ஓசூர் அருகே பஸ் மீது லாரி மோதியதில் 7 பேர் பலி

Osur_257கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று மதியம் 1.45 மணிக்கு ஒரு தனியார் பஸ் ஓசூர் நோக்கி புறப்பட்டது. பஸ்சை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சவுந்தர் என்பவர் ஓட்டினார். 55 பயணிகளுடன் சென்ற அந்த பஸ் நேற்று மதியம் 2.15 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியை அடுத்த சுண்டகிரி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது 6 வழிச்சாலையில் எதிரே ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. திடீரென்று அந்த லாரி சாலையின் மறுதிசைக்கு செல்வதற்காக வேகமாக திரும்பியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரியும், தனியார் பஸ்சும் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் லாரி மற்றும் பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் ‘அய்யோ, அம்மா’ என்று அலறினார்கள். பல பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள்.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஓசூரை சேர்ந்த உஷாநந்தினி (வயது 42), ராமையா நாயுடு உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து காயம் அடைந்த 29 பேரையும் மீட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சுகளில், காயம் அடைந்த 29 பேரையும் ஏற்றி கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கோவிந்தன் (39) மற்றும் ஒரு பெண் என 2 பேர் இறந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இவர்களில் 2 பேர் பெண்கள்.

சூளகிரி போலீசார் விரைந்து சென்று பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பஸ், லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கன்டெய்னர் லாரி எந்தவித சிக்னலும் செய்யாமல் 6 வழிச்சாலையில் எதிர்திசையில் வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும் அந்த லாரியை கிளனர் ஓட்டி வந்ததாகவும், அதன் காரணமாக விபத்து நடந்ததாகவும் தெரிகிறது. சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான 4 பேரின் முகம் உள்பட உடலின் பெரும்பகுதி சிதைந்து விட்டதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Share This Post

Post Comment