இயற்கையோடு இணைக்கவென இரு வாரங்கள் தாய் மண்ணில்!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று சொல்லிப் போனான் வள்ளுவன். உழவுத் தொழிலின் மகிமையைக் குறிப்பிட மட்டும் அவன் அதைச் சொல்லவில்லை. அவனது காலத்தில் உழவின் மூலம் பெறுவதையே அனைவரும் உணவாகப் பகிர்ந்து உண்டு வாழ்ந்தார்கள். உழவரை நம்பி வாழ்ந்த உழவர் அல்லாதோரைத் தான் ‘தொழுதுண்டு பின் செல்பவர்’என வள்ளுவன் சொல்லி இருக்கக் கூடும்;. உழுதே உண்ணும் சமூகமானது எளிமையானதாக தேவைகள் அதிகம் கொண்டிராத  ஒருவகைத் தன்னிறைவுள்ள subsistence என ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய சீவனம் உறுதிப்படுத்தப் பட்ட சமூகமாக இருந்திருக்கும். கபடம் தெரியாத அவ்வகை சமூகத்தினூடாகத் தான் நாமும் பயணித்து வந்திருக்கிறோம். உலகின் சில பாகங்களில் அவ்வகை அடிப்படைக் கட்டமைப்புக் கொண்ட அபூர்வமான சமூகங்கள் இன்னும் சில இருக்கத்தான் செய்கின்றன.

வந்த பாதை

iyarkai-vivasayamகாலப்போக்கில் எல்லா விவசாய சமூகங்களையும்; போலவே எம்மவரும் செழிப்பு என்ற செல்வ நிலையில் இல்லாவிட்டாலும் சிக்கனம், சேமிப்பு, கூட்டு முயற்சி, உழைப்பின் மூலம் உண்ணுதல், அதையும் அளவாக உண்ணுதல், நில வளம் பேணுதல், நீர் வளம் பாதுகாத்தல், கழிவுகளைத் தவிர்த்தல், கால்நடைக்குக் கொடுத்தல், அனைத்தையும் மண்ணுக்குள் சேர்த்தல் என இயற்கையின் சுழற்சி வட்டங்களைத் தெரிந்தவர்களாக, அவற்றுக்கமைய இயற்கையுடன் இசைவாக வாழ்ந்திருக்கிறர்கள். விவசாயத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுத்து வந்திருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் இலாபம் தரும் பயிர்வகைகளைத் தேர்ந்தெடுத்து தெற்குக்கு ஏற்றுமதியும் செய்தார்கள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட பண்பாட்டு விழுமியங்களும் பயிற்செய்கை மரபுகளும் பின்னிப்பிணைந்து இருந்தது போல உண்போருக்கும் உழுவோருக்கும் இடையே நெருக்கமும் இருந்தது. உணவின் தரம் உறுதிப்படுத்தப் பட்டிருந்தது. உணவை மருந்தாகவும் உண்பதைப் பண்பாட்டு அம்சமாகவும் கொள்ளும் பக்குவம் இருந்தது.

இன்றைய கேள்விகள் 

இவையெல்லாம் உண்மை என்றால் எமக்கும் எமது வழக்கங்களுக்கும் நடந்தது என்ன? இன்று ‘நஞ்சற்ற உணவு விற்பனை செய்யும் நிலையம்’ எனப் பெயரிட்டுக் காய்கறி விற்கும் அளவுக்கு எமது விளைச்சலில் நச்சுப் பொருட்கள் எப்போது வந்து சேர்ந்தன? யார் கொண்டு வந்தார்கள்? அவற்றின் பாதிப்பு என்ன? அதற்கு சமூகம் கொடுக்கும் விலையென்ன? பயிர் மட்டும் தான் நச்சுடையதா? அல்லது நாம் பண்படுத்திய நிலமும் நிலத்தடி நீரும் மாசு பட்டுள்ளனவா? இவற்றைத் தடுப்பது எப்படி? மாற்றீட்டு வழிகள் எவை?

அத்தனையும் பெரிய கேள்விகள். அவை எமக்கு மட்டும் உரிய கேள்விகளும் கூட அல்ல. நாம் இவ்வகை வளர்ச்சிக்கு விதி விலக்கானவர்களும் அல்ல. முழு உலகும் நவீன, தொழில்நுட்ப அறிவு தந்த, உற்பத்திமயப் படுத்தப்பட்ட விவசாயத்தின் வளர்ச்சியுடன் சேர்த்து இரசாயனப் பொருட்களின்  பாவனையுடனும் அதன் பின்விளைவுகள் தரும் சிக்கலிலும் மாட்டித் தத்தளிக்கிறது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இதன் பாரதூரம் தெரியாது. விலையை மட்டும் இலக்காகக்; கொண்டு மலிவென்றால் எதையும் வாங்கும் நிலையில் தான் நுகர்வோர் இன்றுள்ளனர். நாம் புலம் பெயர்ந்து குடியேறி வாழும் வளம் மிக்க நாடுகள்; பலவற்றிலும் இதே நிலைதான்;.

ஆனால் தமிழ் மண்ணைப் பொறுத்த வரையில் ஒரு முக்கிய வேறுபாடு எம்மை மற்றவர்களிடம் இருந்து பிரிக்கிறது. அதே காரணத்துக்காக அங்கே ஒரு அவசரமும் இன்று தேவைப்படுகிறது. காரணம் இது தான். முப்பது ஆண்டு கால யுத்த சூழலில் எமது வளர்ச்சியில் ஏற்பட்ட தடங்கலும் கிடைக்காமல் போன இரசாயனப் பொருட்களும் எமது மண்ணையும் பயிர்களையும் உணவையும் எவ்வாறு ஓரளவேனும் பாதுகாத்தன என்பது எவ்வளவு உண்மையோ அது போலவே  இன்று யுத்தத்தின் பின்னான குறுகிய காலத்தில்  அவை எல்லாவற்றுக்கும் ஈடுசெயும் வகையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நவீன மயமாக்கல், உற்பத்திப் பெருக்கம், வந்து சேரும் இரசாயன உள்ளீடுகள் , புது வகை உணவுகள் எல்லாமே அச்சுறுத்தல்களாக உள்ளன என்பதும் உண்மையே. இன்று பொதுமக்கள் ஒரு பகுதியினரிடையேயும்;; , அதுபோல மருத்துவர்கள் உட்பட துறைசார் வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள்; போன்றோர் மட்டத்திலும் இவற்றின் விளைவுகள் பற்றிய உணர்வும் அக்கறையும் ஏற்பட்டுள்ளது. மாற்று வழிகளுக்கான தேடலும் அங்கே தொடங்கியுள்ளது. இது நல்ல செய்தி.

புதிய வெளிச்சம்

2 (16)இந்தப் பின்னணியில்தான் மேற்கூறிய கேள்விகளை ஒட்டிய கல்வியும் ஆய்வு அனுபவமும் கொண்ட நானும் என் துணைவியும், இதே தலைப்பினை ஒரு பேசுபொருளாகத் தாய் மண்ணில் முன்னெடுக்க வேண்டும் எனப் பேரார்வம் கொண்ட புதிய வெளிச்சத்தினரும் ஒன்றிணைந்து செயற்படும் வாய்ப்பும், அத்துடன் இதே சிக்கலிலிருந்து தமிழ்நாட்டு விவசாயத்தினை மீட்டெடுக்கும் முயற்சியில் முன்னின்றுழைக்கும் திரு பாமையன் அவர்களை உள்ளடக்கிய ஐந்துபேர் கொண்ட ஒரு அணியுடன்; சேர்ந்தியங்கும் ஓர் அரிய வாய்ப்பும் அண்மையில் கிட்டின.

‘புதிய வெளிச்சம்’ ஏற்படுத்திய செயல்திட்டத்தின் படி ‘இயற்கை வழி விவசாய வாரம்’  என அறிமுகம் செய்யப்பட்ட ஜனவரி 8-14 வரையிலான ஒரு வாரமும், அதற்கு முன்னும் பின்னருமாக மேலுமொரு  வாரமும் பல்வேறு மக்கள் சந்திப்புகள், பயிற்சிப் பட்டறைகள், செயலமர்வுகள், களப் பயணங்கள், பொங்கல் விழாக்கள் என நான் பெற்றுக்கொண்ட நேரடி அனுபவங்களில் ஒரு பகுதியையேனும் இவ்விடத்தில் பகிர்ந்து கொள்ளவும் முக்கிய செய்திகள் சிலவற்றை எடுத்துச் சொல்லவும் விழைகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் விவசாய முயற்சிகளில் நச்சுத்தன்மை கொண்ட இரசாயனப் பொருட்களின் பாவனையையும் அவற்றால் மண், மக்கள், சூழலினது நலம் பாதிக்கப் படுவதையும் அகற்றவென  சேதன விவசாயம், உயிர் விவசாயம், அல்லது Organic Farming என்ற பெயர்களில் வளர்ந்துகொண்டுவரும்  விவசாய முறையினை ஒருமாற்றீடான முறையாக எமது விவசாயிகளிடையே புகுத்துவதை நோக்கமாகக் கொண்டே நாம் களமிறங்கினோம். இயற்கை வழி விவசாயம் அல்லது ஆங்கிலத்தில் Ecological Farming என்ற சொற்பதத்தை இச் செயற் திட்டத்துக்குரிய பெயராகவும் சேர்த்துக் கொண்டோம்.

எமது இன்றைய விவசாயிகளின் மூதாதையர் பாரம்பரிய விவசாய முறையாக மேற்கூறிய இயற்கை வழி விவசாயத்தையே பின்பற்றிவந்தனர். அப்படியாயின் இது முற்றிலும் புதியதல்லவே, ஏன் இம்முறையை நாம் இன்று அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது என்ற கேள்வி எழுகின்றது. இவ்விடத்தில்தான் ஓரிரு வரலாற்றுக் குறிப்புக்கள் தேவைப்படுகின்றன.

உலகளாவிய இயக்கம்

2 (9)நூற்றுப் பத்து ஆண்டுகட்கு முன்னர் ஜெர்மனியின் போர்த் தேவைகட்கெனத் கண்டுபிடித்து உற்பத்திசெய்யப்பட்டதே யூரியா எனும் இரசாயனப் பொருள். அதுவே விவசாய உரமாக ஊர்வலம் வரத் தொடங்கியதோடு கிளம்பிய நவீன விவசாயப் பாதைதான் பின்னர் அறிவியல் தந்த வேறுபல தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் உள்வாங்கி 1950களில் பசுமைப் புரட்சியாக மலர்ந்தது. உரத்தோடு சேர்த்து களை, கிருமி, பூச்சி கொல்லிகளும்; உயர் ரக விதைகள், உளவு யந்திரம், நீர்ப்பாசனம் என்பவை நவீனத்துவத்தின் பரிசுப் பொதியாக வறிய நாடுகளின் பசி தீர்க்கும் நெற்பயிர் செய்கைக்கென இலங்கையையும் 1960களில் வந்தடைந்தது என்பது ஒரு வரலாறு. அந்த வளர்ச்சியும் விளைச்சலும் தந்த இலாபங்களோடு கூடவந்த நச்சூட்டலைத்தான் இங்கே பேசுகிறோம்.
அவ் வளர்ச்சியின் மறுபக்கமாக இரசாயன உரங்கள் அறிமுகமாகி 30 வருடங்களுக்குள்ளேயே தமது பண்ணை நிலங்கள் தமது உயிர்ப்பையும் வளத்தையும் இழந்து மலடாகியதைக் கண்டு ஏங்கிய ஐரோப்பிய நாட்டு சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் சிலர் அந்நேரத்தில் பெயரெதுவும் இல்லாமல் இயல்பாக இயங்கிவந்த பாரம்பரிய நிலவளம் பேணும் முறைகளை இந்திய மண்ணிலும் சீன, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும் கண்டு எடுத்துப் போய் அவற்றின் அடிப்படையில் 1940 களில் Organic Farming எனப்  பெயரிட்டு ஒரு மாற்று வழியை முன்னெடுத்தனர் என்பது இன்னொரு வரலாறு.
அந்த முயற்சியின் பெறுபேறாக இரசாயன வழிக்கு மாற்றுவழி தேடிக்கிளம்பிய  ஐந்து விவசாயிகளது குழுக்கள் 1972 இல் பிரான்ஸ் நாட்டில் உருவாக்கிய IFOAM   எனப்படும் மக்கள் இயக்கமே இன்று உலக மட்டத்தில் 179 நாடுகளின் இயற்கைவழி வேளாண்மைக்கான கட்டுப்பாடுகள், உத்தரவாதம், சந்தைப் படுத்தல் போன்ற  அம்சங்களின் பெரும் வளர்ச்சிக்கும் கண்காணிப்புக்கும்  பொறுப்பாக உள்ளது.

ஒவ்வொரு பண்ணையும் ஒரு உயிர்வாழும் தொகுதி, அது இயல்பாகவே ஒரு உயிரியின் (organism தன்மை கொண்டது என்பதால் அதை இயல்பாக முழுமையாக ஒரு ‘organic whole ஆகப்  பண்படுத்துவதும் பராமரிப்பதுமே விவசாயம் என்றார்கள். எதையும் கூறு போடாமல் தொகுத்துப் பார்க்கும் கீழைத் தேய சிந்தனையோடு மண்ணையும் அதனூடு வாழும் கண்ணுக்குத் தெரிந்த தெரியாத பல்லுயிரினங்களையும் மதிக்கவல்ல ஒரு ஆன்மீகக் தன்மையையும் உள்வாங்கி மேற்கில் வளர்ந்த மனிதாபிமானம் நிறைந்த இவ் விவசாய முறையை இன்று நாம் மீளக் கொண்டுவந்து பேரிட்டுக் கூறி நமது சமூகத்தினிடையே அறிமுகம் செய்து நம்ப வைக்க வேண்டிய நிலை காலத்தின் தேவையாகவும் ஒருவகையில் வியப்புத் தருவதாகவும் உள்ளதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

ஆங்கில மொழியில் வழங்கும் organic என்ற சொல்லைவிட ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் காணப்படும் ecologic farming என்ற பதம்; செழுமையாகவும் முழுமையாகவும் உள்ளது போல இயற்கைவழி விவசாயம் என்பதும் தமிழில் மயக்கம் தவிர்க்க வல்ல பரந்தவொரு கோட்பாடாக எமக்குத் தென்படுகிறது.

இனியென்ன தேவை?

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த பத்து அரங்கங்களில் எமது அணி ஏறத்தாழ ஆயிரம் மக்களைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றோம். பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், மற்றையோரிடையே பெற்றோர், விவசாயக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள்;, அரச ஊழியர்கள், இயற்கை பேணும் செயற்பாட்டாளர்கள் என பல்வேறு ஆர்வமும் அனுபவமும் கொண்டோர் கலந்து கொண்டனர். பெண்களின் பங்கு மேலோங்கியிருந்தது உற்சாகமளித்தது.

26730977_10159801408245557_6176599271750917247_nஇலங்கையிலும் தமிழகத்திலும் உலக நாடுகளிலும் இவ் வேளாண் துறையின் தேவை, வளர்ச்சி,; சவால்களை ஒட்டிப் பேசியதைத் தொடந்து இன்றைய தமிழ்நாட்டு விவசாயிகளது நடைமுறை அனுபவங்களும், இரசாயனக் கலவைகட்குப் பதிலாக அவர்கள் வளர்த்தெடுத்துள்ள இயற்கைவழி மாற்றீட்டு தயாரிப்புகள,; அவற்றைத் தயாரிக்கும் முறைகள் என்பன செயற்பாட்டின் மூலம் விளக்கப் பட்டிருந்தன. யுத்த காலத்திலும் பின்னரும் தமிழ் நாட்டில் வேளாண் துறைசார் அறிவினை வானொலி மூலம் கேட்டுப் பெற்ற அனுபவம் கொண்டிருந்த விவசாயிகளுக்கு  தமிழ் நாட்டில் முன்னோடிகளாக விளங்கும் மூத்த விவசாயிகளுடன் நேரடியாகக் கண்டு பேசும் வாய்ப்பு சிறப்பானதாக அமைந்தது.

கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கு சென்றுவந்ததன் மூலம் அம்மண்ணில் விவசாயிகள் எதிர்நோக்கும் கேள்விகள் பற்றிய அறிவு பெறவும் இம் முயற்சியில் பல்கலைக் கழகங்களின் பங்கு பற்றியும் உரையாட முடிந்தது. இலங்கையின் விவசாயத்தில் பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, தெங்குப் பொருட்கள,; மற்றும் கறுவா, கராம்பு போன்ற ஏற்றுமதி உணவுப்பொருட்களை இரசாயனப் பொருட்கலப்பின்றி ஏற்றுமதிக்காக வளர்க்கும் முயற்சியே முன்னிலை பெறுவதாகத் தெரிகிறது. அடிப்படை உணவுப் பொருட்கள் சார்ந்த விவசாயத்தில் அரசின் அக்கறை பெரிய அளவில் இல்லாத நிலையே அண்மைவரை நிலவி வந்தது. புதிய சில சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம் மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவு பற்றிய புதிய அக்கறை ஏற்பட்டுள்ளது கவனத்துக்குரியது.

பொதுவாகவே சுனாமியின் பின் வந்த பல பிறநாட்டு உதவி நிறுவனங்கள் இயற்கைவழி வேளாண்மையை அறிமுகம் செய்து சில இடங்களில் மானியம் கொடுத்தும் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்கள். இருந்த போதும் அவ்வகை நிறுவனங்களது செயற்பாடு தொடர்ச்சியானது இல்லை என்பதும், ஒதுக்கப்பட்ட நிதி முடிய அவர்களது செயற்திட்டம் தடைப்படுவது தவிர்க்கப்படவேண்டுமாயின் தொலைநோக்குடனான கொள்கை வகுப்பும் அரச ஆதரவும் எவ்வகை மாற்றத்துக்கும் அவசியமானவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழ் விவசாயிகளைப் பொறுத்த வரையில் நெற்பயிர் செய்வோர் மாற்று வழிகளில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது, இயற்கை உரம் தயாரிப்பது போன்ற பயிற்சிகளைப் பெற்றவர்களாகவும் இயற்கை உரங்களை முடிந்த அளவு பயன்படுத்தி மேலதிக தேவைகளுக்கு இரசாயனப் பசளைகளைப் பெறும் தன்மை கொண்டவர்களாகவும் உள்ளனர். அவர்களிடையே அனுபவம் பெற்ற விவசாயிகள் தத்தமது பொருட்களுக்கு சரியான விலைகொடுத்தும், உரிய இடத்தில் மேலதிக விலைகொடுத்தும,; நச்சற்ற உணவுப்பொருள்களென்ற உறுதியோடு நுகர்வோர் வாங்கத் தயாரென்றால் தாம் விளைவிக்க ஆயத்தம்; என்கிறார்கள்.

ekuruvi-aiya20-gசந்தைப் படுத்தும் வாய்ப்பும் விளைச்சலில் ஏற்படக்கூடிய வீழ்ச்சியை ஈடு செய்யக் கூடிய விலை  குறித்தலும் உறுதிப்படுத்தப் பட்டதன் மூலம் தான் மேற்கு நாடுகளில் இயற்கைவழி வேளாண்மை  ஆரம்ப கட்டத்திலாவது வளரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அதுபோலவே தமது உணவின் தரம், பாதுகாப்பு பற்றிய அக்கறையும் அதற்கான உத்தரவாதம் தரக்கூடிய விவசாயிகளுடைய உற்பத்திக்கு மதிப்பளித்து மேலதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ள நுகர்வோரும் இந்த வளர்ச்சிக்கு அவசியமானவர்கள்.

உழுவோரும் உண்போரும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்படட இவ்விரு பகுதியினருக்கும் இடையே நம்பிக்கையும் நல்லுறவும் அவசியமானது. இது தானாக வளராது. நம்பிக்கை, உத்தரவாதம் என்பவற்றை உறுதிப்படுத்தக் கூடிய கட்டுப்பாடுகளையும், சந்தைப்படுத்தலையும் ஒழுங்கு செய்யும் பொறுப்பை முடிந்த அளவு அரசு கையில் எடுப்பதும், இவை அனைத்தையும் இயக்கிச் செல்லவும் அழுத்தம் கொடுக்கவும் வல்ல சமூக அமைப்புகளும் வளர்ச்சிக்கு அவசியமானவை என்பது மற்றைய நாடுகளிலிருந்து பெற்ற அனுபவமாகும.
எங்களது பார்வையில் இவ் வௌ;வேறு கூறுகள் ஒரு புள்ளியில் சந்திப்பது சாத்தியமானது. ஆனால் அச் சந்திப்பு இலகுவாகவோ தானாக நிகழப் போவதோ அல்ல. ஆனால் சமூக மட்டத்தில் முக்கியமான இடங்களில் இன்று காணப்படும் விழிப்புணர்வும், மாதிரிப் பண்ணைகள், சந்தைப்படுத்தும் மையங்கள், மாற்றீடான உரம் மற்றும் பயிர்ப்  பாதுகாப்புக்குமான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் முயற்சி என்பன வெளிப்பட்டிருப்பதும் உற்சாகம் தரும் குறிகளாக உள்ளன. மாகாண அரசின் மட்டத்தில் நாம் கண்டுகொண்ட ஆதரவான நிலையும் இவ் வளர்;ச்சிக்குத் தேவையான உயர்கல்வியையும் ஆய்வுகளையும் வழங்கக் கூடிய விவசாயக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பங்குபற்றலும் நிகழும்போது முயற்சிகள் மேலும் வலுப்பெறும்.

 

நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா
தகைநிலைப் பேராசிரியர் 
சுவீடன் விவசாயப் பல்கலைக் கழகம் – உப்சாலா   

புதிய வெளிச்சத்தில் பயணம் செய்த பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் கட்டுரை 10 பெப் 2018 அன்று தினக்குரலில் வெளிவந்தது

 


Related News

 • ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…
 • ad
 • முள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு
 • மாவீரர்கள் மீதான சத்தியம்!
 • தமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”
 • தாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே ?
 • அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்
 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *