“எல்லாப்பிரச்சினைகளுக்கும் யாழ்ப்பாண மக்கள் என்னிடமே வருகிறார்கள்” – வடமாகாண ஆளுநர் கவலை!

ekuruvi-aiya8-X3

rejinold55யாழ்ப்பாண மக்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடமே வருகின்றார்கள். நான் அமைச்சரும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. ஒரு ஆளுநர் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆளுநரிடம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கு வேலை கொடுப்பது மாகாண சபையினதும், மத்திய அரசாங்கத்தினதும் கடமையாகும். எனக்கு அந்த கடமை இல்லை.

முன்னர் இவ்வாறான பிரச்சினை தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. தொண்டர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை கோருவதையே அறிந்திருக்கின்றேன்.

இப்போது 1 மாத காலமாகவே பட்டதாரிகள் தமது நியமனம் தொடர்பாக போராட்டம் நடத்துவதை அறிந்திருக்கிறேன்.

மேலும் வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான என்னோடு பேசினார்கள்.

இதனடிப்படையில் பட்டதாரிகளுடைய எண்ணிக்கையை எடுக்கும்படி உத்தியோகஸ்த்தர்களுக்கு கூறி அந்த எண்ணிக்கையை பெற்றிருக்கிறேன்.

காரணம் சிலர் சில சமயங்களில் வருவார்கள், சில சமயங்களில் வருவதில்லை. எனவே அந்த எண்ணிக்கை எனக்கு கிடைக்கப் பெற்றிருக்கும் நிலையில் சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றேன்.

அவர்கள் தங்கள் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பான தகவல்களை எமக்கு வழங்கும்படி கேட்டுள்ளேன்.

அந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கலாம். மேலும் நான் அரசியல்வாதி அல்ல. யாழ்ப்பாணத்தில் வடமாகாண சபை உள்ளது. அங்கே அமைச்சர்களும் உள்ளார்கள். ஆனால் எல்லோரும் என்னிடம் வருகிறார்கள். என்னால் இயலுமானவற்றை நான் செய்கிறேன்.

இதேபோல் 1300 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும்.

அதேபோல் 800 சுகாதார தொண்டர்கள் மற்றும் 35 முன்னாள் போராளிகளான பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படும்.

எனவே எல்லோருக்கும் ஒரு தடவையில் வேலை வழங்க இயலாது. மேலும் தமது வேலைகள் பிரச்சினைகளுக்காக வருபவர்கள் தங்கள் பிரச்சினை முடிந்தவுடன் சென்று விடுகிறார்கள். நன்றி கூட சொல்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment