ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி! – பழனிசாமி அணி

Facebook Cover V02

edapaddi_05ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க. அம்மா அணியும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைவதற்கான வாய்ப்புகள் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தினகரனுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானமும், ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மத்துக்கு விடை காண நீதி விசாரணை நடத்தப்படும் என்ற அறிவிப்பும் அ.தி.மு.க.வின் இரு அணிகளை நெருங்க செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் சாதகமான அறிவிப்புகளை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினர் நேற்று இரவே ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டனர். அப்போது ஓ.பி.எஸ். தரப்பில் 6 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

1. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் தர வேண்டும்.

2. ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பாக உள்துறை இலாகாவை ஒதுக்க வேண்டும்.

3. நிதித் துறையை தர வேண்டும்.

4. பொதுப்பணித் துறையையும் விட்டுக் கொடுக்க வேண்டும்.

5. கட்சி, ஆட்சியை வழி நடத்தும் குழுவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை தலைவராக நியமனம் செய்ய வேண்டும். 7 பேர் கொண்ட அந்த குழுவில் தலா 3 பேர் இரு அணிகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

6. அமைச்சரவையில் உள்ளவர்களில் 15 பேர் ஓ.பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகள் பற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஓ.பி.எஸ். அணியினரின் சில கோரிக்கைகளை ஏற்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி துணை முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு விட்டுக்கொடுக்க சம்மதிக்கப்பட்டது. அதுபோல நிதித்துறையையும் ஓ.பி.எஸ். அணியினருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் பொதுப்பணித் துறையை ஓ.பி.எஸ். அணிக்கு கொடுக்க எடப்பாடி அணியினர் தயக்கம் தெரிவித்துள்ளனர். அதுபோல உள்துறை இலாகாவை ஓ.பி.எஸ்.சுக்கு ஒதுக்கும் கோரிக்கைக்கும் தயக்கம் தெரிவித்துள்ளனர்.

கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தும் குழுவுக்கு 7 பேர் என்பதற்கு பதில் 9 பேராக நியமிக்க எடப்பாடி தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 9 பேரில் 4 பேர் தங்களது அணியினரே சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்று சிறு சிறு வி‌ஷயங்களில் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் சுமூகமாக முடிவு எட்டப்படும் என்று இரு அணி தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Share This Post

Post Comment