பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் ரணில் படைத்தளபதிகளுடன் ஆலோசனை!

ranil-met-armyஇறுதிக்கட்டப் போரின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறையொன்றை அமைப்பது தொடர்பாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி உட்பட மூத்த இராணுவத் தளபதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி, கூட்டுப் படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஜெனரல் தர அதி்காரிகள் மற்றும் இறுதிக்கட்டப் போரில் பணியாற்றிய பிரிகேடியர் நிலையில் உள்ள முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அகமட் கடற்படை அதிகாரியைத் திட்டியமை தொடர்பாகவும், பொறுப்புக் கூறுதல் தொடர்பாகவுமே முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலின்போது கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அனைத்து மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்கும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விரைவாக அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ஆணைக்குழுவினால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் அனைத்தும் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகள் ஆலோசனை வழங்குவார்கள். ஆனால், அவர்கள் விசாரணைகளில் பங்கேற்கமாட்டார்கள். அத்துடன் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்யுமாறு எந்தவொரு நாட்டினதும் அமைப்பினதும் அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை. ஆனால், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்குக் கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக கருத்து வெளியிடும்போது, வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment