மாவீரர்கள் மீதான சத்தியம்!

மாவீரர்கள் மீதான சத்தியம்!

நவம்பர் 27, மாலை 06.05,

“…தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே….” எனும் உயிர் உருக்கும் கீதம் ஒலிக்க, கார்த்திகை மாத மழையையும் குளிரையும் தாண்டி வீறுட்டு எழுந்து எரியும் தீபங்களில் எமது உறவுகளைக் காண்கின்ற தருணம் இது.

எமக்காக இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிரையும் அஞ்சலிப்பது என்பது எங்கள் ஒவ்வொருவரதும் பெருங்கடமை. அதுவும், வாழும் வயதில் அனைத்துக் கனவுகளையும் கைவிட்டு, தாயகக் கனவினை மாத்திரம் நெஞ்சில் ஏந்தியவர்களின் தியாகம் என்பது எம்மிடம் அஞ்சலிப்பதற்கான தருணத்தை மாத்திரமல்ல பெரும் பொறுப்புக்களையும் வழங்கியிருக்கின்றது. மாவீரர் நாளுக்காக கூடினோமா, தீபங்களை ஏற்றி அஞ்சலித்தோமா, காலைந்தோமா என்கிற நிலைக்கு அப்பால், எங்கள் ஒவ்வொருவர் மீதும் தார்மீக ரீதியிலான கேள்விகளையும் எழுப்ப வைக்கும் நாள் இது.

ஏன் இத்தனை ஆயிரம் உறவுகள் தமது உயிர்களை எமக்கான ஈய்ந்தார்கள்? அவர்களின் உயிர்வலியை தியாயமாக அவர்கள் ஏற்க காரணங்கள் என்ன?, என்பது பற்றியெல்லாம், ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் உணர்ந்து வைத்திருக்க வேண்டும். தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆரம்பமும் தற்போதையை நீட்சியையும் மாத்திரமல்ல, அதன் ஒவ்வொரு கண மாற்றங்களையும் அதன் உண்மைத்தன்மையோடு அறிந்து வைத்திருப்பதுதான், எமது இனத்துக்கு எதிரான தாக்குதல்களை எதிர்கொண்டு நிற்க உதவும். மாறாக, மாவீரர் நாளுக்காவோ அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காகவோ கூடுவதால் மாத்திரம், எமது உரிமைகளையும் எமக்காக நிகழ்த்தப்பட்ட தியாகங்களையும் நாம் முழுமையான உணர்ந்துவிட முடியாது.

தாயகத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்கள இராணுவம் சிதைத்து அழித்துவிட்டது. ஆனாலும், சிதைவுகளிலிருந்தும் எழுந்து வருவோம் என்கிற நம்பிக்கையை அடக்கு முறைக்கு மத்தியிலும் தாயக மக்கள் நிலைநாட்டி வருகிறார்கள். சிங்களப் புலனாய்வாளர்களும், இராணுவமும் சுற்றியிருக்க, கல்லறைச் சிதைவுகளை ஒன்றாக்கி, அதில் மாவீரர்களை காணுகின்ற தருணத்தில், எமது போராட்ட வரலாற்றையும் அதன் நீட்சியையும் இளம் தலைமுறையிடம் கடத்துகின்ற நிலைமை காணப்படுகின்றது.

அவ்வாறானதொரு நிலையை, புலம்பெயர் தேசங்களிலுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் காலத்திலும், அதற்குப் பின்னரும் பிறந்த எமது பிள்ளைகளை மாவீரர்களின் தியாகங்களை அதன் உண்மையான வடிவோடு உணரப்பண்ண வேண்டும். அதில், தர்க்க நியாயங்களை சொல்லி வளர்க்க வேண்டும். அதுதான், எமது போராட்டத்தின் அடுத்த கட்டங்களில், தாயக மக்களோடு இணைந்து பயணிப்பதற்கான ஈடுபாட்டையும் கடமையையும் அவர்களிடம் கொண்டு சேர்க்கும்.

எமது உரிமைப் போராட்டத்தை எந்தவொரு காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்காமல் முன்னெடுப்பதே மாவீரர்களின் ஆன்மாக்கள் மீது நாம் செய்துகொள்ளும் சத்தியமாக இருக்க வேண்டும். இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்குமான நியாயத்தை எமக்கான நீதியைப் பெறுவதினூடு நாம் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். அப்போதுதான், மாவீரர்களின் ஆன்மாக்கள் ஆனந்தமாக உறங்கும்.

மாவீரர் நினைவுகளைச் சுமந்து கொண்டு பிரிவினைகளைக் கடந்து நாம் ஒன்றாக எழுந்து வருவோம். போராடுவோம். உரிமையை மீட்டெடுப்போம். அது, ஓங்கி எழுந்து எரியும் தீபங்களின் மீதான ஆணையாக இருக்கட்டும்.


Related News

 • ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…
 • ad
 • முள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு
 • மாவீரர்கள் மீதான சத்தியம்!
 • தமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”
 • தாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே ?
 • அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்
 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *