முதல்–அமைச்சரும், அமைச்சர்களும் பொறுப்பில் இருந்தால், நியாயமான விசாரணை நடக்காது

ekuruvi-aiya8-X3

stalin_20சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது குறித்து சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல்–அமைச்சரின் பதில் எங்களுக்கு திருப்தியை தரவில்லை. அதுமட்டுமல்ல, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது யாரென்று கேட்டால் காவல்துறை தான். அந்த காவல்துறை யாருடைய கையில் இருக்கிறது என்றால், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கையில் உள்ளது. ஆனால், வழக்கில் முதல் குற்றவாளி யாரென்றால் அதே முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் இருக்கிறார். எனவே, அவரைப்பற்றி அவரே விசாரிக்க முடியுமா? அவர் மட்டுமல்ல, அமைச்சர்கள் 9 பேரும் இதில் இடம்பெற்று இருக்கிறார்கள்.அதுமட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தில் பல அமைச்சர்கள் மீது வழக்குகள் போட உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கில், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்படி பல அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின் போது, அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்த 3 அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் போன்ற அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது. இப்போது முதல்–அமைச்சர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளை எல்லாம் முறையாக விசாரிக்க வேண்டும் என்றால், காவல்துறையை கையில் வைத்துக் கொண்டுள்ள முதல்–அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் பொறுப்பில் இருந்தால், நியாயமான விசாரணை நடைபெறாது.  இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், தி.மு.க. காணாமல் போய்விடும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே? என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், ‘யார் காணாமல் போகப்போகிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். விமான நிலையங்களில் பேட்டி கொடுப்பதற்காகவே, ஒரு மத்திய மந்திரியை போட்டு வைத்திருக்கிறார்கள். அதில் புகழ்பெற்றவர் பொன்.ராதாகிருஷ்ணன்’ என்றார்.

Share This Post

Post Comment