யாழ்.பல்கலைகழக கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பம் – ஜனாதிபதி பிரதமருக்கு ஒரு மாத கால அவகாசம்.

ekuruvi-aiya8-X3

univ-of-jaffna-450x301யாழ்.பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் இன்று புதன் கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் கடந்த 20ம் திகதி நள்ளிரவு பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர்.

உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கோரி பல்கலைகழக மாணவர்கள் விரிவுரைகளை பகிஸ்கரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் கொழும்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை மாணவர்கள் சந்தித்து பேச்சுக்களை நடாத்தி இருந்தனர்.

அதன் போது மாணவர்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர் எனவும், அவர்கள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என அவர்கள் மீதான நம்பிக்கை காரணமாக தாம் போராட்டத்தை கைவிட தீர்மானித்து உள்ளதாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்.பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலைபீட மாணவர் ஒன்றிய தலைவர் ரஜீவன் தெரிவிக்கையில் ,

எம்மால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஏற்றுக் கொண்டு உள்ளனர். அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு நாம் விரிவுரைகளுக்கு செல்ல தீர்மானித்து உள்ளோம். அதனால் இன்று புதன் கிழமை முதல் பல்கலைகழக கல்வி செயற்பாடுகள் நடைபெறும்.

நஷ்டஈடு வழங்கப்படும்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

அனுராதபுரத்திற்கு மாற்ற அனுமதிக்கோம்.

மாணவர்களின் படுகொலை தொடர்பான நீதி விசாரணைகள் அனுராதபுரத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக, செய்திகள் வெளியாகி இருந்தன.

மாணவர்கள் படுகொலை தொடர்பான நீதி விசாரணைகள் யாழ்ப்பணத்தில் தான் நடைபெற வேண்டும். உயிரிழந்த மாணவர்களின் குடும்பம் மிகவும் வறுமைப்பட்ட குடும்பம் அதனால் அவர்கள் வழக்கு தவணைகளுக்காக அனுராதபுரம் சென்று வருவது கடினம். எனவே மாணவர்கள் படுகொலை தொடர்பான நீதி விசாரணைகள் அனைத்தும் யாழ்ப்பானத்திலையே நடைபெற வேண்டும்.

ஒரு மாதத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றபடாவிடின் மீண்டும் போராட்டம்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் மாணவர்கள் படுகொலை தொடர்பான நீதி விசாரணை துரித கெதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி இருந்தோம். அதன் பிரகாரம் ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எமக்கு உறுதி அளித்து இருந்தார்.

அத்துடன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கப்படவேண்டும் என கோரி இருந்தோம். எமது இந்த கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நிறைவேற்றுவார்கள் என எதிர்ப்பர்க்கின்றோம். ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் நாம் அதன் பின்னர் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என மேலும் தெரிவித்ததனர்.

Share This Post

Post Comment