சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

sdsd

E_ramkumarசுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று அந்த வழக்கில் கைதான ராம்குமாரின் தாயார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவரை, கடந்த ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மர்மநபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

இதுகுறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், போலீசார் உண்மை குற்றவாளியை காப்பாற்ற, அப்பாவியான தன் மகனை கைது செய்துள்ளதாகவும், எனவே, இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தாயார் புஷ்பம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் புஷ்பம் சார்பில் வக்கீல் ராம்ராஜ் ஆஜராகி, ‘இந்த கொலை வழக்கை நுங்கம்பாக்கம் போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக, ராம்குமாரை கைது செய்துள்ளனர். மேலும், சுவாதி கொலை வழக்கில் தங்களை விசாரிக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு சுவாதியின் தந்தை மனு கொடுத்துள்ளார். இதன்பின்னர், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் விசாரிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை பாதுகாக்க போலீசார் முயற்சிப்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும்’ என்று வாதிட்டார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் எமலியாஸ், இந்த வழக்கிற்கு பதில் மனுவோ, அறிக்கையோ தாக்கல் செய்ய விரும்பவில்லை. அதற்கு பதில் சுவாதி கொலை வழக்கில் போலீசார் நடத்திய அனைத்து விசாரணை விவரங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்கிறோம். அதன்பின்னர் இந்த நீதிமன்றமே முடிவு செய்யட்டும். அதேநேரம், ஒரு குற்ற வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பினர், யார் தங்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கவேண்டும் என்று முடிவு செய்யவும் முடியாது. அதற்கான உரிமையும் அவர்களுக்கு கிடையாது’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Share This Post

Post Comment