மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இந்த மாதம் இறுதிக்குள் இடிக்கப்படும்

ekuruvi-aiya8-X3

muvulivakkamமவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இந்த மாத இறுதிக்குள் இடிக்கப்படும் என்று ஐகோர்ட்டில் சி.எம்.டி.ஏ. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்தது. இதில், 61 பேர் பலியானார்கள். 27 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டிராபிக் ராமசாமி உள்பட பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்கு கடந்த ஆகஸ்டு மாதம் விசாரணைக்கு வந்தபோது, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகேயுள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் அந்த கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை இடிக்க சிறிது காலஅவகாசம் வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, கட்டிடத்தை செப்டம்பர் 16-ந் தேதிக்குள் இடிக்கவேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.எம்.டி.ஏ. தரப்பு வக்கீல், ‘கட்டிடத்தை இடிப்பதற்கு வெடி மருந்து பொருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதன்பின்னர், இந்த கட்டிடம் இம்மாத இறுதிக்குள் இடிக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கட்டிடத்தை இடித்த பின்னர், அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை வருகிற நவம்பர் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Share This Post

Post Comment