ஐரோப்பிய கால்பந்து இறுதிப் போட்டியின்போது ரசிகர்கள் வன்முறை – ஈபிள் டவர் இன்று மூடல்

Facebook Cover V02

Epil_Twoer11பிரான்ஸ் நாட்டில் ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் போர்ச்சுக்கல் மற்றும் போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டி நடைபெற்ற மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

எனவே, மைதானத்திற்கு சென்று போட்டியை காண முடியாத ரசிகர்களுக்காக ஈபிள் டவருக்கு கீழே மெகா ஸ்கிரீன் அமைத்து போட்டி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதில் இரு நாடுகளையும் சேர்ந்த ரசிகர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். இந்த இடத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அமர முடியும். ஆனால், அந்த எண்ணிக்கையும் தாண்டி ரசிகர்கள் வந்ததால் ஏராளமான ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் பிரச்சனை ஏற்பட்டது.

போட்டியை காண முடியாத ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்கள் பலர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். தடுப்பு அருகே நின்ற போலீசார் மீது பாட்டில்களை வீசினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதையடுத்து போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், வன்முறை சம்பவத்தால் ஈபிள் டவர் இன்று (திங்கட்கிழமை) மட்டும் மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈபிள் டவர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் போர்ச்சுக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Share This Post

Post Comment