ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் – அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம்

Facebook Cover V02
JJ-08அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் பூரண நலத்துடன் உள்ளார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் சீரான இடைவெளியில் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
 
இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டுள்ளார். அவரும் டாக்டர்கள் குழுவினருடன் இணைந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஜெயலலிதாவை சந்திக்க நாள்தோறும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வருபவர்கள் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.
 
ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதாவுக்கு நேற்று 11-வது நாளாக ஆஸ்பத்திரியில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு குணமடைந்திருப்பது தெரியவந்தது.
இருப்பினும் டாக்டர்கள் குழுவினர் அவருடைய உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு ஓய்வு தேவை என்பதால் இன்னும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் இருப்பார் என்று தெரிகிறது. இதற்கிடையே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இதற்கிடையே தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நேற்று முன்தினம் இரவு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குச் சென்று முதல்-அமைச்சரை பார்வையிட்டு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் பேசிவிட்டு சென்றார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு கவர்னர் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் தமிழக அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு வைத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. அதற்கு பின்னர் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
 
இதற்கிடையே நேற்று இரவு 8 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் இருந்து சர்வதேச நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து முதல்-அமைச்சருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
முதல்-அமைச்சரின் உடல்நிலையை டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே பரிசோதனை செய்தார். ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதனை செய்து ஏற்கனவே வழங்கப்பட்ட பல்வேறு அறிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார். மேலும் முதல்-அமைச்சருக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.
 
இந்த ஆலோசனையின் அடிப்படையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கிருமி தொற்றுக்கான நோய் எதிர்ப்பு மருந்தினை தொடர்ந்து வழங்கும்படி அறிவுறுத்தினார். ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவிடம் நிபுணத்துவ கருத்தினை நாங்கள் பெற்றிருக்கிறோம்.
மருத்துவ சிகிச்சைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு தருகிறார். இந்த சிகிச்சையை மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து அவர் பெறவேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
முன்னதாக அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி நிருபர்களிடம் கூறுகையில், “முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு ஆஸ்பத்திரியில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏதாவது குற்றம் சொல்லவேண்டும் என்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டிவருகிறார்.
சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது தவறானது. இதனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றாலும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அரசு பணிகளை அன்றாடம் கவனித்து வருகிறார்” என்றார்.

Share This Post

Post Comment