காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது – சித்தராமையா

sittaramayaமத்திய மந்திரி உமாபாரதியை டெல்லியில் சந்தித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20-ந் தேதி வழங்கிய தீர்ப்பில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்திற்கு 21-ந் தேதி முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் கர்நாடக அரசு அதிருப்தி அடைந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், காவிரி படுகையில் உள்ள 4 அணைகளும் அந்த வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்பதால் கர்நாடகத்தில் அனைத்துக்கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எக்காரணம் கொண்டும் இதை தொடங்க அனுமதிக்கக்கூடாது என்றும், இதற்காக மத்திய அரசு மீது கர்நாடக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள், கன்னட அமைப்பினர், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று காங்கிரஸ் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அவசரமாக தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா, மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரும் சென்றனர்.
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதியை அவருடைய அலுவலகத்தில் சித்தராமையா மதியம் சந்தித்து பேசினார். அப்போது, எக்காரணம் கொண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்றும், வருகிற 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறும்போது மத்திய அரசு சார்பில் அதற்கு ஆட்சேபனை மனு தாக்கல் செய்யுமாறும் கூறினார். இது குறித்து பரிசீலிப்பதாக மத்திய மந்திரி உமாபாரதி கூறினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20-ந் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் கர்நாடகமோ அல்லது தமிழகமோ இதை அமைக்குமாறு கேட்கவில்லை. அவ்வாறு இருந்தும் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வாரியத்தை அமைக்கும்படி கூறியுள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம். இந்த சூழ்நிலையில் இந்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று நான் மத்திய மந்திரி உமாபாரதியிடம் எடுத்துக் கூறினேன்.
அதிகாரிகளுடன் ஆலோசித்து இதுபற்றி முடிவு எடுப்பதாக சாதகமான பதிலை கூறியுள்ளார். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு நான் பல முறை கேட்டுவிட்டேன். இதுவரை நேரம் ஒதுக்கவில்லை“ என்றார்.

Share This Post

Post Comment