துருக்கியில் ஊடகங்கள் மீது அரசு அதிரடி நடவடிக்கை

ekuruvi-aiya8-X3

tirukey_31துருக்கி ராணுவத்தின் ஒருபிரிவினர் ஆட்சியை கவிழ்க்க கடந்த ஜூலை மாதம் நடத்திய புரட்சி, மக்களின் உதவியோடு முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் 290 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 ஆயிரம் வீரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சதி திட்டத்திற்கு உதவி செய்தவர்கள் என்று கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெத்துல்லா குலேன் என்பவரின் ஆதரவாளர்களான சுமார் 50 ஆயிரம் அரசு பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 801 பேர் போலீஸ் உயரதிகாரிகள் என்று இம்மாதத்தின் முதல்வாரத்தில் துருக்கி நாட்டு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டம் விரைவில் காலாவதியாக உள்ளதால் இம்மாதம் 19-ம் தேதியில் இருந்து மேலும் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை சட்டம் நீட்டிக்கப்படும் என துருக்கி துணை பிரதமர் நுமான் குர்டுல்மஸ் சமீபத்தில் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆட்சியை கவிழ் க்க சதி செய்ததாக இந்த மாதத்தில் மட்டும் மேலும் பத்தாயிரம் அரசுப் பணியாளர்களை வேலைநீக்கம் செய்துள்ள துருக்கி அரசு, எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பத்திரிகைகள் மீது தற்போது நடவடிக்கையை ஏவிவிட்டுள்ளது.

இதில் ஒருகட்டமாக எதிர்க்கட்சியினருக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டுவரும் ‘சும்ஹுரியெட்’ நாளிதழின் தலைமை ஆசிரியரான முராட் சபுன்க்கு என்பவரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். அந்த பத்திரிகையில் பணியாற்றும் துணை ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, மேலும் பல பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படலாம் என கருதப்படுகிறது.

Share This Post

Post Comment