காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் ஜனாதிபதியிடம் தி.மு.க. எம்.பி.க்கள் மனு

ekuruvi-aiya8-X3

kanimozhi_MPதி.மு.க. மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் நேற்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–

காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு 123 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டு இருக்க வேண்டும். ஆனால் 27.9.2016 அன்று நிலவரப்படி 52 டி.எம்.சி. தண்ணீர் தான் திறந்து விடப்பட்டுள்ளது. இது நடுவர் மன்ற உத்தரவான இடர்பாட்டு பங்கீட்டு விகிதசார அடிப்படையில் வரவில்லை.

இதனால் தமிழக விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் தற்கொலையும் செய்துள்ளனர். மத்திய அரசு உடனடியாக காவிரி நீர் வினியோக நடைமுறையை மேலாண்மை செய்யும் வகையில் ஒரு அமைப்பை அமைக்காவிட்டால் இந்த நிலைமை இன்னும் அதிகமாக நீடித்து தமிழக விவசாயிகள் இடையே தற்கொலை சந்திக்கும் நிலை வந்து விடும்.

எனவே தாங்கள் தலையிட்டு 1956–ல் சட்டத்தின்படி, நதிகளுக்கு இடையேயான தண்ணீர் தாவா சட்டத்தின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட்டு, தமிழக விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்த பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆலோசனைப்படி, ஜனாதிபதியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தினோம். அது மட்டுமல்ல, கர்நாடக அரசு நியாயமாக தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை தரவேண்டும், எனவே காவிரி விவகாரத்தில் தலையிட்டு அதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.

காவிரி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், அரசியல் ரீதியான அழுத்தங்கள் கொடுப்பதும் ஜனநாயக ரீதியிலான ஒன்றுதான். அதனால்தான் ஜனாதிபதி இதில் தலையிட்டு விவசாயிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.

மேலும், பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளோம். அதற்காக நேரம் கேட்டிருக்கிறோம். காவிரி பிரச்சினை பற்றி ஜனாதிபதிக்கு தெளிவாக தெரியும். எனவே, நிச்சயமாக இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி எங்களிடம் தெரிவித்தார். பாராளுமன்றத்திலும் நிச்சயமாக இந்த பிரச்சினையை நாங்கள் எழுப்பி பேசுவோம்.

தீர்ப்பாயம் வந்தபோது அது தேவையில்லாதது, கண்துடைப்பு என்று அ.தி.மு.க.வினர் கூறினர். அதனால்தான் இந்த பிரச்சினையே வர தொடங்கியது. இது விவசாயிகள் பிரச்சினை. இதை நாம் அரசியல் ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் மீதும் பழி போட வேண்டிய தேவை இல்லை.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

Share This Post

Post Comment