ஓ.பன்னீர்செல்வத்துடன் 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் சந்திப்பு ஜெயலலிதா செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார்

ekuruvi-aiya8-X3

OPS_ambassidorsமுன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், பின்லாந்து நாட்டு தூதர் நினா இர்மெலி வாஸ்குன்லத்தி, ஐஸ்லாந்து நாட்டு தூதர் தொரிர் இஸ்பென், நார்வே நாட்டு தூதர் நில்ஸ் ரக்னார் கம்ஸ்வாக், சுவீடன் நாட்டு தூதர் ஹரால்ட் சான்ட்பெர்க் மற்றும் தூதரக அதிகாரிகளான பி.சிதம்பரம், ஆர்.ஸ்ரீதரன், சுரேஷ் மாதவன் ஆகியோர் நேற்று மாலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்திக்க வந்த அயல்நாட்டு தூதர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரையிலும் சுமார் 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. மக்களின் நலனுக்காக ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள், தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், க.பாண்டியராஜன் ஆகியோரும் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

ஓ.பன்னீர்செல்வத்தை பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன் நாட்டு தூதர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்து பேசினர்.

‘‘அடிப்படை வசதிகளை அனைத்து மக்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழும் வகையில் தமிழகத்தை ஒரு முன் மாதிரியான மாநிலமாக மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். இந்தியாவில் தமிழகம் மட்டுமே இந்த வசதிகளை ஜெயலலிதா முயற்சியால் பெற்றிருந்தது’’ என்று ஓ.பன்னீர்செல்வம் தூதர்கள் குழுவினரிடம் குறிப்பிட்டார்.

இலவச கால்நடை, இலவச அரிசி, திருமணத்தின்போது மணமகளுக்கு இலவச தங்கம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா பச்சிளம் குழந்தைகள் உபகரணம், மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்–டாப், சைக்கிள் உள்ளிட்ட சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்காக தமிழகத்தில் ஏழை மக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களையும் அவர் தூதர்கள் குழுவினரிடம் பட்டியலிட்டார்.

அம்மா உணவகத்தில் மலிவு விலையில் சுடச்சுட உணவு வழங்கி வருவதையும் அவர் குறிப்பிட்டார். ஒரு அமெரிக்க டாலர் இருந்தால் அம்மா உணவகத்தில் ஒரு வாரத்துக்கு 3 வேளைகளும் சாப்பிடலாம் என்றும், அம்மா உணவகம் திட்டம் தமிழக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment