பௌத்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும்!

Facebook Cover V02

eastern-chief-ministerபௌத்த பக்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும், ஆனால் முஸ்லிங்களும் இந்து பக்தர்களும் இருக்கும் இடத்தில் விஹாரையை கட்டி யார் வணங்கப் போகின்றார்கள் என, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கில் இதுவரை மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகையில் அண்மைக் காலமாக இனவாத செயற்பாடுகளை பரப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புத் தரப்பினர் நடந்து கொள்கின்ற முறை குறித்து பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தான் நாம் பொலிஸ் அதிகாரத்தை கேட்கின்றோம், எமக்கு பொலிஸ் அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பது எவ்வாறு என்பதை நாம் காட்டுகின்றோம்.

இதேவேளை, நான் கிழக்கில் விஹாரைகளை அமைப்பதற்கு எதிராக இருக்கின்றேன் என்றதொரு கருத்தை அண்மைக் காலமாக ஞானசார தேரர் உட்பட சில சிங்கள அரசியல்வாதிகளும் பரப்பி வருகின்றனர்.

பௌத்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அவர்கள் வாழும் இடங்களில் அவர்களுடைய மதவழிபாடுகளை மேற்கொள்வதற்கு நான் ஒருபோதும் தடையானவனுமல்ல, என்னால் தடை போடவும் முடியாது. அவர்களுடைய மத சுதந்திரத்தை நான் ஒரு போது தடை செய்ய முடியாது.

ஆனால் அவர்கள் முஸ்லிங்களும் தமிழர்களும் வாழும் பகுதிகளில் விஹாரைகளை எழுப்புவதும் சிலைகளை வைப்பதும் தான் இன்று பிரச்சினையாகவுள்ளது.

பௌத்த பக்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும் ஆனால் முஸ்லிங்களும் இந்து பக்தர்களும் இருக்கும் இடத்தில் விஹாரையை கட்டி யார் வணங்கப் போகின்றார்கள்.

அது மாத்திரமன்றி முக்கிய மதிப்புக்குரிய பௌத்த தேரர்களே இந்த செயல்களை வெறுத்து ஒதுக்கும் போது சிலர் அரசியல் நோக்கத்துடன் இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுப்பது விமர்சிக்கத்தக்கது.

என்ன அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் என்ன விமர்சனங்களை முன்வைத்தாலும் அவற்றுக்கு அஞ்சி வாய் மூடி மௌனியாக இருக்கப் போவதில்லை, சிறுபான்மையினரின் நலன்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுமானால் அதற்கு எதிராக குரல் எழுப்ப நான் ஒரு போதும் தயங்கப் போவதில்லை.

நாமும் இந்த நாட்டின் மதிப்புக்குரிய பிரஜைகள் தான், எல்லோரையும் போன்று உரிமைகள் எமக்கும் உண்டு. எமது சுதந்திரத்தின் மீது உரிமைகள் மீதும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுமானால் நாம் அதை கை கட்டி வாய்மூடி பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

Share This Post

Post Comment