பல்கலைக்கழக துணை வேந்தர்களை பதவிநீக்கம் செய்யவேண்டும் – மு.க.ஸ்டாலின்

stalin_2309தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

21-12-2016 தேதியிட்ட ஒரு ஆங்கில பத்திரிகையில் “மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் சசிகலாவை சந்தித்தது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது” என்ற தலைப்பிட்ட செய்தியை படித்து அதிர்ச்சியடைந்தேன். உயர்கல்வியின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழகத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

நீங்கள் (கவர்னர்) தலையிட்டு, மதிப்புமிக்க பல்கலைக் கழகங்களின் மாண்பையும், கண்ணியத்தையும் உண்மையான உணர்வோடு காக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்.

உயர்கல்வியினை முன்னெடுத்துச் செல்லும் கல்வியாளர்கள் மாநிலத்தின் அரசு பொறுப்பில் இல்லாத நபர் ஒருவரை சந்திப்பது தேவையற்ற, நெறிமுறைகளை மீறிய, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும். துணை வேந்தர்களின் இந்த செயல்கள் அவர்களுடைய விசுவாசம் மாநிலத்தின் கல்வியின் தரத்திற்கோ அல்லது பல்கலைக்கழக வேந்தருக்கானதோ அல்ல என்பது நிரூபணம் ஆகிறது.

மேலும், அதே பத்திரிகையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சமீபத்தில் ஓய்வுப் பெற்ற துணை வேந்தர், “துணை வேந்தர்கள் ஆளுங்கட்சிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது மிகவும் இழிவானது. முன்னாள் முதல்-அமைச்சரின் மறைவிற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக இந்த சந்திப்பு நடைபெற்றது என சில துணை வேந்தர்கள் கூறினாலும், இந்த சந்திப்பின் உண்மையான நோக்கங்கள் பற்றி அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

அந்த பத்திரிகை, துணை வேந்தர்கள் சசிகலாவை சந்திக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அவர்கள் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருக்கு பதிலாக சசிகலாவை தலைமை ஏற்க அழைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் துணை வேந்தர்கள் தங்களுடைய நியமனம், நடத்தை மற்றும் விதிமுறைகளை மீறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

எனவே, பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் பயிலும் ‘உயர்கல்வியின் தரத்தை’ பாதுகாக்கும் வகையில் அந்த துணைவேந்தர்களை உரிய பணியாளர் சட்டங்களின்படி பதவி நீக்கம் செய்வதோடு, துணை வேந்தர் பதவிகளை அரசியலாக்கி மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி நிலையின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை தடுக்குமாறு தங்களை (கவர்னர்) கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Related News

 • கஜா புயலால் 84,836 மின்கம்பங்களும், 841 மின்மாற்றிகளும் சேதம் – நிலைகுலைந்த மின்சார சேவை
 • நாள் ஒன்றுக்கு 2 மணி நேரமே ஓய்வு – இரவு பகல் பாராமல் நிவாரணப்பணி தீவிரம்
 • தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
 • சந்திராயன் – 2 செயற்கைக்கோளை ஜனவரியில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது – இஸ்ரோ தலைவர் சிவன்
 • மறைப்பதற்கு நிறைய வைத்து இருப்பவர்கள் சி.பி.ஐ. அமைப்பிற்கு பயப்பட வேண்டும் – அருண் ஜெட்லி
 • இரட்டை இலை சின்ன விவகாரம்; தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
 • ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு
 • கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *