படுவானும் நானும்

ekuruvi-aiya8-X3

paduvan

பச்சை கண்டால்
இச்சை ஊறும்
படுவானே உனை
பகைவனும் தொழுவானே.

வீரத்தின் உறைவிடமாகவும்
விளை நிலத்தில் உயர்நிலமாகவும்
பண்புற்ற தமிழ்மாந்தர்
வாழும் ஈழத்தின்
பவித்திர பூமியாகவும்.
விளங்கும் படுவான்கரை மண்ணை
நினைக்கையில் நெஞ்சுரத்தின் தடாகத்தில்
பல நினைவுகள் நீச்சலடிக்கிறது…!!

வற்றாத நீர் நிலையும்
வளம் கொளிக்கும்
மண்ணின் புகழையும்
பற்றாக நான் இருந்து
பல கவிகள் பாடினாலும்.
மனதில் புற்றாக முளைக்கிறது
புதிய வரிகள்…!!

மை சிந்தும் பேனாவின் வரிகளுக்குள்
அடக்கி விட முடியாது
எம் மண்ணின் பெருமையை…!!

நிலவு மகள் பாய் விரிக்க
நீல் வானம் நதிகள் தொட
புலராத பொழுதினிலும்
மனதில் மலரும் எம் மண்ணின்
இனிமையான நினைவுகள்…

மனதில் வேரூன்றி நிற்கும்
எம் மண்ணின் பசுமையான
நினைவுகளை மீட்டுப் பார்க்கையில்…….
வரண்ட நிலத்தில் மழை
பெய்தாற் போல்
மனமெனும் வயலில் பல
வரிகள் முளைக்கிறது…

தொடு வானம் துகில் களைய
நெடு வானில் நீலமதை
கருமேக இருள் சூழ…

மாரி மழை பொழிய
மதுரங்கிளி புதர் தேட
கோணிய முகத்துடன்
கொக்குகள் குரவையிட
நாணிய முகத்தோடு நங்கை
அவள் உடல் நனைய.

குளிர்ந்த தேகத்தோடு கொடிஇடையாள்
நடை பயில வீசிடும் தென்றலில்
விளைந்த நெற் கதிர்கள்….
ஊசித்தூற்றலில் உரசி நின்று
கதை பேச….

மயில்கள் நடனமிட
வான் கோழி வாழ்த்துரைக்க
வாழை பலா தென்னை என
வழங்குன்றாத் தேசத்தில்…

தோன்றினான் என் பிரான்
சோலையூரின் சன்னிதியில்
கூடி நின்று நாம் தொழவே
கோடி இன்பம் நல்கிடுவான்
கொக்கட்டிச் சோலையூரின்
தான் தோன்றி ஈசனவன்…!!!

பட்டிப் பழையில் புலி
பதுங்கிய காரணத்தால்
கொட்டி ஊர் எனக்
கொடியவன் அளைக்க.
தோட்டாக்கள் விளைந்த
நிலத்தில் துப்பாக்கிகள்
கதை பேச.

பட்டி தொட்டி எங்கும்
வீரப் பறைசாற்றும் படுவானே
உனைப் பகைவனும் தொழுவானே..!!!

-நிதா கரன் கதிகரன்

Share This Post

Post Comment