நிவாரண பொருட்கள் அடங்கிய இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் சென்னை துறைமுகம் வந்தடைந்தன

INS-warships-containing-relief-objects-reached-Chennai-porவார்தா புயல் மற்றும் கனமழையினால் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரண பொருட்கள் அடங்கிய 2 போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தன. சென்னை மாநகராட்சியிடம் நிவாரண பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.

வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள மீட்பு பணி மற்றும் நிவாரண உதவிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று அதிகாலை இந்திய கடற்படையின் சிவாலிக், காட்மாட் ஆகிய 2 கப்பல்கள் புறப்பட்டன. அந்த கப்பல்கள் சென்னைக்கு வடக்கே நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அந்த 2 கப்பல்களும் சென்னை துறைமுகத்துக்கு இன்று வந்து சேர்ந்தன.

நிவாரண பொருட்கள்

கடற்படை கப்பல்களில் மிதவை ரப்பர் படகுகள், சிறிய ரக கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், உணவு, கூடாரங்கள் அமைக்க தேவையான உபகரணங்கள், துணிகள், மருந்துகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் போதுமான வகையில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. மேலும் அந்த கப்பல்களில் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், நீச்சல் வீரர்களும் மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்திருந்தனர்.

கடற்படை கப்பல்களில் நீச்சல் வீரர்கள் அடங்கிய 10 குழுவினர் உள்ளனர். அது தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 குழுவினர் தயாராக இருந்தனர். மேலும் தேவைப்பட்டால் 30 குழுவினர் விசாகப்பட்டினத்தில் இருந்து உடனடியாக அழைக்கப்படுவார்கள் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment