பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா- சிங்கப்பூர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்

modi_singaசிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லூங் 5 நாள் அரசுமுறை சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று அவர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது 2 நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மோடியும், லீ ஹிசியன் லூங்கும் பல்வேறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கூட்டாக கையெழுத்திட்டனர்.
அவற்றில் இந்தியாவும், சிங்கப்பூரும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்துவது, ‘சைபர்’ குற்றங்களை கண்டறிவதில் இணைந்து செயல்படுவது, அறிவுசார் வர்த்தக உரிமைகளை பரிமாறிக்கொள்வது, கவுகாத்தி நகரில் திறன்மேம்பாட்டு மையம் அமைப்பது, இரு நாடுகள் இடையேயான விரிவான பொருளாதார ஒப்பந்தத்தின் 2-வது ஆய்வை துரிதப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இன்று(நேற்று) பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பது மற்றும் சைபர் குற்றங்களை கண்டறிவதில் ஒத்துழைத்து செயல்படுவது ஆகியவற்றில் கையெழுத்திட்டோம். இந்திய ரூபாய் மதிப்பீட்டில் பத்திரங்களை தனது நாட்டில் வெளியிட சிங்கப்பூர் ஒப்புக் கொண்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது சமூகத்துக்கு பயங்கரவாதம், குறிப்பாக எல்லை தாண்டிய பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அமைதி, மனித நேயம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவருமே இதை எதிர்த்து செயல்படுவது அவசியமாகும்.
சிங்கப்பூருடன் ஆசியான் அமைப்பு, கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாடு, ஆசியான் பிராந்திய கட்டமைப்பு விதிமுறைகள் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி பிராந்திய ஒத்துழைப்பில் இணைந்து செயல்படுவோம்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் சிங்கப்பூரின் முக்கிய கூட்டாளியாக இந்தியா திகழும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Share This Post

Post Comment