2000 இற்கும் மேற்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் காலவரையறையற்ற போராட்டத்தில்!

Facebook Cover V02

IMG_6091-e1486044759907வட பிராந்தியத்தில் 7 சாலைகளை சேர்ந்த 2000ற்கும் மேற்பட்ட இ.போ.ச சாரதிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசிய போக்குவரத்து ஊழிய சங்க தலைவர் தாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களிலே நாம் பல பணிப்புறக்கணிப்புகளை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறோம். அந்தவகையிலே கடந்த சில தினங்களாக வவுனியா புதிய பேருந்து நிலையத்தினால் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந் நிலையில் முல்லைத்தீவு சாலையிலும் மன்னார் சாலையிலும் கடமையாற்றும் இரு சாரதிகள் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களை வழி நடத்துகின்ற அதிகாரிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகளாக இருக்கின்றார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளால் நாம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். தமிழர்களாகிய நாங்கள் ஏற்கனவே எமது தனித்துவங்களையும் கலாச்சாரங்களையும் இழந்து தவிக்கின்றோம்.

அண்மையில் வடபிராந்திய போக்குவரத்து சபை இரண்டாக துண்டாடப்படும் நிலை ஏற்பட்டபோது இங்கே ஒரு போராடத்தினை முன்னெடுத்து அதை முறியடித்து இருந்தோம். ஆனால் எதுவித முன்னறிவித்தலும் இன்றி தனியார் சாரதிகள் வவுனியா பேருந்து தரிப்பிடத்தை கையகப்படுத்தியமை இ.போ.ச சாரதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதுக்கின்றோம்.

வீதிகளிலேயே பல தடவைகள் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். எம்முடைய பேருந்துகளும் கற்களால் தாக்கப்படுகிறது. ஆனால் இவற்றுக்கு இதுவரை எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு நாம் தாக்கப்பட்டு நலிவடைந்துகொண்டு இருக்கிறோம்.

எனவே வவுனியா பேருந்து நிலையத்தை இ.போ.ச இற்கு பெற்றுத்தரும்படியும் சாரதிகள் தாக்கப்படுவதை தடுக்க கூறியும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு கையளிக்க வேண்டும் என்பதே எமது முக்கியமான கோரிக்கை. 7 சாலைகளை சேர்ந்த 2000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

உரிய அதிகாரிகள் எம் மீது கவனம் எடுத்து வடபிராந்தியத்திற்குரிய தனித்துவத்தை கட்டிஎழுப்ப வேண்டும் எனவும் எதிர்வரும் காலங்களில் ஏனைய சாலைகளை கையகப்படுத்துவதை தவிர்த்து எங்களுடைய ஊழியர்கள் நிம்மதியாக சேவையினை செய்வதற்கு உதவவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Share This Post

Post Comment