ஈழ நிலத்திற்கு ஓர் உறவுப் பாலம்! ஃபாதர் ஜெகத் கஸ்பர் முன்னெடுத்த சங்கம்!

ekuruvi-aiya8-X3

hosp_attack_01சங்கம் வளர்த்த மாமதுரை நகரில் ஆக.12-ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை உலகத் தமிழர் உரையாடல் எனும் நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது ஃபாதர் ஜெகத் கஸ்பர் முன்னெடுத்த சங்கம்! “உறவுப் பாலம்’’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 19இல் நடந்த உரையாடல் எல்லோரது மனதையும் உலுக்கி எடுத்துவிட்டது.

2009ம் ஆண்டு நடந்த ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கொத்துக் குண்டுகளுக்கும் பொஸ்பர்கஸ் குண்டுகளுக்கும் பலியாகிக் கொண்டிருந்த ஈழத்தமிழனுக்காக தாய்த்தமிழகத்தில் ஒலித்த வேதனைக் குரல்களுக்கு செவிமடுக்காமல் ஊமையாய் இருந்தன இந்திய அரசும் உலக நாடுகளும்.

போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்கிற நரிக்குரல்களும் ஊளையிட்டன. இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு பல எத்தர்கள், எத்தனை எத்தனையோ வேடங்களில் அவதானித்தார்கள். லட்சக்கணக்கான தமிழர்களின் பிணங்களைப் பார்த்ததும் போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்தான் கொடுங்கோலன் ராஜபக்சே.

கடுமையான அந்த காலச்சக்கரம் உருண்டது. இலங்கையில் நடந்த தேர்தலில் ராஜபக்சே போய் மைத்ரி பால சிறிசேன வந்தார். கூடவே பிரதமராக ரணிலும் வந்தார். வாலு போய் கத்தி வந்த கதை தான். தமிழர்களின் நிலையோ முன்னிலும் மோசம், படு மோசம்.

அதையெல்லாம் அக்கறையுடனும் ஆக்கபூர்வமாகச் செய்ய வேண்டியது குறித்தும் விவாதித்தது இந்த “உறவுப்பாலம்.

‘ மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பில்லர் ஹவுசில் நடந்த உரையாடலில் பேசியவர்கள்.
ஜெகத் கஸ்பர் :

ஈழப்போரில் வீர மரணம் அடைந்த புலிகள் -கொத்துக் குண்டுகளுக்கு பலியானவர்களின் மனைவிமார்களின் கண்ணீர் துடைக்க, தாய்த்தமிழகத்தின் பேராதரவை வேண்டி உங்கள் முன் முதல் அடியை நாங்கள் எடுத்து வைத்துள்ளோம். போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும் போரினால் பாதிக்கப் பட்டவர்களின் வாழ்வாதாரத் தைப் பூர்த்தி செய்ய முடிய வில்லை. இதுவரை அரசியல் ரீதியாக போராடியாகிவிட்டது. இனி நமது இனத்தின் மறுவாழ்வுக்காக முன்னெடுப்போம். உலகில் உள்ள தமிழர்களிடமெல்லாம் இதை எடுத்துச் செல்வோம். இந்த இன மீட்சிப் போராட்டத்தில் தனி நபர்கள் முக்கியமல்ல, அனைவரும் வாருங்கள், இனத்தைக் காப்பாற்ற வாருங்கள்.
ஸ்ரீதரன், கிளிநொச்சி எம்.பி. :

இலங்கையின் மலையகப் பகுதிகளில் பத்துக்கு பத்து அளவுள்ள அறைகளில்தான் தமிழ்க்குடும்பங்கள் முடங்கிக் கிடக்கின்றன. போரில் தாய் -தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தமிழகத்தில் நல்ல உயர்கல்வி கிடைக்க இங்குள்ள கல்வி நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும். இந்தியா அளித்த உதவிகள் ஈழத்தமிழர்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன, ஆனால் வயிற்றுப்பாட்டுக்கு? நாங்கள் வேண்டுவதெல்லாம், எதிர்பார்ப்பதெல்லாம் கௌரவமான நிரந்தர அரசியல் தீர்வுதான். அதற்கான காலம் கனிந்து வருவதாகவே கருதுகிறோம்.
சார்லஸ் நிமலநாதன், மன்னார் எம்.பி. :

எமது மக்களைப் பற்றி, அவர்கள் நித்தம் நித்தம் அனுபவித்து வரும் கொடுமைகள் பற்றி, தொப்புள் கொடி உறவுகளான தாய்த்தமிழகத்தில் உள்ளவர் களுக்கு முழுமையாகத் தெரிய வில்லையே என்பதுதான் எங்களது வருத்தம். இப்போது ஒரு செய்தி வெளிவந்து கொண் டிருக்கிறது, போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், இப்போது உயிரோடு இருப்பவர் களுக்கும் தடுப்பு ஊசி என்ற பெயரில் விஷ ஊசி போட்டும், உணவில் மெல்லக் கொல்லும் நஞ்சு கலந்தும், கொஞ்சம் கொஞ்சமாக ஊனமாக்கிவரும் சிங்கள ராணுவத்தின் கோர முகம் இப்போது அம்பலத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. இனியும் நாம் இருந்தென்ன என்ற மனச்சோர்வு ஏற்பட்டாலும் நம்பிக்கையைத் தளரவிடாமல் உள்ளோம்.
வேலுகுமார், கண்டி எம்.பி. :

எமது தாய்நாட்டு விடுதலைக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே உதவிக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தமிழ்நாட்டு தமிழர்களும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உதவும் பணிகளை முன்னெடுக்க வேண்டும். கிட்டத்தட்ட 90 ஆயிரம் விதவைகள், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து மனம் புண்ணாகிவிட்டது.

உரையாடலைக் கேட்டவர்களின் உள்ளம் அப்படியே ஸ்தம்பித்தது. தங்களது வேண்டுகோளினை ஏற்று ஈழத்தமிழ் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க மதுரையைச் சேர்ந்த சில கல்லூரிகள் முன்வந்திருப்பதற்கும், திருப்பூரைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தொழிற் பயிற்சி அளிப்பதற்கு முன் வந்ததற்கும் நன்றி சொன்னார் அருட்தந்தை ஜெகத் கஸ்பர்.

தொப்புள்கொடி உறவுகளின் துயரத்தைத் துடைக்க தாய்த் தமிழகத்தின் கைகள் நீளட்டும்.

நக்கீரன்

Share This Post

Post Comment