அரியானாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்

sdsd

con27கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய அரியானா மாநில அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது.

அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு, கற்பழிப்பு வழக்கில் தேரா சச்சா சவுதா என்ற மத அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் சிங்கை குற்றவாளி என நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பயங்கர கலவரம் ஏற்பட்டது. தேரா சச்சா சவுதா அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த மாநிலத்தில் கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.

கலவரத்தில் 30–க்கும் அதிகமான பேர் பலி ஆனார்கள். மேலும் ஏராளமான பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்திலும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

அரியானாவில் நடைபெற்ற கலவரத்தில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டு, ஏராளமான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக கூறி உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியானா மாநில அரசு அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.

மேலும் அவர், பஞ்சாப் மாநில முதல்–மந்திரி அமரிந்தர் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டு அறிந்தார்.

அரியானாவில் நடைபெற்ற கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சமுதாயத்தில் வன்முறைக்கு இடம் இல்லை என்றும், மாநிலத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட அரியானா மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.

மேலும், அரியானாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களிடம் கூறுகையில், அரியானாவில் நடந்த கலவரத்தை முதல்–மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது என்றும் கலவரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசாங்க சொத்துகளும், தனியார் சொத்துகளும் நாசமாகி இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டதால் மனோகர் லால் கட்டார் அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், கலவரத்துக்கு பொறுப்பு ஏற்று மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.

இதேபோல் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், அரியானா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதீய ஜனதா அரசு வாக்கு வங்கி அரசியல் நடத்துவதாகவும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதால் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

Share This Post

Post Comment