தயாரிப்பாளரும், வசனகர்த்தாவுமான பஞ்சு அருணாச்சலம் காலமானார்

ekuruvi-aiya8-X3

panchu-arunachalamபிரபல தயாரிப்பாளரும், வசனகர்த்தாவுமான பஞ்சு அருணாச்சலம் சென்னையில் இன்று (9.8.16) காலமானார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பஞ்சு அருணாச்சலம். காரைக்குடி அருகில் சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்த பஞ்சு அருணச்சாலம், சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்பத்தில் கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக பணியாற்றினார். 1974-ஆம் ஆண்டு ‘எங்கம்மா சபதம்’ என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து ‘மயங்குகிறாள் ஒரு மாது’, ‘அவன்தான் மனிதன்’, ‘துணிவே துணை’ உள்ளிட்ட படங்களுக்கு தொடர்ந்து வசனகர்த்தாவாக பணியாற்றினார். ‘அன்னக்கிளி’ படத்துக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியபோது அந்த படத்துக்கு பாடல்களையும் அவரே எழுதினார். அப்படத்தின் மூலமாக இளையராஜா அறிமுகப்படுத்தியது பஞ்சு அருணாச்சலம்தான்.

அதைத் தொடர்ந்து 1977-ஆம் ஆண்டு ‘என்ன தவம் செய்தேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், ‘சொன்னதை செய்வேன்’, ‘மணமகளே வா’, ‘புதுப்பாட்டு’, ‘தம்பி பொண்டாட்டி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். மேலும், ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘பிரியா’ படத்தை பி.ஏ. புரொடக்ஷடன் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து, தயாரிப்பாளராக களமிறங்கினார். தொடர்ந்து ‘ஆறிலிருந்து அறுபதுவரை, ஜப்பானில் கல்யாண ராமன், குரு சிஷ்யன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

மேலும், பாண்டியன், தர்மதுரை, ராஜாதி ராஜா, குருசிஷ்யன், பாயும்புலி, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை உள்ளிட்ட ரஜினியின் பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்த பஞ்சு அருணாச்சலம், கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பஞ்சு அருணாச்சலம் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. பஞ்சு அருணாச்சலத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment