தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து போராடவேண்டும் – மோடி

Modi_4_30modiஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தனது பயணத்தின் நிறைவாக கென்யா நாட்டுக்கு சென்றார். தலைநகர் நைரோபியில் உள்ள அதிபர் மாளிகையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிபர் உஹிரு கென்யாட்டாவை அவர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் அளவில் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் 2 தலைவர்களின் முன்னிலையில் 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

குறிப்பாக, ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஊழியர்கள் பரிமாற்றம், நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளுதல், ராணுவ தளவாடங்கள் வினியோகம், பயிற்சி, கடல்சார் பாதுகாப்பு ஆகியவை குறித்து முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுதவிர தேசிய வீடு கட்டும் கொள்கை மேம்பாடு மற்றும் மேலாண்மை துறையில் ஒத்துழைப்பு, கென்யாவின் பல்வேறு சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு முதல் கட்டமாக ரூ.100 கோடி கடன் உதவி வழங்குவது, கென்யாவின் ஜவுளித் துறைக்காக ரூ.200 கோடி கடன் உதவி அளிப்பது, இரட்டை வரிவிதிப்பு முறை தவிர்ப்பு, தூதரக பாஸ்போர்ட் வைத்துள்ள அதிகாரிகளுக்கு விசா பெறுவதில் இருந்து விதிவிலக்கு, இந்திய தரநிர்ணய அமைப்பு மற்றும் கென்யா தரநிர்ணய அமைப்பு இடையே பரஸ்பர வர்த்தக தொடர்பு என மேலும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

பின்னர், பிரதமர் மோடி கூறியதாவது:–

கென்யாவின் வளர்ச்சி பணிகளுக்கு உதவி செய்ய இந்தியா தனது பல்வேறு மேம்பாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறது. கென்யாவில் புற்றுநோய்க்கு தரமான மற்றும் சிறந்த சிகிச்சை அளிக்கும் விதமாக புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒன்றை இந்தியா கட்டித் தரும்.

வேகமாக பரவி வரும் தீவிரவாதமும், பயங்கரவாத சிந்தனைகளும் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும், நமது நாடுகளுக்கும், இப்பிராந்தியத்துக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து இவற்றை எதிர்த்து போராட முன்வரவேண்டும் என்று அதிபர் உஹிரு கென்யாட்டாவிடம் குறிப்பிட்டேன்.

சைபர் குற்றங்கள், போதை பொருட்கள் கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் அனைத்திலும் கூட்டுத்தன்மையை இன்னும் தீவிரப்படுத்துவது எனவும் ஒப்புக்கொண்டோம் என்று அவர் கூறினார்.

Share This Post

Post Comment