குடிநீர் வழங்காததை கண்டித்து நூதனப் போராட்டம்

தனது வார்டு பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து ஆவடி நகராட்சி அலுவலக வாசலில் படுத்து கவுன்சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் அடங்கிய டாக்டர் அம்பேத்கர் நகர், வள்ளலார் நகர் பகுதிகளில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு பச்சையம்மன் நகரில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ரூ.6 லட்சம் செலவில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் அந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை 8 ரூபாய் கொடுத்து தனியாரிடம் வாங்கி வருகின்றனர்.

Different_portam30இந்தநிலையில் நேற்று ஆவடி நகராட்சி கூட்டம் நடந்தது. முன்னதாக 8-வது வார்டு புரட்சி பாரதம் கட்சி கவுன்சிலர் முல்லை பலராமன், ஆவடி நகராட்சி அலுவலக வாசலில் பாயை விரித்து அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் பாயில் படுத்துக்கொண்டார்.

அவரது கையில், “ஆவடி பெரு நகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கர் நகருக்கு குடிநீர் கொடுக்காத அதிகாரிகளை கண்டித்து போராட்டம்” என்ற வாசகம் எழுதிய பதாகையை வைத்து இருந்தார்.

நகராட்சி தலைவர் (பொறுப்பு) கலை மா.சேகர், ஆணையாளர் மதிவாணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அந்த பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று கவுன்சிலர் முல்லை பலராமன் போராட்டத்தை கைவிட்டார்.

அதன்பிறகு நகராட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்ற 7-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முல்லை தயாளன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு இருக்கையில் இருந்து எழுந்து நகராட்சி தலைவர் (பொறுப்பு), ஆணையாளர் இருக்கைக்கு முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்களே போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைதயாளனை சமரசம் செய்தனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தார். இதனால் நகராட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Share This Post

Post Comment