ஜெயலலிதா கேட்டுக்கொண்டால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்- சசிகலா புஷ்பா

ekuruvi-aiya8-X3

sasikala_puspaதூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை அடுத்த அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் வெங்கடேஷ் பண்ணையாரின் 13-வது ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவழிபாடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து சசிகலா புஷ்பா எம்.பி. விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு சென்றார்.

விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடார் சமுதாயத்தினருக்கு என்று இருந்த ஒரே மாநகராட்சியான தூத்துக்குடி மாநகராட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு நாடார் சமுதாயத்தினரின் வாக்கு வங்கி அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் இந்த மாநகராட்சியை தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது நாடார்களுக்கு மட்டும் அல்லாது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் செய்யும் துரோகம் ஆகும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து இருக்க வேண்டும். நாடார் தொகுதி என்று இருந்த ஒரே மாநகராட்சியையும் மாற்றி இருப்பது மிகுந்த வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியது. இதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதனை முன்னாள் மேயர் என்ற முறையிலும், நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற முறையிலும் எடுப்பேன் என்று அவர் கூறினார்.

பின்னர் அவர் ஆறுமுகநேரி அருகே உள்ள அம்மன்புரத்திற்கு சென்று வெங்கடேச பண்ணையாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. அவர் என்னை விட வயதில் மூத்தவர். அவர் விரைவில் குணம் அடைய வேண்டும். அவர் நேரில் என்னிடம் கேட்டுக்கொண்டால் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயத்தை பற்றி அவதூறாக உள்ளது. இதனை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் முறையிடுவேன்.என்றும் அவர் கூறினார்.

Share This Post

Post Comment