இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை.- பாமயன்

innum
தமிழ் நாட்டிலிருந்து இயற்கை விவசாயி பாமையன் தலைமையிலான குழுவினர் இலங்கையின் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று “இயற்கை விவசாய வாரம் ” ஜனவரி 08 இலிருந்து 14 வரை மக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளை நடத்தினார்கள் . அது தொடர்பாக பாமையன்  அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை

கடந்த டிசம்பர் மாதத்தில் நள்ளிரவில் ஒரு தொலைபேசி அழைப்பு. வழக்கமாக இரவுத் தொலைபேசி என்றாலே சற்று அச்சமாக இருக்கும். அந்த எண் வெளிநாட்டு எண் போல இருந்தது. உண்மைதான். கனடாவில் இருந்து அழைப்பு. ‘வணக்கமையா! நான் நவஜீவன், உங்களோடு கொஞ்சம் கதைக்கலாமோ!’ ஈழத் தமிழர் ஒருவரின் குரல்போல எனக்குத் தென்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஓசை காளிதாசன் ‘உங்களை வேளாண்மைப் பயிற்சிக்காக கனடாவில் இருந்து ஒருவர் அழைப்பார்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த நினைவு வந்ததும் சற்று சுதாரித்துக் கொண்டு ‘ சொல்லுங்கள் அய்யா!’ என்றேன். அவர் விளக்கத் தொடங்கினார்.

இப்படித்தான் எனது அல்ல எங்களது இலங்கைப் பயணத் திட்டம் தொடங்கியது. கடந்த திசம்பர் மாதம் கருவான இந்தத் திட்டம், மெல்ல மெல்ல உருவாகி 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் முன்றாம் நாள் விமானத்தில் ஏறுவதாக அமைந்தது. எங்களுடைய குழுவில் மூத்த இயற்கை வேளாண்மை வல்லுநர் சுந்தரராமன், மண்புழு வித்தகர் ரவி, ஒருங்கிணைத் பண்ணையாளர் சதுரகிரி, இளம் இயற்கை வேளாண்மையாளர் கஜேந்திர மூர்த்தி இவர்களுடன் நானும் புறப்பட்டேன். எங்களுக்கு உறுதுணையாக இளம் வழக்கறிஞர் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்குமார் ஆகிய ஏழு பேர்களுடன், மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணப்பட்டோம். வழக்கமாக பலவிதமான கேள்விகள் கால நீட்டிப்புகள் ஆகிய சிக்கல்களை முதலிலேயே சந்தித்தோம். கஜேந்திரன் கடவுச் சீட்டில் சிறு குழப்பம், அதைச் சரி செய்து ஒரு வழியாக ஏர் லங்கா வானூர்தியில் அமர்ந்தோம். சற்று நேரத்தில் இடுப்புப் பட்டையைக் கட்டியவுடன், தின்க ஏதோ ரொட்டியும், செயற்கைப் பழச்சாறும் கொடுத்தார்கள். தின்று முடிப்பதற்குள் கொழும்பு பண்டார நாயகா விமான நிலையம் வந்துவிட்டது…! ‘ஏறினேன், இறங்கினேன்’ என்று சொன்னதுபோல மிகச் சடுதியாக இலங்கை வந்துவிட்டது. கடல் சூழ்ந்த பச்சைத் தீவு. ஆனால் காலத்தின் கோலத்தால் ரத்தம் சிந்திய சிவப்பான தீவு.

விமான நிலையத்தில் சிறிது நேரம் காத்திருக்க வைக்கப்பட்டோம். பின்னர் அனுமதி கிடைத்தது. கொழும்பில் இருந்து இரவுப் பயணமாக யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டடோம். மிக நீண்ட பயணம். ஒரு மூடுந்தில் (வேன்) எங்கள் பயணம் தொடர்த்து. வழி எங்கும் காவல்துறை கண்காணிப்பு கடுமையாகவே இருந்தது. ஒரு வழியாக இரவு இரண்டு மணியளவில் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்ற இடத்தில் உள்ள மர்கோசா என்ற தங்கும் இல்லத்தை சேர்த்தோம். அந்த இல்லம் பெரியதொடு நாலுகட்டு வீடு. இதை நாச்சியார் வீடு என்று இங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். தமிழ்நாட்டு செட்டிநாடு வீடுகளைப் போன்ற அமைப்புக் கொண்டது.

2 (1)காலயில் விரைவாகவே அனைவரும் குளித்தெழுந்து தயாரானோம். புட்டும் அப்பமும் நல்ல உணவாக அங்கிருந்த சமையல்காரத் தம்பிகள் தயாரித்து வைத்தனர். சிறப்பான உணவு. காலை உணவு முடித்து அனைவரும் குழுப் படம் எடுத்துக்கொண்டோம். இ-குருவி அய்யா நிறையப் படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டே இருந்தார். மிகவும் ஆர்வமான திறமையான புகைப்படக் கலைஞர் அவர். அவரது காமிராக் கோணம் வியப்பாக இருச்கும். ஒன்றையும் விட்டுப் போகாமல் ஆவணப்படுத்தி வந்தார்.

தெள்ளிப்பளை என்ற இடம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இடம். அங்கு மானுடம் என்ற அமைப்பு சமூகப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பொறுப்பாளர் DR நத்த குமார் என்ற ஒரு மருத்துவர். அவர் இயற்கை வேளாண்மையின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். புதிய வெளிச்சத்துடன் அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். இதில் சுவீடன் நாட்டில் இருந்து வருகை புரிந்திருந்த பேராசிரியர் ஸ்ரீஸ்கந்த ராசா அவரது துணைவியார் பேராசிரியர் ஸ்ரீதேவி ஆகியோரும் இணைந்து கொண்டனர். பேராசிரியர்கள் இருவரும் வேளாண்மையில் ஆராய்ச்சி செய்தவர்கள். இதற்கிடையில் இருக்கின்ற வளவர்களை வைத்துக் கொண்டு இரண்டு கூட்டங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நவஜீவன் திட்டமிட்டார். அதன்படி ஒருவர் முதல் இடத்தில் பேசி முடித்தவுடன் அவர் புறப்பட்டு இரண்டாம் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு பேசி முடித்தவர் இவர் சென்ற வண்டியில் திரும்பி முதலாம் இடத்திற்கு வந்து பேச வேண்டும் என்று ஏற்பாடு செய்து இரண்டு கூட்டங்களை ஒரே நேரத்தில் முடித்தோம். நான், பேராசிரியர் தெள்ளிப்பளையில் பேசிவிட்டு, கந்தர் மடம் என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கு பேசிய சுந்தரராமன் தெள்ளிப்பளை வந்தார். பின்னர் நான் களப்பயிற்சிக்கு தெள்ளிப்பளை வந்தேன். இதேபோல ரவியும், சதுரகிரியும், கஜேந்திர மூர்த்தியும் மாறிக்கொண்டார்கள்.

2 (16)தெள்ளிப்பளையில் ஏறத்தாழ 150 பேர்கள் கலந்து கொண்டார்கள். ஆர்வமுடன் பெண்கள் பங்கெடுத்தார்கள். படித்த பெரியவர்கள், விவசாயிகள் என்று நல்லதொரு தொடக்கமாக அந்த நிகழ்வு இருந்தது. மாலை செய்முறைப் பயிற்சியில் பெண் ஆசிரியர் ஒருவரும் ஒரு இளைஞரும் ஆர்வமுடன் சாணத்தைக் கரைத்து இயற்கை இடுபொருள் கரைசல்களைத் தயாரித்தனர்.

நல்லூர் கந்தர் மடத்தில் உள்ள பண்பாட்டு மையத்தில் உள்ள அரங்கில் முகாம். அவர்களது வளாகமே பெண்களால் உருவாக்கப்பட்டிருந்தது. கூரை வேய்ந்த அரங்குகளே இருந்தன. சாணம் மெழுகி, கோலமிட்டு பண்பாட்டு அடையாளங்களைப் பறைசாற்றும் முகமாக அந்த இடம் அமைந்திருந்தது. பலர் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றனர். பத்திரிகைகள் வந்து செய்தி எடுத்துக் கொண்டன.

IMG_0329அடுத்த நாள் அதாவது சனவரி ஐந்து. இன்று எந்தக் கூட்டமும் திட்டமிடப்படவில்லை. எனவே அனைவரும் யாப்பாண மாவட்டத்தின் முக்கிய இடங்களைப் பார்வையிடலாம் என்று திட்டமிட்டுப் புறப்பட்டோம். முதலில் நல்லூர் முருகன் கோயில் சென்றோம். மிகவும் பழைமையான கோயில். மிகவும் நேர்த்தியாகப் பராமரித்து வருகின்றனர். தமிழகத்துக் பெருங்கோயில்களை ஒப்பிடும் அளவு சிற்பங்கள் இல்லை என்றாலும் அந்தக் கோயிலின் வனப்பு நெஞ்சை அள்ளுவதாகவே இருந்தது. சட்டையைக் கழற்றிச் செல்லும் முறை அங்கேயும் உள்ளது. கோயில் தூய்மையாகப் பேணப்படுகிறது. அதற்கு வெளியே திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த இடத்தைப் பார்த்தோம். அவரது நினைவுத் தூண் உடைத்துப் போடப்பட்டிருந்தது. அதன் எச்சங்கள் ஆங்காங்கே கிடந்தன. அதன் பின்னர் தொண்டமனாறு என்ற கடற்கரைக் ஊரில் அமைந்துள்ள வேல் கோயில் பார்த்தோம். அங்கு முருகன் சிலை இல்லை. வேல் மட்டுமே உள்ளது. மிகப் பழமையான கோயில் என்று கூறினார்கள். இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் இருபத்து நான்கு மணி நேரமும் அன்னதானம் செய்யப்படுவதாகவும் மக்கள் கூறினார்கள். அங்கு ஆசியக் கண்டத்திலேயே பெரிய தேர் ஒன்றைச் செய்துள்ளார்கள், இந்தியாவில் இருந்து சிற்பிகள் பலர் சென்று அந்தத் தேரை உருவாக்கியிருந்தார்கள். ஆனால் அந்த அழகிய தேர் சிங்கள ராணுவத்தால் தீ வைத்து எரிக்கப்பட்டுவிட்டது. மறுபடியும் தேர் செய்வதற்கான முயற்சிகளை அங்குள்ள மக்கள் எடுத்து வருகின்றனர். கூட்ட நெரிசல் மிக்க, பக்தர்கள் நிரம்பி வழியும் கோயிலாக அக்கோயில் திகழ்கிறது. யாப்பாணத்தில் பத்தடிக்கு ஒரு கோயில் என்ற முறையில் எங்கும் கோயில்களைக் காண முடிகிறது.

methamirkirathuபின்னர் வல்வட்டித்துறை என்ற ஊருக்கு வந்தோம். கடல் தாலாட்டும் ஒரு சீறூர். தமிழீழ விடுதலைப்போரில் மிக முக்கிய பாத்திரம் வகித்த ஊர்களில் இது முதன்மையானது. மிகச் சிறிய ஊர் என்றாலும் நேரான தெருக்கள். பெரிய வீடுகள். உள்ளேயே கிணறுகள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஊர்கள் எப்படிக் காணப்பட்டனவோ அப்படி அந்த ஊர் அமைந்திருந்தது. போரின் அழிவுகள் மிக மோசமாகக் காணப்பட்டன. போர் முடிந்த பின்னரும் அந்த ஊர் அடித்து நொறுக்கப்பட்டதாக மக்கள் கூறினார்கள். காரணம் அந்த ஊரில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்து வளர்ந்துள்ளார். அவர் தவிர கிட்டு, மாத்தையா போன்ற முக்கியமான தளபதிகளை அந்த ஊர்தான் கொடுத்துள்ளது. பத்து வீடுகளுக்கு ஒரு வீடு என்ற முறையில் உயிர்பெற்று வருகின்றன. பல வீடுகள் நொறுக்கப்பட்டு இடிந்து கிடக்கின்றன. முட்புதர்களும், மரங்களும் வளர்ந்து கிடக்கின்றன. வீட்டுக்குச் சொந்தக்காரர் எந்த நாட்டில் இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. இனம் புரியாத சோகம் மனதைக் கவ்வியது. பிரபாகரன் படித்த சிதம்பரம் கல்லூரியின் அருகே ராணுவ முகாம் உள்ளது. பெரியதொரு முகாம் அது. அந்தச் சின்ன ஊரில் ஏன் அவ்வளவு பெரிய முகாம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அவர்களது அச்சம் அவ்வாறு உள்ளதென்று அறிய முடிகிறது. நாங்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மிக அருகே ராணுவ முகாமிலிருந்து ராணுவத்தினர் வியப்பாகப் பார்த்து கொண்டே இருந்தனர். பிரபாகரனின் வீடு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் அந்த இடத்தில் இருந்து வீரத்தின் அடையாளமாக மண்ணை எடுத்துக் கொண்டு போவார்களாம். அதனால் சினமுற்ற சிங்கள அரசு அரைகுறையாக உடைக்கப்பட்ட வீட்டை முற்றிலும் தோண்டிப் போட்டுவிட்டார்கள்.

2 (9)அக்கிராமம் முற்றுமுழுதாக விமான , செல் தாக்கங்களுக்கு உள்ளாகியிருந்தன ,அனைத்து வீடுகளிலும் பதுங்கு குழிகள் இருந்துள்ளன. இப்போது அவை தடை செய்யப்பட்டுவிட்டன. அந்தச் சுவடுகளை சில வீடுகளில் பார்க்க முடிந்தது. எஞ்சிய ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வீட்டுத் தோட்டம் உள்ளது. வல்லாரைக் கீரை கூட இங்கு மிகப் பெரியதாக இருந்தது. கிணறுகளின் நீர் மட்டம்  மிக அருகில் இருந்தது. பிரபாகரன் குடும்பக் கோயில் ஒன்று உள்ளது. அது மாரியம்மன் கோயில், மற்றது அவரது முன்னோர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில். அந்தக் கோயில் கிணற்றில் இருந்து நீர் இறைத்து முகம் கழுவிக் கொண்டோம். அந்த ஊரில் பெரும்பாலும் உறவினர்களாகவே உள்ளனர்.

அடுத்த நாள் சனவரி ஆறாம் நாள், மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற ஊர் சென்றோம். அதுவும் ஒரு கடற்கரை ஊர்தான். யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமையும் கடல் நீர் ஊடறுத்துச் சென்றுள்ளது. எனவே பல ஊர்களில் கடற்கரை மிக இயல்பாக அமைந்துள்ளது. கிராஞ்சியில் தம்பிபிள்ளை என்ற காந்திய ஊழியர் ஒருவர் ஒரு மையம் நடத்தி வருகிறார். அதன் பெயர் பிருந்தாவனம். நிறையத் தென்னை மரங்களும், பனை மரங்களும் நிறைந்த 40 ஏக்கர் பண்ணை அது. ஆனால் பராமரிப்பு இன்றிக் காணப்படுகிறது. அவருக்கு வயது 90க்கு மேல் ஆகிவிட்டது. அவரது துணைவியார் சரஸ்வதி அம்மையார். அந்தத் தள்ளாத வயதிலும் அவரது கையாலேயே எங்களுக்கு சிவப்பரிச் சோறும் வேறு சில பலகாரங்களும் செய்து விருந்தோம்பினார். அவர் அந்த ஊரில் உள்ள சில விவசாயிகளை வரவழைத்திருந்தார். நிறையப் பள்ளிப் பிள்ளைகள் வந்திருந்தார்கள். அவர்களுடன் இயற்கை வேளாண்மை குறித்து விரிவாகப் பேசினோம். அந்தப் பண்ணையை எப்படி வளர்த்து ஒரு பயிற்சி மையமாக அமைக்கலாம் என்பது பற்றி விவாதித்தோம். பின்னர் வருகை தந்தமைக்கு என்று தென்னங்கன்று ஒன்றை நட்டேன். கிணற்றில் நீர் மிக அருகில் இருந்தது. அங்கு உரையாடலை முடித்துக்கொண்டு திரும்பினோம். வழியில் ஒரு பழைய கோட்டை ஒன்றைப் பார்வையிட்டோம். போர்ச்சுக்கீசியர் கோட்டை என்றார்கள். அதை முதலில் விடுதலைப் புலிகள் கைப்பற்றியிருந்தார்கள். இப்போது அது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்குள்ளே ஒரு அருமையான தாமரைக் குளம் இருக்கிறது. அங்கு வெண்தாமரை மலர்கள் நிறைந்திருந்தன. புதிதாக புத்தர் கோயில் ஒன்றை நிறுவியுள்ளார்கள். ஆனால் அதை மக்கள் யாரும் வழிபடுவதாகத் தெரியவில்லை.
அன்று இரவு ‘டேன்’ என்ற தொலைக்காட்சியில் என்னை நேர்காணல் செய்தார்கள். ஒரு மணி நேரமாக நேரலையில் மக்கள் கேள்வி கேட்டும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். பலர் கேள்விகள் கேட்டார்கள்.
puthiya-velicham_without_logo- (6)அடுத்த நாள் முழுவதும் பல நிலங்களைப் பார்த்து மண் அமைப்பு, நீர் வளம் போன்றவற்றைத் தெரித்துகொள்ளும் பொருட்டு நாங்கள் அனைவரும் புறப்பட்டோம். எங்களுக்கு உதவ அரசு வேளாண் திணைக்களத்தில் இருந்து குகநாதன் என்ற அன்பர் வந்திருந்தார். மிக அருமையான, அன்பான மனிதர். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவர் எங்களுடன் தொடர்ந்து அனைத்துக் கூட்டங்களுக்கும் வந்திருந்தார். பல உதவிகளைச் செய்து கொடுத்தார். செம்மண் அதிகம் காணப்பட்டது, சில இடங்களில் மணற் பாங்கான மண்ணமைப்பு இருந்தது. சுந்தரராமன் பல பூச்சிகளின் தன்மைகளை விளக்கினார். அரசின் ஆராய்ச்சி மையங்களுக்குச் சென்றோம். ஞாயிற்றுக் கிழமையாதலால் ஊழியர்கள் பெரிதும் இல்லை என்றாலும் குகநாதன் உதவியால் அனைத்தையும் காண முடிந்தது. பிற்பகல் நிலாவரைக் கிணறு என்ற இடத்தைப் பார்வையிட்டோம். இயற்கையாக ம¬அந்த வற்றாத கிணறு. நன்னீரும் உப்புநீரும் இருக்கும் அதிசயக் கிணறு. 150 அடி ஆழத்திற்கு மேல் உள்ளதாக எழுதி இருந்தது.
மாலை திருநாவுக்கரசர் மாதிரிப் பண்ணை என்ற ஒரு இயற்கை வேளாண்மைப் பண்ணையைப் பார்த்தோம். அந்தப் பண்ணையின் உரிமையாளர் தமிழகத்தோடு நல் தொடர்பில் உள்ளவர். ஆடுகள், கோழிகள் என்று ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ளார். அவருக்கு கரைசல் செய்வது பற்றிக் கூறினோம். மாமரத்தில் அருமையான ஒட்டு முறையைக் கடைப்பிடித்து வருகிறார். அவரது கவாத்து முறை மிகச் சிறப்பாக இருந்தது. இரவு நேரமாகிவிட்டதால் திருப்பினோம். ஆனாலும் வழியில் காங்கேசன்துறை சென்று கலங்கரை விளக்கத்தைப் பார்த்த பின்னர் திரும்பினோம்.
முறையான பயிற்சிகள் எட்டாம் தேதியில் இருந்துதான் தொடங்கின. முதலில் தென்னிந்திய திருச்சபையின் கீழ் அமைந்திருந்த வேளாண்மை பயிற்சி நிலையம் ஒன்றில் பயிற்சி முகாம் நடைபெற்றது. 150 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். வேளாண்மை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பல இடங்கள் சிதிலமடைந்து காணப்பட்டன. போரினால் பல இடங்கள் உடைந்து விட்டது என்றும் பல நூல்கள் எரிந்து போய்விட்டதாகவும் கூறினார்கள், அப்படி எரிந்தபோதும் அவர்கள் வேளாண்மை குறித்து வெளியிட்ட நூல்களில் நான்கை எனக்குக் கொடுத்தார்கள். அந்த நூல்களின் ஓரங்கள் சிதைந்து காணப்பட்டன. எனக்கு கண்களில் நீர் பனித்தது.
ஒன்பதாம் தேதி யாழ்ப்பாண மாவட்டம் முடித்து கிளிநொச்சி மாவட்டம் நோக்கிச் சென்றோம். கிளிநொச்சி வேளாண்மைப் பல்கலைக் கழகம் சென்றோம். ரணமடுவு என்ற இடம். அறிவியல் நகரம் என்று பெயர் வைத்திருந்தார்கள். அந்த அறிவியல் நகரை விடுதலைப்புலிகள் உருவாக்கியுள்ளார்கள். கட்டிட அமைப்பு யாவும் தமிழர் கட்டிடக் கலை வடிவத்தில் இருந்தது. கோயில்களில் உள்ள தூண்கள் போல உருவாக்கியிருந்தார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர். சரியான மழை கொட்டியது. பிற்பகல் வரை அனைவரும் ஆர்வமாககக் கேட்டனர். குறிப்புகள் எடுத்துக் கொண்டனர். ரஞ்சிதன் என்ற அன்பர் இந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செய்திருந்தார்.
பத்தாம் நாள் மன்னார் மாவட்டம் தட்சிண மருத மடு மகாவித்தியாலயம், பலம்பிட்டி என்ற ஊரில் பயிற்சி முகாம். மிகவும் எளிமையான அமைதியான கிராமம். ஏராளமான பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர். அரங்கு நிரம்பி வழிந்த கூட்டம். மாணவர்கள் எங்களுக்கு மாலை அணிவித்து, திலகமிட்டு வரவேற்றார்கள். பெண் குழந்தைகள் நடனமாடினர். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. பெண்கள் குழு ஒன்று இயற்கை வேளாண்மையை கூட்டாகச் செய்து வருவதைத் தெரிவித்தார்கள். கலையரசி அமிர்தலிங்கம் என்ற பெண் எவ்வாறு கரைசல் செய்வது என்பதை விளக்கிக் கூறினார். அவர்களது பண்ணையைப் பார்த்தோம். அரசு குறிப்பிட்ட இடத்தை அவர்களுக்கு ஒதுக்கி இருக்கிறது. மேலும் எவ்வாறு எளிதாக இடுபொருள்களை தயாரிப்பது என்பதை விளக்கிக் கூறினோம். பல இடங்களில் புதர் மண்டிக் கிடக்கின்றன. இந்தப் பகுதியில் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும், விதவைகள் அதிகம் என்றும் கூறினார்கள். போரில் நிறைய ஆண்கள் இறந்துவிட்டதால் இந்த நிலை என்று கூறினார்கள். இவ்வளவு நெருக்கடியிலும் பல குழந்தைகள் மாவட்ட அளவில் படிப்பிலும், விளையாட்டிலும் முதல் இடம் பிடித்துள்ளதை ஆசிரியர் அருள்ராஜ் விளக்கினார்.
puthiya-velicham_without_logo- (35)புன்னாலைக்கட்டுவான் வரும் வழியில் புகழ்பெற்ற மாதா கோயில் ஒன்றைப் பார்த்தோம். அங்கிருந்த பாதிரியார் தமிழ் மக்களுக்கு போர்க்காலங்களில் மிகவும் உதவி செய்ததை நினைவு கூர்ந்தார்கள். அடுத்தாக தேவாரத்தில் பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலைப் பார்த்துவந்தோம். திருக்கேத்தீச்சுவரம் என்று அழைக்கப்படும் கோயில். புரனமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த நாள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கரையான் குளம் என்ற ஊரில் உள்ள பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. மற்றொரு குழு மல்லாவி என்ற இடத்தில் பயிற்சி கொடுத்தார்கள். அதன் பின்னர் முல்லைத் தீவு சென்றோம். முள்ளி வாய்க்கால் அழிவுகளைக் கண்டு மனங்கலங்கினோம். இரவு வெகு நேரம் கழித்து வந்து சேர்ந்தோம்.
பன்னிரண்டாம் தேதி வவுனியா மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மை நிலையத்தில் பயிற்சி மகாம் நடைபெற்றது. இங்கும் ஒரே நேரத்தில் இரண்டு முகாம்களை நடத்தினோம். தமிழ்ப்பகுதியில் தெற்குப் பகுதி இது.
அம்மாச்சி உணவகம் என்ற ஒன்றை தமிழ் மாகாண அரசு உருவாக்கி சிறப்பாக செய்கிறது. பெண்கள் நேடியாக உணவகம் நடத்துகிறார்கள். அரசு இடத்தை ஏற்பாடு செய்து தருகிறது. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதில் நாங்கள் உணவருந்தினோம். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அம்மாச்சி உணவகம் சென்றோம்.
பதிமூன்றாம் தேதி அடுத்தது என்ன? என்ற புதிய வெளிச்சத்தின் முயற்சியான கருத்துருவுக்கு வலுசேர்க்கும் முகமாக யாழ் நூலகத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டம். கல்வி, வேளாண்மை என்ற இரண்டு தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பேராசிரியர் ஸ்ரீஸ்கந்தராசா ஒருங்கிணைத்து நடத்தினார். பலர் ஆர்வமுடன் பேசினார்கள். பலர் விமர்சனமும் செய்தார்கள். தொடர்ச்சியான செயல்பாடுகள் இருப்பத்தில்லை என்றும் இனியாவது தொடர் செயல்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதன் தொடர்ச்சியாக ஒரு வேளாண்மை இயக்கம் தொடங்குவது என்றும், இதழ் ஒன்று தொடங்குவது என்றும் தெரிவித்தார்கள்.
அன்று மாலை எங்களுக்கெல்லாம் நன்றி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் அரங்கில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அரங்கு வீரசிங்கம் என்ற கூட்டுறவு இயக்கத்தின் தலைவராக விளங்கிய விரசிங்கத்தின் நினைவாக உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் யாழ்ப்பாண மாணவர் இயக்கம் இங்குதான் வலுவாக இயங்கியதாகக் கூறினார்கள். குழந்தைகள் நடனம், பறையாட்டம், நாடகம் என்று விரிவாக நடந்தது. கல்வித்துறைக்குப் பொறுப்பேற்ற ஜெயந்தஸ்ரீபாலகிருணன், நான், சுந்தரராமன் ஆகியோர் பேசினோம். அனைவருக்கும் நினைவுக் பரிசு வழங்கப்பட்டது.

பதினான்காம் தேதி பொங்கல் நாள். கிளிநொச்சியில் உள்ள கூட்டுறவு அரங்கத்தில் பொங்கல்விழா நடைபெற்றது. நாங்கள் அனைவரும் உற்சாகமாக கலந்துகொண்டோம். குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும் கலந்து கொண்டனர். அன்று அனைவரும் வீடுகளில் பொங்கல் கொண்டாடினாலும், அதைத் தாண்டி இந்த நிகழ்விலும் கலந்து கொண்டனர். பேராசியர்கள் அனைத்து வேலைகளையும் செய்தார்கள். சுந்தரராமனும் நானும் கரும்புகளை தூண்களில் கட்டினோம். எல்லோரும் குழந்தைகளாக மாறினோம் என்றால் அது மிகையாகாது. காலையில் உணவருந்தாமலேயே இந்தக் கொண்டாட்டம் தொடந்தது. ஒரு மாபெரும் அழிவிற்குப் பிறகு கண்களில் காணப்படும் மகிழ்ச்சி அந்த மக்களிடம் தென்பட்டது. வசீகரன், ரஞ்சிதன் போன்ற இளைஞர்கள் ஆர்வமாக ஒரங்கிணைத்தார்கள்.

நிறைவாக கிளிநொச்சி மக்களிடம் விடைபெறும் நேரம். மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது. வழியனுப்ப வந்தவர்கள் அனைவரும் யுத்தத்தால் பாதிக்கப்படட மக்களாகவே இருந்தார்கள் , அனைவரும் அழுதேவிட்டார்கள். நவஜீவன் ஒரு குழந்தைபோல தேம்பித் தேம்பி அழுதுவிட்டார். எனது கண்களில் நீர் துளிர்ப்பதைத் தடுக்க முடியவில்லை. கடந்த பன்னிரண்டு நாட்கள் ஒரு குடும்பமாக பழகிய என்று சொல்வதைவிட வாழ்ந்த நாட்களை மறக்க முடியாமல் திகைத்துத்தான் போனார்கள். இனி இந்த நாட்கள் வருமா? என்ற ஏக்கம் அனைவர் மனத்திலும் நிறைந்தது.

ஒரு வழியாக பிரியாவிடை பெற்று கொழும்பு நோக்கிக் கிளம்பினோம். எங்களுடன் நவஜீவன் வந்து நீர்கொழும்பில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைத்துவிட்டு மறுநாள் காலையில்தான் சென்றார். நாங்கள் மறுநாள் நீர்கொழும்பு கடற்கரையைப் பார்த்தோம். நவ நாகரிக மேற்கத்திய அனைத்து அடையாளங்களும் தென்பட்டன. பெண்களும் ஆண்களும் முக்கால் நிரவாண உடைகளில் காலைவேளையிலேயே திரிந்தனர். நல்லவேளையாக யாழ்ப்பாணம் இப்படியான பண்பாட்டுச் சீரழிவிற்கு இன்னும் செல்லவில்லை என்ற ஆறுதல் ஏற்பட்டது.
பிற்பகல் ஒன்றரை மணியவில் விமானம் பண்டாரநாயகா நிலையத்தில் இருந்து மதுரை நோக்கிப் புறப்பட்டது. இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை.


Related News

 • ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…
 • ad
 • முள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு
 • மாவீரர்கள் மீதான சத்தியம்!
 • தமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”
 • தாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே ?
 • அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்
 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *