திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

Facebook Cover V02

Tiruchendur_1திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா திங்கட்கிழமையன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான புக்தர்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் எடுத்தும் தங்கள் விரதத்தை துவக்கினர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாற்றை உணர்த்தும் திருவிழா கந்த சஷ்டி திருவிழாவாகும். இவ்வாண்டு கந்த சஷ்டி திருவிழா திங்கட்கிழமையன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு திருக்கோவில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூபதீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது, தொடர்ந்து காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் ஆகியோர் காப்பு கட்டிய எஸ்.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியாரிடம் பூஜை நடத்துவதற்கான நிர்வாக அனுமதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, யாகசாலை பூஜைகளாகி, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்ற உடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கசப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தை வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வருகின்ற நவம்பர் 4-ம் தேதி கந்த சஷ்டி 5-ம் திருவிழா வரை இதே நிகழ்ச்சிகளும், 5-ம்  தேதி சனிக்கிழமை 6-ம் திருவிழாவன்று மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் வைத்து கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவும் நடைபெறுகின்றது.

Share This Post

Post Comment