலில் இரண்டாம் மட்டத் தலைவராக இருந்த ஒருவர்; அரசியல் முன்னிலை உரையாடல்களுக்குள் என்றைக்குமே முன்னிறுத்தப்படாத ஒருவர்; மஹிந்த ராஜபக்ஷ என்கிற ஆளுமையுள்ள- ஆளுகையுள்ள தலைவருக்கு எதிராக தேர்தல் களத்தில் முன்னிறுத்தப்படுவது என்பது யாரினாலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றல்ல. பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்ட போது  அப்படியான  உணர்நிலையே இருந்தது.

மைத்திரிபால சிறிசேன தன்னுடைய அரசியல் வாழ்வில் அதிகமாக சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டவர் இல்லை. அதுபோல, பெரும் அதிகாரங்களுக்கான போட்டியில் தன்னை வைத்துக் கொண்டவரும் இல்லை. அவர், அதிகமாக வேண்டிக் கொண்டது விவசாய அமைச்சும், மகாவலி அபிவிருத்தி அமைச்சுமே. அவரின் அதிகபட்சக் கனவாக இருந்தது அதிகாரங்கள் ஏதுமற்ற பிரதமர் பதவி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில் மைத்திரிபால சிறிசேன முன்னிறுத்தப்பட்ட போதும், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அந்தப் பதவியில் தொடர்ந்த போதும் கட்சித் தலைவர்களுக்கு மிகவும் இணக்கமானவராக தன்னை வைத்துக் கொண்டார். அவர், ஒருவகையில் கேள்விகள் எழுப்பாதா, ஆளுகை செலுத்த முனையான அமைதியான அரசியல்வாதியாக கருதப்பட்டார். அப்படியான சூழ்நிலையில், பௌத்த சிங்கள மேலாதிக்க அரசியல் அரங்கு அவரை தலைவராக ஏற்றுக் கொள்வது தொடர்பில் கொஞ்சமும் சிந்தித்திருக்கவில்லை.

5th-C-Cartoon2-239x300ஆனால், காலம் எல்லாவற்றையும் மாற்றியது. அதாவது, மஹிந்த ராஜபக்ஷவின் நீண்ட சர்வாதிகாரமும், ஊழலும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்திய பேரழுத்தம் மைத்திரிபால சிறிசேனவை முதன்நிலைத் தலைவராக ஏற்க வைத்தது. அப்படியானதொரு நிலையிலேயே அவர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான கடந்த ஓராண்டில் மைத்திரிபால சிறிசேன கடந்து வந்த பாதை எப்படியானது, அவர் மக்களிடையே முன்வைத்த தேர்தல் கால வாக்குறுதிகளின் நிலை என்ன, தமிழ் மக்கள் தொடர்பிலான அவரது அரசியல் நிலைப்பாடு உறுதியானதாக இருக்கின்றதா என்கிற கேள்விகள் எழுகின்றன. அவை தொடர்பில் கொஞ்சம் அவதானம் செலுத்தலாம்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளினதும், இந்தியாவினதும் பெரும் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்தினை அகற்றி, தமக்கு சார்பிலான அரசாங்கமொன்றை நிறுவ வேண்டிய தேவை அந்த நாடுகளுக்கு இருந்தன. அந்த நடவடிக்கையை மிகவும் கனகச்சிதமாக முன்னெடுக்கின்ற தருணத்தில் அதற்கான ஒத்துழைப்பினை ரணில் விக்ரமசிங்க வழங்கினார்.

பௌத்த சிங்கள மேலாதிக்க வாதத்தின் பெரும் ஆளுமையாகவும், போர் வெற்றி நாயகன் அந்தஸ்த்தோடும் வலம் வந்த மஹிந்த ராஜபக்ஷவினை அகற்றுவதற்கான முனைப்பு சின்னதாக தோற்றாலும், அது ஏற்படுத்தப் போகும் விளைவு பாரதூரமானது என்பதை ரணில் விக்ரமசிங்க அறியாமல் இல்லை. ஆனால், அதனை பெரும் நம்பிக்கையோடு கையாள வேண்டும் என்கிற உறுதிப்பாட்டில் அவர் வெற்றி பெற்றார். மைத்திரிபால சிறிசேனவை பிரித்தெடுத்து வெற்றி கண்டார்.

அப்படிப்பட்ட நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளினதும், இந்தியாவினதும் செல்லப்பிள்ளையாக மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்ரமசிங்கவும் உருவானார்கள். அவர்களுக்கு எதிரான அனைத்து தரப்புக்களையும், சிக்கல்களையும் சமாளித்து பாதையமைப்பதில் அந்த நாடுகளும் ஒத்துழைத்தன.  அது, ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னரான, பாராளுமன்றத் தேர்தல் வெற்றியிலும் உறுதி செய்யப்பட்டது.

பௌத்த சிங்கள மேலாதிக்கவாதம் கோலொச்சும் தென்னிலங்கையில் அதற்குள் இருந்து கொண்டு, அதனை கையாளும் முனைப்பினை வெளிப்படுத்துவது என்பது சில நேரங்களில் சிக்கலான ஒன்றாகவே வெளிச் சக்திகளுக்கு இருந்து வந்திருக்கின்றது. அப்படியான சூழ்நிலையில்தான் ரணில் விக்ரமசிங்கவைத் தாண்டி மைத்திரிபால சிறிசேன போன்ற ஒருவரின் தேவை உணரப்பட்டது. ஏனெனில், அவர் கடந்த காலங்களில் பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்தினால் விமர்சிக்கப்பட்டவரோ, அதிகமாக உரையாடப்பட்டவரோ அல்ல. ஆக, அவர் அந்தத் தளத்துக்குள் இருக்கின்றவராக காட்டப்படுவது இலகுவானது. அதுதான், உண்மையும் கூட. இவ்வாறாக, தென்னிலங்கை அரசியல் சிக்கல்களை கையாண்ட அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் புதிய அரசாங்கத்தோடு மிகவும் நெருக்கமான உறவினை வெளிப்படுத்தின.

ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவும் வெளிநாடுகளோடு பகைத்துக் கொள்ளாத இணக்கமான தலைவராக தன்னை முன்னிறுத்தினார். மேற்கு நாடுகளின் செல்லக் குழந்தைகளாக மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்ரமசிங்க கூட்டு பார்க்கப்பட்டாலும், சீனா, பாகிஸ்தான் போன்ற இலங்கையின் கடந்த கால நட்பு நாடுகளுடனும் தொடர்பை சீராக பேண முனைந்து வெற்றி கண்டது. அது, தென்னிலங்கையில் கடும்போக்காளர்களின் விமர்சனங்களை வெற்றி கொள்வதற்காக கையாளப்பட்டது.

அதுபோல, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்ந்து எதிர்கொண்டிருந்த நெருக்கடிகளை புதிய அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டது. (அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகள் தம்முடைய தேவைகளுக்கானவே பெரும்பாலும் மனித உரிமைகள் விடத்தினை ஐக்கிய நாடுகளில் கையாண்டன என்பதுவும், அங்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டமையும் நாம் கண்டுகொண்ட வலிக்கும் உண்மைகளாகும்.) மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பெரும் அழுத்தமாக உணரப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விடயங்கள் புதிய அரசாங்கத்தினால் கையாளப்பட்ட விடயமும் கூட தென்னிலங்கையில் குறிப்பிட்டளவான ஆதரவினை மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்ரமசிங்க கூட்டிற்கு பெற்றுத்தந்தன. அவர்கள், பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்தின் சேவகர்கள் போன்று பார்க்கப்படுவதற்கான அனைத்து விடயங்களும் இறுதி செய்யப்பட்டன. அது, ஒருவகையில் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர் முதன் நிலைக்கு வந்து, முதன்நிலை தலைவர்களின் ஆளுமையின் தொடர்ச்சியாக தன்னை நிறுவுவதற்கும் உதவியது.

அத்தோடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை நீக்கிக் கொள்வது தொடர்பில் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டளவான நடவடிக்கைகளை எடுத்தார். இன்னமும் எடுத்து வருகின்றார். ஏனெனில், கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவதாக தெரிவித்து அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள் அதனை முன்னெடுக்கவில்லை. மாறாக, அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதற்கான முனைப்புக்களிலேயே ஈடுபட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில், மைத்திரிபால சிறிசேன, தான் வழங்கிய தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற முனைந்தமை அவரை நியாயமான அரசியல் தலைவர் என்கிற தோற்றப்பாட்டையும் தென்னிலங்கையில் உருவாக்கி, அவரை முதன்நிலைக்கு கொண்டு வந்ததில் வலுச் சேர்த்தது.

மறுபக்கத்தில், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவோடும் ஆட்சியமைத்தவர் என்கிற வகையில் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் நம்பிக்கையூட்டியதா, இல்லையா? என்பதற்குப் பதிலாக சில ஆறுதல் பரிசில்கள் விடைகளாக கிடைத்திருக்கின்றன. அதாவது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோடு நெருங்கி உரையாடல்களை மேற்கொள்ளும் தென்னிலங்கைத் தலைவர்  என்கிற அடையாளம் மைத்திரிபால சிறிசேன மீது கட்டமைக்கப்பட்டது. அது ஒருவகையில் திட்டமிட்ட நாடகமொன்றின் அரங்கேற்றம் போலவும் இருந்தது.

அதனை, இன்னொரு வழமாக சொல்வதாயின், தென்னிலங்கைக்கான முகத்தினை தெளிவாக வரையறுத்துக் கொண்ட மைத்திரிபால சிறிசேன, வடக்கிற்கான முகத்தினையும் பருமட்டாக வரையறுத்துக் கொண்டார். அதாவது, தமிழ் மக்களின் பிரச்சினைகளின் தீவிரம் உணர்ந்த தலைவராக தன்னை காட்டிக் கொண்டார். அதற்கான, சில விடயங்களையும் அவர் முன்வைத்தார். குறிப்பாக, இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த பொதுமக்களின் காணிகளில் குறிப்பிட்டவானவற்றை விடுவித்தல் மற்றும், இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களை மீளவும் குடியேற்றுவதற்கான திட்டங்களை முன்வைத்து நகர்ந்தார். அத்தோடு, தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்வைப்பது தொடர்பில் திரும்பத் திரும்ப நம்பிகையூட்டிக் கொண்டிருந்தார்.

“சமஷ்டி என்ற சொல் தெற்கிலுள்ள அடிப்படைவாதிகளுக்கு கசக்கின்றது. அதுபோல, ஐக்கியம் என்கிற சொல் வடக்கிலுள்ள அடிப்படைவாதிகளுக்கு கசக்கின்றது. அடிப்படைவாதங்களற்ற நாட்டினை தோற்றுவிக்க வேண்டும்.”  என்பது மாதிரியான உரையை ஆற்றும் அவர், “பண்டா- செல்வா ஒப்பந்தம் அல்லது டட்லி- செல்வா ஒப்பந்தம் முறையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார்.” என்பது மாதிரியான பிரச்சினைகளின் தீவிரம் உணர்ந்த தலைவர் என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முனைகின்றார். இவ்வாறான  நடவடிக்கை மக்கள் மத்தியில் சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு என்கிற விடயத்திற்கான நம்பிக்கையை அவர் எவ்வாறு இறுதி செய்யப் போகின்றார் என்பதில் பெரும் சந்தேகம் எழுந்திருக்கின்றது.

ஏனெனில், “ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்“ என்று தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையில், நாட்டின் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பௌத்தமும், ஒற்றையாட்சியும் அரசியலமைப்பின் மீண்டும் முதன்நிலைப்படுத்தப்பட வேண்டும் என்று தென்னிலங்கை கடும்போக்கு தளம் வலியுறுத்துகின்றது. அதற்கான உச்சகட்ட பிரச்சாரம் ஊடகங்களினூடும், அரசியல் உரையாடல்களினூடும் முன்னெடுக்கப்படுகின்றன.

அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களுக்கான தீர்வு புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடு சாத்தியப்படுத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றதா, அதனை உண்மையிலேயே பெற்றுக் கொடுக்கும் முனைப்பு மைத்திரிபால சிறிசேனவிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் பதில்களற்று தொடர்கின்றன.

நல்லாட்சி கோசத்தோடு நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்ற மைத்திரிபால சிறிசேன (ரணில் விக்ரமசிங்க) தரப்பு, வாக்குறுதிகளை நம்பிக்கைகளாக ஊட்டி வெற்றி பெற்றிருக்கின்றது. அந்த நம்பிக்கைகளை உறுதி செய்வதற்கான முனைப்புக்களில் அவர்களிடம் நியாயமான முன்நகர்வு  இல்லாது போனால், அது, நாட்டினை மீண்டும் அச்சுறுத்தலான பக்கத்திற்கு நகர்த்தும். அது யாருக்கும் நல்லதல்ல. அப்படியான நிலையில், மைத்திரிபால சிறிசேன தன்னுடைய அரங்காற்றுகையை வெற்றிகரமாக மாற்றுவதற்கான காலம் இன்னமும் இருக்கின்றது. பொறுத்திருந்து பார்க்கலாம் அவர் வெற்றிகரமானவராக இறுதிவரை இருக்கின்றாரா என்று?






Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *